பாகிஸ்தான் வேடிக்கை காட்டுகிறது

ஐ.நா. சபையில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப், “பாகிஸ்தான் அரசு பாரதம் உள்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியை விரும்புகிறது. ஆனால் பாரதத்துடனான சுமுகமான உறவு அது காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தும் வரை சாத்தியப்படாது” என்று தெரிவித்திருந்தார். இது குறித்து ஐ.நா.வில் உரையாற்றிய பாரதப் பிரதிநிதி மிஜிடோ வினிடோ, “காஷ்மீர் பிரச்சினை தொடர்பான பாகிஸ்தான் பிரதமரின் பேச்சு தவறு, உண்மைக்குப் புறம்பானது. பாகிஸ்தான் தான் காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுகிறது. இந்த அவையை பாரதத்துக்கு எதிரான போலிக் குற்றச்சாட்டுகளை முன்வைக்க பாகிஸ்தான் பிரதமர் தேர்வு செய்துள்ளது துரதிர்ஷ்டவசமானது. உள்நாட்டில் நிலவும் குழப்பங்களை திசைத்திருப்ப அவர் இப்படி செய்கிறார். அமைதியை விரும்பும் தேசம் எதற்காக மும்பை தாக்குதலுக்கு துணை போன தாவூத் இப்ரஹிமுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும்? அண்டை நாடுகளுடன் அமைதியை விரும்பும் எந்த நாடும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிக்கக் கூடாது. பாகிஸ்தானில் சமீப காலமாக ஹிந்து, சீக்கிய, கிறிஸ்தவப் பெண்கள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம், திருமணத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். சொந்த நாட்டிலேயே சிறுபான்மையினர் உரிமையைப் பேணத் தெரியாதவர்கள், சர்வதேச அரங்கில் சிறுபான்மையினர் உரிமையைப் பற்றி பேசுவது வேடிக்கை. பாரத துணைக் கண்டத்தில் அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற எங்களின் இலக்கு உண்மையானது. அது பரவலாக அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளப்பட்டது. ஆனால் அது நிறைவேற எல்லை தாண்டிய பயங்கரவாதம் முடிவுக்கு வர வேண்டும்” என்றார்.