நேருவின் கிரிமினல் செயல்களை பிரதமர் மோடி சரி செய்துள்ளார் – முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான்

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு 370-வது பிரிவு அளித்து செய்த தவறுகளை பிரதமர் மோடி சரி செய்துள்ளார் என்று மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் விமர்சனம் செய்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டம் 370-வது பிரிவை மத்திய அரசு திரும்பப் பெற்றது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தையும் இரண்டாகப் பிரித்து, லடாக்கை யூனியன் பிரதேசமாகவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசமாகவும் மாற்றியது. இந்த மாற்றங்கள் வரும் அக்டோபர் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ”நான் பாரத மாதாவை பூஜிப்பவன். ஒருவரைக் கொலை செய்பவர் மட்டும் கிரிமினல் அல்ல, தேசத்துக்கு எதிரான செயல்கள் செய்தால் அதைக் காட்டிலும் மிகப்பெரிய குற்றம் இருக்க முடியாது.

நான் உண்மையான தகவல்கள் அடிப்படையில் பேசுகிறேன். அரசியலமைப்புச் சட்டம் 370-வது பிரிவு, அதாவது காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை நாட்டின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு வழங்கினார். காஷ்மீர் தலைவர் ஷேக் அப்துல்லா மீது கொண்டிருந்த அளவுக்கு மீறிய அன்பால் அந்தச் சிறப்புச் சலுகைகளை நேரு வழங்கினார்.

நேரு குறித்து நான் பேசும் அனைத்து வார்த்தைகளுக்கும் நானே பொறுப்பு. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பண்டிட் நேரு செய்த அனைத்து தவறுகளும் பிரதமர் மோடியால் சரி செய்யப்பட்டுள்ளது என்றார்.

மற்றொரு தவறாக இந்தியப் படைகளை வைத்து பாகிஸ்தான் பழங்குடியினப் படைகளைத் துரத்திவிடும் போது, ஒருதரப்பாக போர் நிறுத்தம் செய்ததாகும். இதற்கு இப்போது காங்கிரஸ் கட்சி பதில் அளிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் இந்த விஷயம் குறித்து சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் ஏன் பேசவில்லை என கேட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *