வருங்காலத்தில் நாம் நமது நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் காப்பதுடன் இந்துக்களது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியம். ஆங்கிலேயர் காலத்தில் நமது உண்மை வரலாறு மறைக்கப்பட்ட நிலையில், அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் கவனம் செலுத்தவேண்டும் என்று ஆர்எஸ்எஸ் வட தமிழக அமைப்புச் செயலர் சரவணன் குறிப்பிட்டார். ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் புதுச்சேரி அமைச்சர்கள், எம்பி ஆகியோரும் பங்கேற்றனர்.
புதுச்சேரி அருகே வீராம்பட்டினத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் புதுச்சேரி ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) சார்பில் அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் 200 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் சுவாமி விவேகானந்தர், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரின் தேசியச் சிந்தனைகள் நினைவூட்டல் விழா ஆகிய முப்பெரும் விழா வீராம்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு வீரம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயிலில் இருந்து ஆர்எஸ்எஸ் ஊர்வலம் புறப்பட்டது. மகளிர் ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி வழியனுப்பினர். காக்கி, வெள்ளை சீருடை அணிந்த ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கையில் தடியை ஏந்தியவாறு மேள, தாளம் முழங்க அணிவகுத்து வந்தனர்.
அணிவகுப்பில் புதுவை மாநில அமைச்சர்கள் ஆ.நமச்சிவாயம் (உள்துறை), சாய் ஜெ.சரவணன்குமார் (குடிமைப்பொருள்), பாஜக மாநிலத் தலைவர் சு.செல்வகணபதி எம்.பி. ஆகியோரும் பங்கேற்றனர். வீராம்பட்டினம் முக்கிய வீதிகளில் வந்த ஆர்எஸ்எஸ். பேரணி அரியாங்குப்பத்தில் நிறைவடைந்தது.
பேரணி நிறைவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தொழிலதிபர் நாயர் தலைமை வகித்தார். தொழிலதிபர் ஆர்.துளசிராம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் ஆர்எஸ்எஸ் வட தமிழக அமைப்புச் செயலர் சரவணன் பேசியதாவது:
விவேகானந்தர் கன்னியாகுமரி பாறையில் தவமிருந்தபோது சிந்தித்தவற்றில் நம் நாடு உலகிற்கு தலைமை வகிக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும். சுவாமி விவேகானந்தரின் கனவை நனவாக்கும் வகையில்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. அவர் நாட்டின் மேம்பாட்டுக்காக நூறு இளைஞர்களைக்
கேட்டார். ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பானது லட்சக்கணக்கான தேசப்பற்றாளர்களை உருவாக்கி வருகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பு நல்ல மனிதர்களை தொடர்ந்து உருவாக்கி வருகிறது.
வருங்காலத்தில் நாம் நமது நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் காப்பதுடன் இந்துக்களது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியம். ஆங்கிலேயர் காலத்தில் நமது உண்மை வரலாறு மறைக்கப்பட்ட நிலையில், அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
சுற்றுச்சூழலை பாதுகாப்பது, போதையிலிருந்து இளைஞர்களை காப்பது, தமிழில் கையெழுத்திட்டு மொழியை காப்பது என அனைத்து சமூக நலனிலும் அக்கறையுடன் செயல்படுவது அவசியம் என்று குறிப்பிட்டார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆர்எஸ்எஸ் புதுச்சேரி மாவட்டத் தலைவர் ஸ்ரீனிவாசன், கோட்டத்தலைவர் செல்வராஜ் ஆகியோர் செய்திருந்தனர். பொதுக்கூட்டத்தின்போது பேரவைத்தலைவர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.