பனை பொருட்கள் விற்பனை: களமிறங்குகிறது ஆவின்

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் பால் மட்டுமின்றி, இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம் உள்ளிட்ட, 230க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறது.

மாநிலம் முழுதும், 40 லட்சம் லிட்டராக இருந்த பால் விற்பனை தற்போது, 26 லட்சம் லிட்டராக குறைந்து விட்டது. இதனால், பால் பொருட்கள் உற்பத்தியும் குறைந்துள்ளது. இந்நிலையில், பனை பொருட்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், பனை வெல்லம், நாட்டு சர்க்கரை, பனங்கருப்பட்டி, சுக்கு காபி பவுடர், பனங்கருப்பட்டி சுக்கு மிட்டாய் மட்டுமின்றி, தேன் விற்பனையிலும் களமிறங்க, ஆவின் நிர்வாகம் தயாராகி வருகிறது.

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத ஆவின் ஏஜன்ட் ஒருவர் கூறியதாவது:

பனை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு, பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. எனவே, பனை பொருட்கள் விற்பனையில் இறங்கினால், பெரிய அளவில் விளம்பரம் கிடைக்கும்; அரசிடம் நல்ல பெயர் கிடைக்கும் என்று ஆவின் நிறுவனம் கருதுகிறது. பனை பொருட்கள் விற்பனையில், ஆவின் கவனம் செலுத்துவது நல்லது தான். அதே நேரம், அவை நிர்வாக நலன், விவசாயிகள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். பால் மற்றும் பால் பொருட்கள் தட்டுப்பாடு நிலவும் நிலையில், பிரச்னையை திசை திருப்பும் முயற்சியாக அமைந்து விடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.