ஒரு சாதகர். அவர் அனைவருக்கும் உதவி செய்யக் கூடியவர்.அவர் செய்து வந்த அனுஷ்டானம், அவரது பழகு முறை இவற்றைக் கண்டு மக்களுக்கெல்லாம் மிகவும் மகிழ்ச்சி.
ஒருநாள் பக்தர் ஒருவர் அந்த ஆசிரமத்திற்கு வந்தார். எப்போது பார்த்தாலும் சாதகர் தன் அருகில் நீர் நிறைந்த கலசத்தையும் நெருப்பு நிறைந்த பாத்திரத்தையும் வைத்துக் கொண்டிருப்பார். இதை பார்த்த பக்தர் அவரிடம் கேட்டார்: “எப்போதும் உங்கள் பக்கத்திலேயே இந்த இரண்டும் இருக்கின்றனவே, ஏன்?”
சாதகர் சொன்னார்: “மகனே, நான் என்னுடைய ஆசைகளை நீரில் கரைத்து விடுவேன். என் அகங்காரத்தை நெருப்பில் பொசுக்கி விடுவேன். நெருப்பையும் நீரையும் பார்க்கும்போதெல்லாம் நான் என்ன செய்யவேண்டும் என்பது எனக்கு ஞாபகம் வரும். தீய குணங்களை எப்போதும் விலக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த இரண்டையும் பக்கத்திலேயே வைத்திருக்கிறேன்”. பக்தர் கேட்டார், “சுவாமி! என்ன சொல்கிறீர்கள் நீங்கள்? உங்களது சாதனா மிக உயர்ந்த நிலையில் உள்ளது. தீயகுணங்கள் உங்களை அணுகவே முடியாது. அப்படியிருக்க …?”
சாதகர் சொன்னார்: “குழந்தாய், குழப்பமடைய வேண்டாம். மிக உயர்ந்த நிலையில் இருப்பவரும் கணநேரத்தில் வீழ்ச்சி அடையலாம். நான் வீழ்ச்சி அடையவே மாட்டேன் என்று மட்டும் நினைத்து விடாதே. உயர்ந்த நிலையில் உள்ளவன் வீழ்ச்சி பயங்கரமாக இருக்கும், சாமானியர்களின் வீழ்ச்சி சாதாரணமாக இருக்கும். உயர்ந்த ஆன்மிக நிலையில் உள்ளவர்களும் தீய குணங்கள் அணுகாதவாறு கவனமாக இருப்பது அவசியம்.”
பக்தர் விடுவதாய் இல்லை. “நீங்கள் தவத்தின் மூலம் எல்லா குணங்களும் நிறைந்தவர். உங்களைத் தீய குணம் எப்படி தொட முடியும்?”
“கடவுள்தான் எல்லா குணங்களும் நிறைந்தவர். என்னிடம் எல்லா நல்ல குணங்களும் வந்து விட்டன என்ற எண்ணம் என்றைக்கு என் மனதில் ஏற்படுகிறதோ அன்றைய தினம் என்னுடைய வீழ்ச்சி நிச்சயம்.”
இப்போது பக்தர் கேட்டார்: “சுவாமி, நீங்கள் ஆசை, அகங்காரம் இரண்டையும் குறித்து மிக கவனமாக இருக்கிறீர்களா?” சாதகர் சொன்னார்: “சற்றே கவனக்குறைவாக இருந்துவிட்டால் ஆசை தலை தூக்கிவிடும். அகங்காரமும் அப்படித்தான். அதுவும் தோன்றி வேகமாக வளர்ந்து விடும். அந்த இரண்டையும் நீக்குவது அல்லது அடக்குவது சிரமமாகிவிடும். இரண்டையும் குறித்து நான் மிக மிக கவனமாக இருக்கிறேன்.”