பரவசத்தில் ஆழ்த்திய பரமபூஜன்ய ஸ்ரீ குருஜி கோல்வல்கர்

பரமபூஜனீய ஸ்ரீ மாதவ சதாசிவ கோல்வல்கரின் மூன்று சொற்பொழிவுகளை 1965க்கும் 1970க்கும் இடைப்பட்ட காலத்தில் கேட்டேன். அந்த சமயம் நான் தஞ்சையிலும் திருச்சியிலும் படித்துக்கொண்டிருந்தேன். திருச்சி தேவர் ஹால், கும்பகோணம் மூர்த்தி கலையரங்கம், தஞ்சை ராமநாதன் செட்டியார் ஹாலில் அந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவற்றில் ஒரு கல்லூரி மாணவனாக கலந்துகொண்டேன்.

அந்த மூன்று நிகழ்ச்சிகளிலும் ஸ்ரீகுருஜி என்னைக் கவர்ந்தார், ஆட்கொண்டார். அவரது தோற்றத்தில் ஒரு புனிதமும் அமைதியும் கம்பீரமும் தென்பட்டது. பூரண நிலவுபோன்ற முகம், சந்தனக்கலரில் முழுநீள உடையாகிய ஜிப்பா, வெள்ளைநிறத்தில் பஞ்சகச்ச வேஷ்டி, ஒல்லியான, உயர்ந்த வடிவம்.

அவரது உரை ஹிந்தி மொழியில் இருந்தது. ஒரு நிகழ்ச்சியில் ஆங்கிலத்திலும் பேசினார். அவைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. ராம.கோபாலன் தமிழாக்கம் செய்தார். நமது நாட்டின் பெருமையையும் பண்பாட்டின் சிறப்பையும் தேவையான ஒற்றுமையையும் வலியுறுத்திப் பேசினார். நம்முடைய ஹிந்து சமுதாயம் சுயமறதியில் ஆழ்ந்துள்ளது. சுயமறதியின் காரணமாகத்தான் இந்தப் பெரிய சமுதாயம் உடைந்துள்ளது. இந்த சுயமறதியை அகற்றவேண்டும். இது என்னுடைய தாய்நாடு, முழு சமுதாயமும் என்னுடையது. இந்த நாட்டின் ஒவ்வொரு அங்குல பூமியும் புனிதமானது. அனைவரும் எனது ரத்த சகோதரர்கள். வேறுபாடுகளை எல்லாம் களைந்தெறிய வேண்டும். நாடெங்கிலும் அன்புணர்ச்சி அலையை பரப்ப வேண்டும். கட்டுக்கோப்பை ஏற்படுத்த வேண்டும். நமது பணியின் மூலமாக முழு சமுதாயத்தையும் இணைக்க வேண்டும் என்று பேசினார்.

ஸ்ரீகுருஜி அவர்களது கருத்து முழுமையும் தினசரி நம்மை நாம் பண்படுத்திக் கொள்ள
வேண்டும் என்பதைச் சார்ந்தே இருந்தது. தலைசிறந்த முறையில் சங்கத்தின் கிளைகளாகிய ஷாகாக்
களை தினசரி நடத்தவேண்டும். நாள்தோறும் தவறாமல் ஷாகாக்களில் மனப்பூர்வமாக முழுகவனத்
துடன் ஈடுபடவேண்டும். எல்லோருக்கும் கட்டுப்பாடு அவசியம். அனைத்து ஸ்வயம்சேவகர்களிடை
யேயும் பரஸ்பரம் அன்பும் நட்புணர்வும் தூய்மையான சூழ்நிலையும் நிலவவேண்டும். தினந்தோறும் நமது சங்க பிரார்த்தனையைப் பாடவேண்டும். முழு சிரத்தையுடனும் பொருள் உணர்ந்தும் பாடவேண்டும். பரம பவித்திரமான காவிக்கொடியை பணிவுடன் வணங்கவேண்டும்.  நமது பணி துவேஷத்தின் அடிப்படையில் அமைந்தது அல்ல, அன்பு தான் அதன் அடிப்படை என்றார்.

பரமபூஜனீய ஸ்ரீகுருஜி தங்கியிருந்த இல்லத்தில், கல்லூரி மாணவர்களாகிய எங்களை தனியாக சந்தித்தார். சங்கத்தைப் பற்றிய சந்தேகங்களை கேட்டுத்தெரிந்து கொள்ளலாம் என்றார்கள். நான் ஒரு கேள்வி கேட்டேன். அதுவே முதல் கேள்வி. “ஐயா! ஒவ்வொருவருக்கும் தாய்
மொழி மிகவும் முக்கியமானது. தமிழ்மொழி எங்களுக்குத் தாய்மொழி. அது இலக்கிய, இலக்கண வளம் மிக்கது. அதற்கு சங்கத்தின் நிலை என்ன? வெளித்தோற்றத்தில், ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்ககளில் சமஸ்கிருத சொற்களும், பேச்சுக்கள் பெரும்பாலும் ஹிந்தியில் நடைபெறுகிறதே? தமிழின் நிலை என்ன?” என்று பணிவுடன் கேட்டேன்.

உடனே, அவர் வாய்விட்டு, `ஹோ! ஹோ!’ என்று சிரித்தார். அவர் முகத்தில் வழிந்த வெள்ளை போன்ற தாடியை தடவிக் கொண்டே பேசினார். “நீங்கள் கூறியது சரிதான். தாய்மொழியை போற்றிவளர்க்க வேண்டும். “நமது சங்கம் தாய்நாட்டை, மொழியை, பண்பாட்டை, கலாச்சாரத்தை பாதுகாத்து வளர்க்க விரும்புகிறது. நமது தேசத்தின் அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள். அவற்றின் சிறப்புக்களைக் காணவேண்டும். அவற்றினை செழிக்கச் செய்து பெருமைகளைப் பாராட்டி மக்களை இணைப்பதே நமது பணி” என்றார்.

அவர் பேசியது எனக்குப் பிடித்தது. தமிழில் தேவாரமும், திருவாசகமும், திவ்ய பிரபந்தமும், திரு அருட்பாவும், திருப்புகழும், திருக்குறளும், அபிராமி அந்தாதியும் எவ்வளவு அற்புதமானவை. இந்த ஞான நூல்கள் நமது பண்பாட்டின் பெருமையை சங்கம் சொல்வதைப்போலவே, செய்யுள்ளாகப், பாடல்களாகச் சொல்கிறது. பரமபூஜனீய ஸ்ரீ குருஜியின் சொற்பொழிவுகள் மூலம் மேலும் ஒரு கருத்து என் மனதில் ஆழப்பதிந்தது. நமது லட்சியம் ஹிந்து சமுதாயத்திற்குள் சிறியதொரு இயக்கத்தை ஏற்படுத்துவது அல்ல, ஹிந்து சமுதாயம் முழுவதையும் ஒருங்கிணைப்பது தான் நமது லட்சியம். நம் கண்முன்னால் காஷ்மீரம் முதல் கன்யாகுமரி வரை முழு பாரத நாட்டின் வடிவம் இருக்க வேண்டும் என்ற பரந்த, விரிந்த பார்வையை ஏற்படுத்தினார்.

ஸ்ரீகுருஜி அவர்களது வாழ்க்கை எனக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. தனக்கென வீடு, வாசல் இல்லை. இகழுரையையும் புகழுரையையும் சமமாகக் கருதி, கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைந்து தன்னை முழுமையாக அர்ப்பணித்த அவரது வாழ்வு தேசிய சிந்தனையில் மூழ்கி, மக்களை நினைத்து, நினைத்து வாழ்நாள் முழுவதும் பாரத அன்னையின் திருவடிகளில் சமர்ப்பித்து வாழ்ந்த வாழ்க்கை என்னையும் ஈர்த்தது. எனக்குள்ளும் சங்கப்பணியில் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்ற வேட்கையை ஏற்படுத்தியது.