பயங்கரவாதியின் வீடு பறிமுதல்

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பழத்தோட்டத்தில் பணியாற்றிய காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த சுனில் குமார் பட் மற்றும் அவரது உறவினர் பிதம்பர் நாத் பட் ஆகியோர் மீது, அடில் வானி என்ற பயங்கரவாதி கடந்த 16ம் தேதி துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் சுனில் குமார் பட் இறந்தார். பிதாம்பர் நாத் பட் படுகாயம் அடைந்தார். அடில் வானி என்பவர் தடை செய்யப்பட்ட அல் பதர் என்ற பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர். தப்பியோடிய பயங்கரவாதி குட்போரா பகுதியில் உள்ள வீட்டில்  மறைந்திருந்தார். அந்த வீட்டை காவல்துறையினர் சுற்றிவளைத்தபோது அவர்கள் மீது கையெறி குண்டை வீசிவிட்டு அடில் வானி தப்பிச் சென்றார். இது குறித்து பேசிய காஷ்மீர் ஏ.டி.ஜி.பி விஜய்குமார், ‘‘அடில் வானியின் வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அடில் வானியும் அவரது கூட்டாளியும் கைது செய்யப்படுவார்கள் அல்லது சுட்டுக் கொல்லப்படுவார்கள். ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் தங்கியிருந்த 5 வீடுகள் கடந்த மாதம் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 10 வீடுகள் பறிமுதல் செய்யப்பட்டன” என்றார்.