ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்கிறார் புத்தர். ஒரு மனிதனுக்கு ஆசை இல்லாமல் இருந்தால் அவன் முன்னேறுவது எப்படி?
– மன்னை மாதவன், அம்பத்தூர்
ஆசைப்படுவது தவறில்லை. எப்போது அனுபவிப்பது? எப்போது ஆசையை விடுவது? என்ற விவேகம் மிக மிக முக்கியம். முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுவது நியாயமானது. அது தவறான வழிகளில் இருந்தால் ஆபத்தானது.
தியானம் செய்யும்போது சில நேரங்களில் தூங்கிவிடுகிறேன். தியானம் – தூக்கம் இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
– காயத்ரி சந்தானம், திருப்பூர்
தூக்கம் என்பது உடலின் ஐம்பொறிகளின் தற்காலிக ஓய்வு. தியானம் என்பது எண்ணங்களின் ஓய்வு.
எனக்கு உடலில் ஊனம் உள்ளது. நான் வாழ்வில் வெற்றி பெற முடியுமா?
– கே. அருண்குமார், தருமபுரி
எடிசன் சிறுவனாக இருக்கும்போது, ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததால், டிக்கெட் பரிசோதகர் ஆத்திரத்துடன் கன்னத்தில் அறைய அவரின் காது செவிடாகியது. பின்னர் அதுவே அவருக்கு வசதியாகப் போய்விட்டது. வெளியே என்ன சப்தம் வந்தாலும் அவரைப் பாதிக்கவில்லை. மின்சாரத்தை கண்டுபிடித்தாரே… நீங்களும் நம்பிக்கையுடன் முயற்சியுங்கள்.
ஹிந்து விழிப்புணர்வு என்பது சிரமமான காரியமா?
– கோ. கருப்பையா, தேவகோட்டை
ஒரு ஹிந்துவை, கிறிஸ்தவராக மதம் மாற்றுவது சுலபமானது. அதுபோல் ஒரு ஹிந்துவை முஸ்லிமாக மதம் மாற்றுவதும் சுலபம்தான். ஆனால், ஹிந்துவை ஹிந்துக்களாக ஆக்குவதுதான் சிரமமானது. நம்ம ஹிந்துக்களுக்கு தாங்களும் ஹிந்துக்கள் என்பது புரியவில்லையே!
புரோகிதர்கள் பூஜை செய்தபின் பதவியேற்ற நிர்மலா சீதாராமன் இந்திய ராணுவ அமைச்சரா? அல்லது ஹிந்து அமைச்சரா என்கிறாரே சுப. வீரபாண்டியன்?
– கனகா ராமன், காரைக்குடி
தி.க.வினர் எப்போதுமே கேள்வி கேட்பதற்கு அவர்கள் ஆசிரியர்களா? அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல நாம் மாணவர்களும் இல்லை. முஸ்லிம், கிறிஸ்தவர்களைப் பற்றி பேச யோக்கியதை இல்லாதவர்களுக்கு ஹிந்துத்வம் பற்றி பேச அருகதை கிடையாது.
தமிழகத்தில் வரிந்து கட்டிக் கொண்டு பா.ஜ.க.வை திருமா எதிர்ப்பது ஏன்?
– குரு ராகவன், தஞ்சாவூர்
திருமா மட்டுமா சீமான், வைகோ, மற்றும் லெட்டர்பேட் கட்சிகள் பல எதிர்க்கின்றன. இவர்களுக்கு ஒரு எம்.எல்.ஏ, ஒரு எம்.பி. கூட இல்லை. பா.ஜ.க. இன்று 18 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறது. மொத்த எம்.பி.க்கள் 337. மொத்த எம்.எல்.ஏக்கள் 1,400 பேர். காங்கிரசும் கம்யூனிஸ்ட்களும் சாதிக்க முடியாததை திருமா சாதிக்கப் போகிறாரா என்ன?
செக்ஸ் சாமியார்கள் பற்றி அன்றாடம் செய்திகள் வருகிறதே?
– இராம. வேலாயுதம், கடலூர்
சூடான ஐஸ்கிரீம் என்று ஒன்று இருக்க முடியாது. அவன் காமாந்தகாரனாக இருந்தால் சாமியாராக இருக்க முடியாது. உண்மை சாமியாராக இருந்தால் காமாந்தகாரனாக இருக்க முடியாது. அது சரி தினசரி பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பாதிரிகள் பற்றி செய்திகள் வருகின்றதே… ‘செக்ஸ் பாதிரி’ என்று ஊடகங்கள் சொல்லவில்லையே ஏன்?