முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பேரனும், முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங்கின் மகனுமான ஜெயந்த் சவுத்ரி, ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியின் தலைவராக உள்ளார். இந்த கட்சி, ‘இண்டியா’ கூட்டணியில் அங்கம் வகித்து வந்தது.
உத்தர பிரதேசத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இந்த கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் களமிறங்க திட்டமிட்டிருந்த ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சிக்கு, ஏழு தொகுதிகள் ஒதுக்குவதாக சமீபத்தில் சமாஜ்வாதி அறிவித்துஇருந்தது. இந்நிலையில் ஜெயந்த் சவுத்ரி நேற்று பா.ஜ., தலைவர் நட்டாவை ரகசிய இடத்தில் சந்தித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இண்டியா கூட்டணிக்கு முழுக்கு போடவும், பா.ஜ., கூட்டணியில் இணையவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உ.பி.,யில் கடந்த 2022 சட்டசபை தேர்தலில் இந்த கட்சி, 33 தொகுதிகளில் போட்டியிட்டு, ஒன்பதில் வென்றது. ஜெயந்த் சவுத்ரி, தற்போது ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார்.