புதிய கல்விக் கொள்கை அமலாகும்

ஆய்வுப் பணிகளுக்காக காரைக்கால் சென்றிருந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை நிச்சயம் அமல்படுத்தப்படும். மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூலம் காரைக்காலில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். காரைக்காலில் விமான நிலையம் அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தியையும் குலக்கல்வியையும் திணிப்பதாக கூறப்படுவது தவறானது. எல்லாவற்றையும் அரசியலாக்க வேண்டாம். புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டால், வட இந்தியர்களின் ஆதிக்கம் வந்துவிடும் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறியுள்ளது தவறான கருத்து. தனி கல்வி வாரியம் இல்லாத நிலையில், ஒட்டுமொத்த புதுச்சேரியிலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தைக் கொண்டு வரும்போது, அது மக்களுக்கும் மாணவர்களுக்கும் பயனளிக்கும்” என கூறினார்.