இதில் அரசியலுக்கு தொடர்பு இல்லை: கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பியாக இருந்து வந்த ராகுல் காந்திக்கு, அவதூறு வழக்கில் நீதிமன்றத்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது. நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மத்திய அரசுக்கு எதிராக சிறிதும் அர்த்தமற்ற, பொருத்தமில்லாத கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், “ராகுல் காந்தியை மத்திய அரசு தகுதி நீக்கம் செய்யவில்லை. ராகுல்காந்தியை குற்றவாளி என கூறியது நீதிமன்றம். ஏனெனில், ஒரு குறிப்பிட்ட .பி.சி. சமூகத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் பயன்படுத்தத் தகுதியற்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தி உள்ளார். இதன் தொடர்ச்சியாகவே நீதிமன்றம் அவரை குற்றவாளியாக அறிவித்ததன் பேரில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இது ஒரு நீதிமன்ற நடைமுறை. இதில், அரசியலுக்கு எந்தவித தொடர்பும் இல்லை” என்று கூறினார்.
ஓ.பி.சி பிரிவினரை அவமானப்படுத்தியவர்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, “பாரத ஜனநாயகத்தையும் ராணுவத்தையும் நாட்டின் முக்கிய அமைப்புகளையும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இழிவுப்படுத்தி பேசுகிறார். வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம், தேசத்தை அவமானப்படுத்தும் வகையில் அவர் பேசுகிறார். அதற்காக ‘காந்தி’ என்று பெயர் வைத்த அனைவரையும் குற்றம் சொல்ல முடியாது. ஒட்டுமொத்த ஓ.பி.சி பிரிவினரையும் ராகுல் காந்தி அவமானப்படுத்தியுள்ளார். தரக்குறைவாக பேசி நாட்டை இழிவுப்படுத்தி உள்ளார். ஆனால், அத்தகைய பேச்சுகளுக்கும் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் நியாயம் கற்பிப்பது அதிர்ச்சி அளிக்கிறது” என கூறியுள்ளார்.
இது நீதிமன்றத்தின் தீர்ப்பு: பா.ஜ.க மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான புபேந்தர் யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”இது நீதிமன்றத்தின் தீர்ப்பு. ஒவ்வொருவரும் இதனை ஏற்றாக வேண்டும். ராகுல் காந்தி குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் காலங்களில் சமூகங்களை சிலர் இழிபடுத்துகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். அந்த வகையில், இந்தத் தீர்ப்பு நாடு முழுவதற்கும் ஒரு நல்ல செய்தியை தந்துள்ளது. ஒட்டுமொத்த சமூகத்தையும் எப்படி திருடர்கள் என ராகுல் கூறலாம்? பேச்சு சுதந்திரம் என்பது எந்த சமூகத்தையும் அவமதிப்பதற்கான உரிமை அல்ல. ராகுல் காந்தி ஓ.பி.சி சமூகத்தை அவமதித்திருக்கிறார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்கவும் இல்லை. வெளிநாடுகள் சென்றபோதும் அங்கெல்லாம் நாட்டுக்கு அவப்பெயெரை ஏற்படுத்தி உள்ளார்” என குற்றம்சாட்டியுள்ளார்.
விளைவுகளை அனுபவித்தாக வேண்டும்: மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சௌஹான், ”தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான விளைவுகளை அனுபவித்தே தீர வேண்டும். ராகுல் காந்தி என்ன செய்தாரோ அதற்கான விளைவுகளை தற்போது அவர் அனுபவிக்கிறார்” எனக் கூறியுள்ளார்.
இதுதான் கர்மவினை: பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு, ராகுல் காந்தி பேசியதையே மேற்கோள் காட்டி தனது டுவிட்டர் பதிவில், “துரதிருஷ்டவசமாக நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆகிவிட்டேன் என்று ராகுல் காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். அவரது வார்த்தைகள் இப்போது உண்மையாகிவிட்டன. எதையும் நேர் மறையாக சிந்தியுங்கள். எதிர்மறையாக உங்களை எங்கும் அழைத்து செல்லாது. மன்மோகன் சிங் 2013ல் நிறைவேற்றப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மீது ஒரு அவசர சட்டத்தை கொண்டு வர விரும்பினார். அதை ராகுல் காந்தி துண்டு துண்டாக கிழித்தார். இப்போது ராகுலின் தகுதி நீக்கமும் அதே தீர்ப்பில் இருந்துதான் வருகிறது. இதுதான் கர்மவினை என்பது” என குறிப்பிட்டுள்ளார்.