பயங்கரவாதி உதவியாளர்கள் கைது

தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) டெல்லி இந்திரா காந்தி இன்டர்நேஷனல் விமான நிலையத்துக்கு பிலிப்பைன்ஸில் இருந்து வந்த கனடாவை சேர்ந்த காலிஸ்தான் புலிப்படையின் (கே.டி.எப்) பயங்கரவாதி அர்ஷ் டல்லா என்ற அர்ஷ்தீப் சிங் கில்லின் இரண்டு நெருங்கிய உதவியாளர்களை கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்கள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அம்ரிபால் சிங் என்ற அம்மி மற்றும் அம்ரிக் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பாரதத்தில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் சட்டவிரோத மற்றும் வன்முறை நடவடிக்கைகள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்குமே டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது. இருவரின் மீதும் பஞ்சாபில் பல கிரிமினல் வழக்குகள் மற்றும் உபா சட்டத்தின் படி பதிவு செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட பின்னர், இருவரும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மே 27 வரை என்.ஐ.ஏ காவலில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான காலிஸ்தான் டைகர் ஃபோர்ஸுக்கு நிதி திரட்டும் குற்றவியல் சதியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தேடப்படும் குற்றவாளியான மன்பிரீத் சிங் என்ற பீட்டாவுடன் சேர்ந்து நாட்டில் வன்முறை மற்றும் பயங்கரவாத செயல்களைச் செய்ய இளைஞர்களை நியமித்துள்ளனர். தொழிலதிபர்கள் போன்றவர்களை மிரட்டி பணம் பறிப்பதிலும் ஈடுபட்டனர் என என்.ஐ.ஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது. கனடாவைச் சேர்ந்த அர்ஷ் டல்லா இந்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி உள்துறை அமைச்சகத்தால் ஒரு பயங்கரவாதி’யாக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.