பி.எப்.ஐ வன்முறை

கொல்லம் மாவட்டம் சாஸ்தம்கோட்டா அருகே உள்ள சங்குப்பிள்ளை நினைவு தேவசம் போர்டு கல்லூரியில் (கே.எஸ்.எம். டி.பி ) மாவேலிக்கரா தேசிய மாணவர் படையின் 8வது கேரள பட்டாலியன் முகாம் டிசம்பர் 26 முதல் ஜனவரி 1 வரை நடைபெற்றது. இறுதி நாளில் நடத்தப்பட்ட இளம் பெண் மாணவிகளின் அணிவகுப்பில், அவர்கள், ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என்ற கோஷமிட்டுக் கொண்டே அணிவகுத்துச் சென்றனர். ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என்பது ஐயப்ப பக்தர்களின் புனித கோஷம் மட்டுமல்ல அது நமது பாரத ராணுவத்தின் புகழ்பெற்ற ‘பிரம்மோஸ்’ ஏவுகணைப் படைப்பிரிவின் போர் முழக்கமாகவும் உள்ளது. இந்நிலையில், இந்த கோஷத்தின் பின்னணி குறித்து ஏதும் தெரியாத, வன்முறையை மட்டுமே அறிந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) என்ற பயங்கரவாத ஆதரவு அமைப்பின், மாணவர் பிரிவான கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா (சி.எப்.ஐ) அமைப்பினர் இதனை எதிர்த்து வன்முறை போராட்டம் நடத்தினர். ஆத்திரமூட்டும் கோஷங்களை எழுப்பியபடி, சுமார் 100 பேர் கொண்ட இந்த வன்முறை கும்பல், சங்குப்பிள்ளை நினைவு தேவசம் போர்டு கல்லூரிக்குள் நுழைய முயன்றனர். உள்ளூர் காவலர்கள் அவர்களைத் தடுக்க முயன்றபோதும் சி.எப்.ஐ வெறியர்கள் அங்கு பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.