நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் அங்கீகரிக்கப்பட்ட 2023 டிசம்பர் 24 அன்றே ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்ட ‘பாரத தொலைத் தொடர்பு சட்டம், 2023’ இப்பொழுது, 2024 ஜூன் 26 முதல் நடைமுறைக்கும் வந்து விட்டது. இந்தப் புதிய சட்டத்தின் சில சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம்.
“சமாவேஷ் (சேர்த்தல்), சுரக்ஷா (பாதுகாப்பு), விருத்தி (வளர்ச்சி), த்வரித் (பதிலளிப்பு) ஆகிய கொள்கைகளால் வழிநடத்தப்படும் இந்தச் சட்டம் விகசித பாரத் (வளர்ச்சியடைந்த இந்தியா) பார்வையை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்கிறது பாரத தகவல் தொடர்பு அமைச்சகம்.
இந்தப் புதிய சட்டத்தின் படி மத்திய அரசு, எந்த ஒரு தொலை தொடர்பு சேவையையும், சில குறிப்பிட்ட காரணங்களுக்காக அரசுடைமை ஆக்கிக் கொள்ளலாம். கண்காணிப்புக்கான சில அதிகாரங்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்கள் இதில் விதிவிலக்கு என்று ஒரு புறம் குறிப்பிட்டிருந்தாலும், இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடியவை அல்லது அது போன்றவை என்று சொல்லத்தக்க சில குறிப்பிட்ட காரணங்களுக்காக அங்கீகரிக்கப் பட்ட ஊடகத் துறை சம்பந்தப்பட்ட தொடர்புகள் கூட கண்காணிக்கப் படலாம்.
தொலைத்தொடர்பு என்பது வெகுஜனங்களை மேம்படுத்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவி. இருப்பினும், பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இது தவறாகப் பயன்படுத்தப்படலாம். கோரப்படாத வணிகத் தகவல் தொடர்பில் இருந்து பயனர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளைச் சட்டம் வழங்குகிறது. பயனர்களின் சம்மதம் இல்லாமல், வணிக ரீதியான தகவல் அனுப்பப் படின், அந்த நிறுவனங்களுக்கு, இரண்டு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் அதிகாரம் உள்ளது.
டெலிகாம் டவர் (தொலைத் தொடர்பு கோபுரங்கள்) வைப்பது தொடர்பான கூடுதல் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி, அரசாங்கம், சில குறிப்பிட்ட காரணங்களுக்காக (பொதுவான அவசர நிலை, பொது நலன், குற்றங்களை ஊக்குவிப்பதை தடுப்பதற்காக தேசத்தின் இறையாண்மை, வெளியுறவுக் கொள்கைகளின் நடைமுறை போன்றவை இதில் அடங்கும்), எந்த ஒரு தனியார் சொத்துகளின் இடையிலோ அதாவது, தனியார் நிலத்திலும் கூட, ஒரு தொலை தொடர்பு கோபுரம் அமைக்கலாம். தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு அது நிறுவப்பட்டுள்ள சொத்துக்களிலிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்பதையும் இது வழங்குகிறது. இது சொத்து விற்கப்படும்
போது அல்லது குத்தகைக்கு விடப்படும்போது ஏற்படும் சர்ச்சைகளைக் குறைக்க உதவும்.
எந்த ஒரு தகவல் தொடர்பையும் ஊடுறவு செய்ய, அல்லது, கண்காணிக்க அல்லது தடை செய்யவும் சில குறிப்பிட்ட நடைமுறைக்கு உட்பட்டு, அரசாங்கம் ஆணை பிறப்பிக்கலாம்.
ஒரு நல்ல அரசுக்கு நியாயமான அதிகாரங்கள் தேவை என்பது ஒருபுறம் இருப்பினும், இது போன்ற அதிகாரம் மிகவும் அளவுக்கதிகமாக இருக்குமோ என்றும் துஷ்பிரயோகம் செய்யப் படுமோ என்றும் குறிப்பாக இது போன்ற ஷரத்துகள் பற்றி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் வருமோ என்றும் மறுபுறம் யோசிக்க வேண்டியிருக்கிறது,
எப்படியும், ஒரு 1885 ஆண்டுக்கான சட்டத்தை நீக்கி, அதன் இடத்தில் ஒரு புதிய சட்டம் வர வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கை நிறைவேறியிருக்கிறது. வரவேற்போம்
கட்டுரையாளர்: கம்ப்யூட்டர் குற்றவியல் வழக்கறிஞர், சென்னை; பொதுத் துறை வங்கியின் கணினி துறை முன்னாள் உயர் அதிகாரி.