பாராளுமன்ற தேர்தல் – தமிழகத்தில் செய்ததும் – செய்ய தவறியதும்

2019-ல் நடைபெற்ற 17வது  பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில், பல்வேறு கற்பனையில் முழ்கியிருந்த எதிர் கட்சிகள், தற்போது என்ன செய்வது என தெரியாமல் முழிக்கின்றன.   வாக்கு நடைபெறுவதற்கு முன்,  எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கின்ற செயல்களில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட காங்கிரஸ், தெலுங்கு தேச கட்சி,  மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, மாயவாதியின் பகுஜன் சமாஸ்வாதி, போன்ற கட்சிகள் முயன்றும் கூட ஒருங்கிணைக்க இயலவில்லை.   350க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி வாகை சூடி,  300 க்கு மேற்பட்ட இடங்களில் தனி கட்சியாக  விஸ்வரூபம் எடுத்த பா.ஜ.க. தமிழகம் மற்றும் கேரளத்தில் மட்டுமே பெரிய அடி வாங்கியுள்ளது.  குறிப்பாக தமிழகத்தில், மோடி எதிர்ப்பு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியிலிருந்து துவங்கியது.  இதற்கு பின்னணியில் அந்நிய சக்திகள் விளையாடினாலும், அதற்கு தகுந்தாற் போல் நாம் தடுப்பு பிரச்சாரத்தை முறையாக செய்யவில்லை என்ற எண்ணம் எழுகின்றது.  இது நமது சுய பரிசோதனையாகும்.

          ஐந்தாண்டு காலங்களில் மத்தியில் ஆட்சியிலிருந்து தமிழகத்திற்கு வழங்கிய நிதி உதவிகள், நலத் திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் திட்டங்களை கூறினாலும், பெருவாரியான கிராம புற மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை என்பது நிதர்சனமான உண்மையாகும்.  பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திலும், முத்தரா கடன் உதவி திட்டதிலும் பலன் அடைந்தவர்கள் மாநில அரசின் நிதி என நினைத்தார்கள்,  மத்திய அரசின் திட்டம்தான் என்பதை மக்களுக்கு புரிய வைக்க இயலவில்லை.     இதற்கு முதன்மையான காரணம்,  ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் கூட்டணியாக வைத்துக் கொண்டு, தங்களின்  அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்திக் கொண்டார்கள்.   ஆனால் பிரதமர் மோடியின் மீது தி.மு.க. கம்யூனிஸ்ட்கள், பிரிவினைவாத சக்திகள் நடத்திய தொடர் எதிரப்பு பிரச்சாரத்தை முறியடிக்கும் விதமாக, பா.ஜ.க. தரப்பிலும் எதிர் பிரச்சாரம் நடைபெறவில்லை.   இந்த குற்றச்சாட்டு ஆழமாக பதிய விட்டதில், தமிழக ஊடகங்களுக்கும் மிக முக்கியமான பொறுப்பு உள்ளது.

          தி.மு.க. கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ் கட்சியினர் மோடியின் மீதும், ஆர்.எஸ்.எஸ். மீதும் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு முறையான, ஆதாரங்களுடன் மக்களின் பார்வைக்கு கொண்டு செல்லவில்லை என்பதை தெளிவாக தெரிவிக்கலாம்.  நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன், கெயில், தூத்துக்குடி ஸ்டரலைட் ஆலை பிரச்சனை போன்ற திட்டங்களுக்கு தி.மு.க. ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டது என்பதை மறைத்து, பா.ஜ.க. ஆட்சியின் மீது பழியை போட்டார்கள்.   கூட்டணியில் பிரதான கட்சியான அ.இ.அ.தி.மு.க. மறுத்து பேச முயலவில்லை.   குறிப்பாக எட்டு வழிச் சாலை திட்டத்தில், மாநில அரசே, இது மத்திய அரசின் திட்டம், இதில் மாநில அரசு என்ன செய்ய இயலும் என மத்திய அரசின் மீது திசையை திருப்பி விட்டார்கள்.    பாராளுமன்ற தேர்தலுடன், 22 தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் அறிவிக்கப்பட்டதால்,  அ.இ.அ.தி.மு.க. சட்ட மன்ற தேர்தலில் அதிக கவனம் செலுத்தினார்கள்.  இது தங்களின் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முயன்றதின் காரணமாக,  மததிய அரசின் மீது நடத்திய தாக்குதலை தடுக்க முன் வரவில்லை.

          ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுத்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர் என்பது தெரிந்தும், தமிழக ஊடகங்கள் பா.ஜ.க.வின் மீது மட்டுமே பழியை சுமத்தினார்கள்.   கடந்த ஒரு வருட காலமாக, தமிழக ஊடகங்களில் , மோடி எதிர்ப்பு பிரச்சாரம் அதிக அளவில் நடந்தது.   அரசு ஊழியர்கள் மோடிக்கு எதிராகவும் பிரச்சாரத்தை கையிலெடுத்தார்கள்.  பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வர வேண்டும்  என்ற கோரிக்கை,  10 வருடங்கள் ஆட்சியிலிருந்த தி.மு.க.  நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியை எவரும் கேட்கவில்லை.  விவாத மேடைகளில் கூட விளக்கமளிக்க முன் வரவில்லை.

          தமிழகத்தில் தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்தது.  தேசிய ஜனநாயக கூட்டணி என்பது பா.ஜ.க. தலைமையில் நாடு முழுவதும் கூட்டணி அமைந்தது,  ஆனால் தமிழகத்தில் மட்டும் அ.இ.அ.தி.மு.க. தலைமையில் அமைந்தது.  கடந்த மூன்று ஆண்டுகளாக ஊழலில் திளைத்த கட்சி என்ற எண்ணம் மக்களின் மனதில் ஆழமாக இருந்தது,  ஊழல் கட்சியுடன் கூட்டணி அமைத்து, ஊழல் இல்லாத ஆட்சியை அமைப்போம் என்பதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.   2018 ஏப்ரல் மாதம் 12ந் தேதி சென்னையில் நடந்த டிஃபன்ஸ் எக்ஸ்போ கண்காட்சியை துவக்கி வைக்க வந்த போது தொடங்கிய கோ பேக் மோடி என்ற ஹாஷ்டாக்கை முறியடிக்க நாம் 2019 தேர்தல் காலத்தில் தொடங்கினோம்.   எதிர்கட்சிகள் தொடங்கிய எதிரப்பு பிரச்சாரத்தை அவ்வப்போது முறியடிக்க நாம் முனையவில்லை.   காவிரி விவகாரத்தில் கூட, தி.மு.க. செய்த துரோகங்களை நாம் மக்கள் முன் எடுத்து வைக்கவில்லை.  அ.இ.அ.தி.மு.க. கூட நம் மீது தான் பழியை போட்டார்களே தவிர தி.மு.க. மீது முழுமையான குற்றச்சாட்டை வைக்கவில்லை.   கா்நாடக காங்கிரஸ் அரசு செய்த துரோகத்தை நாம் கண்டு கொள்ளவில்லை.  தமிழக பா.ஜ.க.வினருக்கு இரண்டு முக்கியமான சம்பவங்கள் உருவாகின, ஒன்று வைரமுத்துவின் ஆண்டாள் பற்றிய விமர்சனம், இரண்டாவது சபரிமலை விவகாரம்.   இந்த இரண்டிலும் பா.ஜ.க. தங்களது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்து ஆர்பாட்டங்கள்  மற்றும் போராட்டங்களை நடத்தவில்லை.  இந்துக்கள் மத்தியில் பா.ஜ.க.வின் செயல்பாடுகள் கேள்வி குறியாகவே காட்சியளித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *