பாம்பன் சுவாமிகள் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த உன்னத துறவியாவார். முருகன் பால் அன்பு பூண்டு கவிகள் பல பாடி கனவிலும், நனவிலும் ஆறுமுகப் பெருமானை தரிசித்தவர். சுவாமிகளின் தமிழ் ஞானம் அளவிடற்கரியது. சென்னை, தம்பு செட்டி தெரு வழியாக சுவாமிகள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு குதிரை வண்டியின் சக்கரம் அவரது இடது கணைக்காலின் மீது ஏற, கால் முறிவடைந்தது. சென்னை பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தலைமை மருத்துவரான ஒரு ஆங்கிலேயர், சுவாமிகளின் கால் குணமாகாது என்று கூறினார். அது கேட்ட அன்பர்கள் மிகவும் வருந்தினர். அங்கு, பதினோராவது நாள் இரவு சுவாமிகள், படுக்கையில் படுத்த வண்ணம் முருகனை வேண்டினார். அப்போது முருகனின் வாகனமாகிய மயில்கள் வானத்தில் நடனம் புரிவதைக் கண்டார். முருகன் மயில்கள் மீது அமர்ந்து வரும் மயூரவாகனக் காட்சியையும் கண்டார். மறுநாள் இரவு அவரருகில் முருகன் குழந்தை உருவில் படுத்திருப்பதை கண்டார். ‘முருகா’ என்று வணங்கினார். முருகன் அங்கிருந்து மறைந்தான், காலும் சரியானது. அந்த ஆங்கில மருத்துவர் இது இறைவனின் செயல் என்பதை அறிந்து சுவாமிகளை வணங்கினார்.