படிப்பு முடிந்தது, பணி தொடங்கியது ஆயுள் முடிந்தது, பணி தொடர்கிறது

ஒரு முறை கோவையில் தொழில்நுட்ப நிறுவனத்தின் மேலாளரை சந்திக்கச் சென்றார் சங்க பிரச்சாரக். அவரை அமரச் சொல்லிவிட்டு, தன் குழுமத்தின் இளம் ஆராய்ச்சியாளருடன் ஒரு அவசர பணியைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். ஆராய்ச்சியாளர் தான் எவ்வளவு முயன்றும் தீர்வு கிடைக்கவில்லை என்று கூறி இரண்டு நாட்கள் கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தார். இதைக் கேட்ட சங்க பிரச்சாரகர், “இதற்கு நான் ஒரு உபாயம் சொல்லட்டுமா? நீங்கள் இந்த கோட்பாட்டின் படி – தேற்றத்தின் படி – முயன்று பாருங்களேன். எளிதில் விடை காணலாம்” என்றார். அதைக் கேட்டு மேலாளரும் ஆராய்ச்சியாளரும் நம்பிக்கையடைந்தனர்.

மேலாளர் ஆச்சரியப்பட்டு பிரச்சாரக்கிடம் , “உங்களுக்கு இந்த துறையில் பணி அனுபவம் உண்டா?” என்று விசாரிக்க பிரச்சாரக், “நான் பொறியியல் கல்லூரியில் படித்த வேளையில் பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொண்டிருக்கிறேன்” என்றார். அவர்தான் இறுதி ஆண்டு கடைசித் தேர்வை எழுதி விடைத்தாள்களுடன் பேனாவையும் மேசையிலேயே வைத்து விட்டு நேரே திருச்சி சங்க காரியாலயம் சென்று சங்கத்தில் முழுநேர ஊழியராகச் சேர்ந்தவர் ஆயிற்றே! தன் திறமைகள் யாவும்    ஆர்.எஸ்.எஸ் வாயிலாக தேசப் புனர் நிர்மாணப் பணிக்கே என்று இறுதி மூச்சு வரை உழைத்தவர் தான் பத்துஜி  என்று அன்புடன் அழைக்கப்பட்ட அர. பத்மநாபன்.

மூத்த பிரச்சாரகர்கள் கு.ஈ.ராமசாமி, கோவிந்தன்ஜி போன்றவர்களால் ஈர்க்கப்பட்ட பத்மநாபன் சிறு வயதிலிருந்தே ஸ்வயம்சேவக், இயல்பாக தலைமையேற்றுப் பொறுப்புகளை நிறைவேற்றும் திறமையால் அனைவரையும் கவர்ந்தான். அன்பும் ஆர்வமும் உண்டு, அலட்டல் கிடையாது. பொறியியல் கல்லூரியில் சங்க ஷாகா நடத்திக் கொண்டு தானும் படித்துக் கொண்டு, தன்னுடன் படிக்கும் மாணவர்களுக்கும் பாடம் எடுத்துதான் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கிய அந்த மாணவர் சென்னையில் பிரச்சாரகராக கல்லூரி மாணவர்களிடையே சங்கப் பணி செய்தார்.

