பிரதமர் மோடி படம் இருப்பதால் 245 கால்நடை ஆம்புலன்ஸ் முடக்கம்

பிரதமர் மோடியின் புகைப்படம் ஒட்டப்பட்டு இருப்பதால், மத்திய அரசு நிதியில் வழங்கப்பட்ட, 245 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை பயன்படுத்தாமல், தமிழக அரசு முடக்கி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் கால்நடைகளுக்கு திடீரென ஏற்படும் தொற்று நோய் பரவலை தடுக்க 2015 – 16ம் நிதி ஆண்டில் நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் திட்டத்தை, தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, 32 வாகனங்கள் வழங்கப்பட்டன. இதில், சில வாகனங்கள் மட்டுமே பெயரளவுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், ஒரு லட்சம் கால்நடைகளுக்கு ஒன்று என்ற அடிப்படையில், நாடு முழுதும் நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அரசு, தனியார் பங்கேற்பு அடிப்படையில், இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, தமிழகத்திற்கு 245 வாகனங்கள், 39 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட்டன. ‘டெண்டர்’ பணிகள் முடிந்து வாகனங்கள் தயாராகி விட்ட நிலையில், தமிழக அரசு அதை பெறாமல் தாமதம் செய்து வருவதாக, புகார் எழுந்துள்ளது. கால்நடைகள் பாதுகாப்பு, தொற்று நோய் தடுப்பு திட்டத்தில், தமிழகத்துக்கு, 245 மருத்துவ வாகனங்களை, மத்திய அரசு வழங்கியது. இந்த வாகனங்களை பயன்படுத்த, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த வாகனங்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இருப்பதால், அதை பயன்படுத்த, தமிழக அரசின் கால்நடை துறை தயங்குவதாக கூறப்படுகிறது. இதனால், இந்த வாகனங்கள் ஓராண்டாக, சென்னையை அடுத்த பூந்தமல்லி இருளப்பாளையத்தில் முடங்கியுள்ளன. இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிக்கு டெண்டர் கோரப்பட உள்ளதாகவும், மூன்று மாதங்களில் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும் எனவும் தமிழக கால்நடை துறை தெரிவித்தது.

அந்த அவகாசம் முடிந்தும், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று தெரியவில்லை. மேடைக்கு மேடை மத்திய அரசை குறை சொல்லும் தமிழக ஆட்சியாளர்கள், இதில் அலட்சியம் காட்டுவது, பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.