பாரதத் தூதரகம் மீது தக்குதல்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பாரத தேசத்தினர், ஹிந்துக்கள், ஹிந்து கோயில்கள் மீது காலிஸ்தானி பிரிவினைவாதிகளால் நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அவ்வகையில், பிப்ரவரி 21ம் தேதி இரவு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனின் டாரிங்கா புறநகரின் ஸ்வான் சாலையில் உள்ள பாரத துணைத் தூதரகத்தை காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்கியதாக தி ஆஸ்திரேலியா டுடே தெரிவித்துள்ளது. “இதுவரை, ஆஸ்திரேலியாவில் உள்ள பாரதத்தினர் மற்றும் பாரத வம்சாவளிய ஆஸ்திரேலியர்கள் மற்றும் ஹிந்து கோயில்கள் மீது தான் தாக்குதல்கள் நடந்துள்ளது. ஆனால், இப்போது, பாரத அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் காலிஸ்தானிகளின் இலக்காகி உள்ளது. பிரிஸ்பேனில் உள்ள பாரதத் தூதரகம் கலிஸ்தானியர்களால் தாக்கப்படுவது என்பது, பாரத அரசின் மீதான நேரடித் தாக்குதல்” என தி ஆஸ்திரேலியா டுடேயின் ஆசிரியர் ஜே பரத்வாஜ் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசும்போது கூறினார். பிரிஸ்பேனில் உள்ள பாரதத்தின் தூதரக அதிகாரி அர்ச்சனா சிங் பிப்ரவரி 22 அன்று அலுவலகத்திற்கு வந்தபோது அங்கு காலிஸ்தான் கொடிகள் கட்டப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக குயின்ஸ்லாந்து காவல்துறைக்கு இதுகுறித்து புகார் அளித்தார். உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர், கொடியைப் பறிமுதல் செய்தனர். மேலும் தூதரக ஊழியர்களுக்கும் தூதரக அலுவலகத்துக்கும் இதனால் உடனடி அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதி செய்தனர்.

அர்ச்சனா சிங், தி ஆஸ்திரேலியா டுடேவிடம் பேசுகையில், “ஆஸ்திரேலிய காவல்துறையின் மீது எங்களுக்கு வலுவான நம்பிக்கை இருக்கிறது. தூதரகத்தை பாதுகாப்பாக வைத்திருக்க அவர்கள் அந்தப் பகுதியைக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளனர். மெல்போர்னில் நடந்தது மீண்டும் நிகழாமல் இருக்க ஒட்டுமொத்த பாரத ஆஸ்திரேலிய சமூகமும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறது” என கூறினார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் வி முரளீதரன் ஆகியோரின் சமீபத்திய சிட்னி மற்றும் மெல்போர்ன் விஜயம் அமெரிக்கா மற்றும் கனடாவை தளமாகக் கொண்ட காலிஸ்தானி பிரச்சாரகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளதக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அதே நாளில், காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மஹாசிவராத்திரி விழாக்களை ஹிந்துக்கள் கொண்டாடும் போது இரண்டு கோயில்களை சேதப்படுத்தினர். ஆஸ்திரேலிய பாதுகாப்பு ஏஜென்சிகள் மற்றும் அந்தந்த மாநில காவல்துறை அதிகாரிகளின் செயலற்ற தன்மையால் உற்சாகமடைந்துள்ள இந்த காலிஸ்தான் பிரிவினைவாதிகள், சமீபத்தில் சிட்னி முருகன் கோயிலின் நிர்வாகிகளானஏ. பூபாலசிங்கம் மற்றும் டி. சின்னராஜா ஆகியோரை தொலைபேசியில் அழைத்து, காலிஸ்தான் கோஷங்களை எழுப்புங்கள் அல்லது விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.