அடுத்த சில ஆண்டுகளில் நெருக்கடிநிலை (1975-–77) அறிவிக்கப்பட்டு சங்கத்தின் மீது தடை. தலைமறைவு இயக்கத்தை எவ்வளவு திறம்பட நடத்தினார் என்பதை விவரிக்கிறார் அன்றைய மாம்பலம் ஷாகாவின் முகுந்தன்: “நெருக்கடி நிலைக்கு எதிரான சத்யாகிரக செய்தி, பல கட்சித் தலைவர்களின் கண்டன அறிக்கைகள், தீர்மானங்கள், இவற்றைத் தாங்கிய பிரசுரங்கள் வேலூரில் அச்சடிக்கப்பட்டு  சென்னைக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு எனக்கு. இதனை நடத்திக் கொண்டிருந்த வேலூர் கார்யகர்த்தர் கைதாகியிருந்த கடுமையான சூழ்நிலை. மதியம் 3 மணி தொடங்கி, இரவு 9 மணிக்கு பேருந்தில் ஏற்றி ஓட்டுனர் – நடத்துனர் கேள்விகளை சமாளித்து சென்னை அமிஞ்சிக்கரையில் வந்து இறங்கும்போது அதிகாலை 4.30 மணி. பத்துஜி என்னைப்  பார்த்துக்  கேட்ட முதல் கேள்வி ‘நீ கடைசியா எப்ப சாப்பிட்டாய்?’ மூட்டைகளை பத்திரமாக வேறு இரண்டு ஸ்வயம் சேவகர்களிடம் ஒப்படைத்து, கொண்டு போகச் சொல்லி விட்டு, அருகில் சூளைமேட்டில் இருந்த ஸ்வயம் சேவக் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்று, குடும்பத்தில் இருந்தவர்களை உரிமையுடன் எழுப்பி உடனே எனக்கு சிற்றுண்டி தயார் செய்ய வைத்து, நான் உண்டு முடித்த பின்னரே என்னை வீட்டிற்கு அனுப்பி வைத்தார் பத்துஜி”. கார்யகர்த்தார்கள் மீது அவருக்கு இருந்த கரிசனம், குடும்பங்களுடன் அவருக்கு இருந்த அன்யோன்யம் அப்படி.

கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு மேற்கு மண்டலம் முழுவதும் பத்துஜி ஆற்றிய பணிகளை எவ்வளவு சொன்னாலும் நிறைவு பெறாது. அவற்றை சங்கத்தின் வட  தமிழக சங்கசாலக் முனைவர் கே. குமாரசாமி என்கிற கே. கே. சாமி ‘பூரண சமர்ப்பணம் ஸ்ரீ பத்துஜி’ என்ற தன் சமீபத்திய நூலில் படம் பிடித்துக் காட்ட முயன்றிருக்கிறார். ஹிந்து மதத்தின் மீது தொடுக்கப்பட்ட மீனாட்சிபுரம் மதமாற்றம் என்ற சவாலுக்கு பதிலடி கொடுத்து ஹிந்து மக்களை ஒருங்கிணைக்க சேலத்தில் ஒரு விழிப்புணர்வு மாநாடு நடத்த நிதி திரட்டும் பணியினூடே சேலம் எம். ராமசாமியும் பத்துஜியும் கோவை செல்லும் வழியில் இவர்கள் கார் மீது எதிரே வந்த லாரி  மோதி பத்துஜிக்கு தலையில் பலத்த அடி. மருத்துவமனையில் கோமாவில் இரண்டு மாதம் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி நம்மை விட்டுப் பிரிந்தார். மாநில பொறுப்பை வகித்த, எதற்கும் கலங்காத சூரியநாராயணராவ்ஜி, கதறி கதறி அழுதார் என்று நூலின் அணிந்துரையில் எழுதியுள்ளார் அப்போது உடனிருந்த பிரச்சாரகர்   ஜெயமணி.

“ஒரு ஞாயிறு மதியம். சென்னை தண்டையார்பேட்டை இளைஞர்களுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் குறிக்கோள் புரிய நூலக உதாரணம் சொன்னார் பத்துஜி. ‘அறிவுத்
துறைகள் வளர்ந்துகொண்டே இருப்பதால் நூலகத்தின் குறிக்கோள் வளர்ந்துகொண்டே இருப்பது. நூல்கள் வந்து சேர்ந்துகொண்டே இருக்கும்.  சங்கமும் அது போலத்தான். ஹிந்துக்கள் வந்து சேர்ந்து கொண்டே இருப்பார்கள். ஊரில் எல்லோரும் சேரும் வரை இது நடக்கும்’. கேட்டவர்களுக்கு ஆயுள் நெடுக இது மனதில் பதிந்திருக்கும்” என்று நினைவுகூர்கிறார், அந்த இளைஞர்களில் ஒருவரான, இன்று 78 வயது தாண்டிய, சென்னை ஆர்.எஸ்.எஸ் அன்பர் ஒருவர்.