பரதன் பதில்கள்

சுவாமி  விவேகானந்தர்  போன்று  சிலர்  குடும்பத்தை உதறிவிட்டு துறவு மேற்கொண்டது சரியா?        

– எம். மோனிஷா, தருமபுரி 

நாட்டிற்காக ஒருவர் தனது குடும்பத்தை தியாகம் செய்வது ஒன்றும் தவறு இல்லை. அவர் நம்மைப் போன்று திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்று சராசரி மனிதன் போன்று குடும்பம் நடத்தியிருந்தால் உங்கள் கேள்விக்கே இடம் இருந்திருக்காது. இறைவனின் விருப்பம் எதுவோ அதுதான் நடைபெறுகிறது”

 

 

வெளியே  புறப்படும்போது  அபசகுனம்  தென்பட்டால்  என்ன  செய்வது?        

– வெ. மாரிமுத்து, திருநெல்வேலி

சிறிது நேரம் உட்காருங்கள். கொஞ்சம் தண்ணீர் குடியுங்கள். இஷ்ட தெய்வத்தை பிரார்த்தித்துப் புறப்படுங்கள். அவ்வளவுதான்.

 

 

‘பத்மாவதி’  என்ற  ஹிந்தி  சினிமாவிற்கு  எதிர்ப்பு  வலுத்து  வருகிறதே  ஏன்?      

– கே. தாட்சாயணி, சேலம்

சித்தூர் ராணி பத்மினி (பத்மாவதி) சிறந்த அழகி. அவளை அடைய முஸ்லிம் மன்னன் அலாவுதீன் கில்ஜி படையெடுத்துவந்தான். தங்களை கற்பைப் பாதுகாக்க பத்மாவதி உள்பட ஏராளமான பெண்கள் தீக்குளித்து மாண்டனர். இது சரித்திரம். வெளிவர உள்ள சினிமாவில் சரித்திரம் திரித்துக் காட்டப்பட்டுள்ளது என்பது குற்றச்சாட்டு.

 

 

வட்டித்  தொழிலை  இஸ்லாம்  கண்டிக்கிறதாமே?      

– சா. நந்தகோபால், திருத்தணி 

ஏழை எளிய மக்களைத் துன்புறுத்தும் வட்டி தொழில் கூடாது என்கிறார் நபிநாயகம். வட்டி வாங்குவதே தவறு என்கிறபோது கள்ளக்கடத்தல், ஹவாலா, வெடிகுண்டு இதெல்லாம்  நியாயமா என்று சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்தால் நல்லது.

 

 

‘கோயில்’  போன்று  எங்கள்  அம்மா  வாழ்ந்த  போயஸ்  தோட்டத்தை சோதனையிட்டது  தவறு  என்கிறார்களே?         

– எம். வரதராஜன், கன்யாகுமரி 

அன்று ‘ஜெ’ இருக்கும்போது காஞ்சி சங்கர மடத்திற்குள் சோதனை நடத்தினார்கள். மடத்தை சோதனையிட்டது கூட பரவாயில்லை. ஷூ காலோடு காவலர்கள் மடத்திற்குள் வந்ததைத்தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை என்று வருத்தப்பட்டாரே ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்! வினை யாரையும் விடாது.

 

 

குடும்பம்  சீராக நடைபெற மனைவியிடம் அடங்கி வாழ்வது அல்லது அடக்கி வாழ்வது எது நல்லது?         

– கு. ரங்கசாமி, தூத்துக்குடி 

இரண்டுமே ஆபத்தானது. ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து இணைந்தே செல்வதுதான் நல்லது.

 

 

ஐயப்பனும்  வாபரும்  நண்பர்கள்  என்கிறார்களே?

-கே. தயாளன், சென்னை   

மாலை அணிந்து, விரதமிருந்து, இருமுடி தாங்கி சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களே, வாபர் சமாதி செல்லாதீர்கள்! ஐயப்பனும் வாபரும் நண்பர்கள் என்பது  அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு!