நீதித் துறையை முடமாக்க  மூன்று தலைமுறைகளாக காங்கிரஸ்  முயற்சி

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று காங்கிரஸும் மற்ற கட்சிகளும் கொடுத்த தீர்மானம் ஏற்கப்படவில்லை. நீதித் துறை மீது காங்கிரஸ் கட்சி தொடர்ந்து நடத்திவரும் தாக்குதல்களின் லேட்டஸ்ட் வடிவம் தான் இது. இதன் பின்னணியைப் பார்ப்போம்.

நீதித் துறையை முடக்க 70களில் இருந்த இந்திரா காந்தி ஒரு குழுவை அமைத்தார். அந்த குழுவில் இடம்பெற்றவர்கள், 1) ஹெ.ஆர்.கோகலே (மத்திய சட்ட அமைச்சர். 2) சித்தாந்த சங்கர்ராய் 3) மோகன் குமாரமங்கலம்.

உயர் நீதிமன்றத்திற்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் நியமிக்கப்படவேண்டிய நீதிபதிகளை தேர்வு செய்வது. இந்த மூவர் குழுவின் வேலை காங்கிரஸ் சார்பு நீதிபதிகளை தேர்வு செய்வது. தேர்வு செய்யப்பட இருக்கும் நீதிபதிகளுக்கு சட்ட அறிவு இருக்கிறதா, இல்லையா, அவர்கள் திறமையானவர்களா, நியாயமானவர்களா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். அவர்கள், அரசாங்கத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்படும் வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்; அரசாங்கம் கொண்டுவரும் சட்டங்களை காப்பாற்ற வேண்டும். அதன் மூலம் காங்கிரஸ் ஆட்சி தொடர வேண்டும்

இதன் அடிப்படையில் பல நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். விரைவில் பதவி உயர்வு பெற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகவும் ஆக்கப்பட்டனர்.

கோலக்நாத் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முறியடிக்கும் வகையில் காங்கிரஸ் அரசு 1971ம் ஆண்டு அரசியல் சாஸனத்தில் திருத்தம் கொண்டுவந்தது. நிலச் சீர்திருத்தச் சட்டங்களை அரசியல் சாஸனத்திற்கு விரோதமானது என்று சொல்லித்தானே உச்ச நீதிமன்றம் அவற்றை ரத்து செய்கிறது, அந்த அரசியல் சாஸனத்தையே திருத்தம் செய்து விட்டால் என்ற யோசனையின் விளைவு? சாஸனத்தின் 24வது திருத்தம்.

திருத்தத்தில் முக்கிய அம்சம் இந்திய அரசியல் சாஸனம் இந்திய குடிமகன்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை சுதந்திரத்தை குறைக்கவோ, மாற்றவோ, திருத்தம் செய்யவோ நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது” என்பதாகும்.

இதனைத் தொடர்ந்து கேரள அரசு மாநிலத்தில் உள்ள எதனீர் மடத்தின் சொத்துகளை முடக்குவதற்காக இரண்டு நிலச் சீர்திருத்த சட்டங்களைக் கொண்டுவந்தது.

இதை எதிர்த்து எதனீர் மடத்தின் பீடாதிபதியான கேசவானந்த பாரதி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்திய அரசியல் சாஸனம் வழங்கிய அடிப்படை உரிமைகளை நாடாளுமன்றத்தால் குறைக்கவோ, பறிக்கவோ முடியாது என்பது அவர் வாதம். இந்திய மக்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை ரத்து செய்யவோ, முறியடிக்கவோ  கொண்டுவரப்பட்ட அரசியல் சாஸன திருத்தங்கள், 24, 25, 26, 29 ஆகியவை செல்லதக்கதல்ல என்பது அவருடைய கட்சி.

வழக்கை விசாரிக்க, அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சிக்ரி 13 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாஸன பெஞ்சை நிறுவினார்.

விசாரணை ஐந்து மாதங்கள் நடைபெற்றது. தீர்ப்பு வருவதற்கு முன்னர், மத்திய காங்கிரஸ் அரசாங்கம் தனக்கு சாதகமாக தீர்ப்பு வரவேண்டும் என்பதற்காக பல தீவிர முயற்சிகளில் இறங்கியது. கேசவானந்த பாரதி வழக்கை விசாரித்த பெஞ்சில் அரசாங்கத்திற்கு ஆதரவான நீதிபதிகளும் இருந்தனர்.

இந்த விஷயத்தில் இந்திரா காந்தி நியமித்த குழுவின் முயற்சிகள் கிட்டத்தட்ட வெற்றி பெற்றது என்று சொல்லலாம். நீதி 7:6 என்ற விகிதத்தில் வென்றது. அதாவது 7 நீதிபதிகள் அரசியல் சாஸனத்தின்  அடிப்படைத் தன்மையை நாடாளுமன்றத்தால் மாற்றமுடியாது என்று தீர்ப்பளித்தனர். இது பெரும்பான்மை தீர்ப்பு. 6 நீதிபதிகள் இதற்கு எதிர்மாறாக தீர்ப்பளித்தனர். கேசவானந்த பாரதி வழக்கில் தோற்ற மத்திய அரசு தன்னுடைய பழிவாங்கும் நடவடிக்கையை ஆரம்பித்தது. அரசாங்கத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்காத நீதிபதிகள் பழிவாங்கப்பட்டனர். தலைமை நீதிபதியாக இருந்த சிக்ரி பதவி ஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து அடுத்த தலைமை நீதிபதியை அரசாங்கம் நியமிக்க வேண்டும்.

நீதித்துறையில் ஒரு எழுதப்படாத விதி இருந்தது. இந்த விதி பல ஆண்டுகள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வந்தது. அந்த விதிப்படி தலைமை நீதிபதி ஓய்வுபெற்றால் அவருக்கு அடுத்தபடியாக பணி மூப்பு நிலையில் உள்ள நீதிபதிதான் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படவேண்டும். அதன்படி சிக்ரிக்கு அடுத்து தலைமை நீதிபதியாக ஆக வேண்டியவர் ஷெலத். அவரை அடுத்து வருபவர் கிரோவர், பிறகு ஹெக்டே. ஆனால் அரசாங்கம் இவர்கள் மூவரையும் ஒதுக்கிவிட்டு, இவர்களுக்கு இருந்த ஏ.என்.ரேவுக்கு தலைமை நீதிபதி பதவியை வழங்கியது. இந்த அநியாயம் நாடு முழுவதும் கண்டிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அந்த மூன்று நீதிபதிகளும் தங்களுடைய நீதிபதி பதவிகளை ராஜினாமா செய்தனர்.

காங்கிரஸ் அரசு, குறிப்பாக இந்திரா காந்தி நீதித்துறையைக் காயப்படுத்திய இன்னொரு விஷயத்தைப் பார்ப்போம்.

இந்திரா காந்தி 1971ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், ரே பரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாட்டின் பிரதமராகவும் ஆனார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜ் நாராயணன், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இந்திர காந்தியின் மீது ஒரு வழக்கைத் தொடர்ந்தார்.

இந்திரா காந்தி தன்னுடைய பிரதமர் அதிகாரத்தை துஷ் பிரயோகம் செய்ததால் அந்தத் தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரினார் ராஜ் நாராயணன்.

வழக்கு விசாரணை சுமார் நான்கு ஆண்டு காலம் நடந்தது. வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஜக் மோகன் லால் சின்ஹா.

இந்த வழக்கில் ராஜ் நாராயணனுக்கு ஆஜரானாவர் முன்னாள் அட்வகேட் ஜெனரல் சாந்திபூஷன்.

வழக்கில் இந்திரா காந்தியை சாட்சியாக விசாரிக்கவேண்டும் என்று ராஜ் நாராயணன் நீதிபதியிடம் விண்ணப்பித்தார். இந்திரா காந்தி சாட்சியாக செல்ல மறுத்திருக்கலாம். ஆனால் விதி, விளையாடியது.

ஆஹா, ஓஹோ என்ற கட்சிக்காரர்களின் உசுப்பேத்தல் காரணமாக பாரதப் பிரதமர் இந்திரா காந்தி சாட்சிக் கூண்டில் ஏறினார். சாந்தி பூஷனின் ஊடுருவும் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் அவர் மாட்டிக்கொண்டார். குறுக்கு விசாரணையின் ஒரு கட்டத்தில் தனக்கு ஆங்கிலம் தெரியாது என்று சொல்லும் நிலைக்கு அம்மையார் தள்ளப்பட்டார். இந்திரா காந்தியின் இந்த பதிலைமறுநாள் செய்தித்தாள்கள் வெளியிட்டன.

இந்திரா காந்தியிடம் பதிலைப் பெற்ற பிறகு வழக்கு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. வாதி, பிரதிவாதிகளின் வாதங்கள் நடைபெற்றன. பொதுமக்கள் யாரும் இந்த வழக்கை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏன் காங்கிரஸை எதிர்த்த எந்த அரசியல் கட்சியுமே இந்த வழக்கை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால் ஆளும் வர்க்கத்தினிடையே ஒரு உள்ளுறுத்தல் இருந்தது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான டி.எஸ்.மத்தூர் (இவர் இந்திரா காந்தியின் தனிப்பட்ட மருத்துவரின் உறவினர்), வழக்கை விசாரித்த நீதிபதி சின்ஹா வீட்டிற்கு வந்தார். உங்களுடைய பெயர், உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி உயர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது; நீங்கள் இந்திரா காந்தி தேர்தல் வழக்கில் தீர்ப்பு வெளியிட்டவுடன் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகிவிடுவீர்கள் என்றார். தலைமை நீதிபதி சொல்வதை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த நீதிபதி சின்ஹா பதில் ஏதும் கூறவில்லை.

தீர்ப்பிற்கான நாள் அறிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். நீதிபதி சின்ஹா அளித்த தீர்ப்பு இந்திரா காந்தியின் தலையிலும், காங்கிரஸின் தலையிலும் பேரிடியாக விழுந்தது.

இந்திரா காந்தி தன்னுடைய அரசு பதவியை துஷ்பிரயோகம் செய்து, தேர்தல் விதிமுறைகளை மீறி மக்களிடம் வாக்கு சேகரித்து தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். எனவே இந்த தேர்தல் செல்லாது.” என்ற அதிரடி தீர்ப்பை வெளியிட்டார் நீதிபதி சின்ஹா (1975).

நீதிபதி சின்ஹாவின் தீர்ப்பு நாட்டில் அதிர்ச்சியை உருவாக்கியது. தீர்ப்புப்படி, இந்திரா காந்தி பதவி விலக வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் போர்க்கொடி தூக்கினர். மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்திரா காந்தியும் மந்திரிசபை சகாக்களும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர்.

உடனடி நடவடிக்கையாக இந்திரா காந்தி இந்தியாவில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார். இந்த செயல் இந்திய ஜனநாயகத்தில் ஒரு கரும்புள்ளி. இந்திரா காந்திக்கு எதிராக நீதிபதி சின்ஹா தீர்ப்பு வழங்கியதால் அவர் உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு செய்யப்படவில்லை.

அவசரநிலை இந்திய குடிமக்களுக்கு அரசியல் சாஸனம் வழங்கிய அனைத்து அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட்டன. மக்கள் சுதந்திரமாக செயல்படமுடியவில்லை. கூட்டம் கூட்ட முடியவில்லை; போராட்டம், பந்த் என்று எதுவும் நடத்த அனுமதியில்லை; கருத்து சுதந்திரம் கிடையாது; பத்திரிகைகளுக்கு முன் தணிக்கை என்ற வாய்ப்பூட்டு!

சுமார் ஒரு லட்சம் பேர் காரணமின்றி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் (Habeas Corpus – ஆட்கொணர்வு மனு)மனுக்களை தாக்கல் செய்தனர். இம்மனுக்களை விசாரித்த 9 உயர் நீதிமன்றங்கள், அரசாங்கம் காரணமின்றி யாரையும் கைது செய்யமுடியாது. மிசா சட்டத்தின் கீழ் கைது செய்தது தவறு. எனவே சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்தவர்களை அரசாங்கம் உடனே விடுதலை செய்யவேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தன.

காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கிய அந்த ஒன்பது உயர் நீதிமன்ற நீதிபதிகளும் பணி மாற்றம் செய்யப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு பணி மூப்பு இருந்தும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

உயர் நீதிமன்றங்களின் உத்தரவைக் கேட்டு இந்திரா காந்தி அம்மையாருக்கும் அவரது சகாக்களுக்கும் கடும் கோபம். உடனே தன்னுடைய அட்டார்னி ஜெனரல் (இந்திய அரசு தலைமை வழக்கறிஞர்) நிரேன்டே மூலம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அந்த வழக்குதான் இன்றளவும் பேசப்படும் பிரபலமான ஹேபியஸ் கார்பஸ் வழக்கு – (ஏ.டி.எம் ஜெபல்பூர் -எதிர்- சிவகாந்த் சுக்லா).

வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் நியமிக்கப்பட்டது. அதில் தலைமை நீதிபதி ஏ.என்.ரேவும் அடக்கம். மற்ற நான்கு நீதிபதிகள் – 1) பி.என்.பகவதி, 2) வை.வி.சந்திரசூட், 3) எம்.ஹெச்.பெய்க் மற்றும் 4) ஹெச்.ஆர். கன்னா.

அரசு வாதம் இது: அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகள் அனைத்தும் ரத்தாகிறது. எனவே அரசாங்கத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்ய முடியாது.”

விசாரணையின் போது நீதிபதி கன்னா ஒரு கேள்வியை அரசு தலைமை வழக்கறிஞரிடம் கேட்டார். ‘அனைத்து அடிப்படை உரிமைகளும் ரத்தாகி விடும் என்கிறீர்களே, அப்படி என்றால் இந்திய குடிமகன் உயிர் வாழ்வது என்பதும் அவனுடைய உயிரை சட்டத்திற்கு புறம்பாக பறிக்கக்கூடாது என்றும் அடிப்படை உரிமையாக அரசியல் சாஸனம் குறிப்பிட்டிருக்கிறதே அந்த உரிமையும் ரத்தாகி விடுமா’ என்று கேட்டார். இதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் – ‘ஆம், அப்படி ஒருவரின் உயிர் பறிக்கப்பட்டால் இந்த நீதிமன்றத்தால் ஒன்றும் செய்யமுடியாது’ என்று பதிலளித்தார். அதாவது இந்திரா காந்தியின் ஆட்சியில் உயிருக்கு உத்தரவாதமில்லை என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் அரசு வழக்கறிஞர்.

நான்கு நீதிபதிகள் (தலைமை நீதிபதி உட்பட) அவசர நிலையின் போது இந்திய குடிமகனுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகள் ரத்தாகி விடுகின்றன என்ற அதி அற்புத தீர்ப்பை வெளியிட்டனர்.

ஒரு நீதிபதி மட்டும் தைரியமானவராக, எதற்கும் வளைந்து கொடுக்காதவராக, இக்கட்டிலும் நீதி வழுவதாவராக பார்க்கப்பட்டார். அவர்தான் நீதிபதி ஹெச். ஆர். கன்னா. அரசியல் சாஸனம் வழங்கிய அடிப்படை உரிமைகளை அவசர நிலை கட்டுப்படுத்தாது. அரசாங்கம் காரணமின்றி கைது செய்திருப்பது தவறு. அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தைரியமாக தீர்ப்பு எழுதினார்.

இதனால் ஹெச். ஆர். கன்னாவிற்கு கிடைக்க வேண்டிய தலைமை நீதிபதி பதவியை காங்கிரஸ் அரசாங்கம் கிடைக்க விடாமல் செய்தது. அவருக்கு அடுத்ததாக உள்ள காங்கிரஸ் விசுவாசியான எம்.ஹெச்.பெய்க்கிற்கு தலைமை நீதிபதி பதவி வழங்கப்பட்டது. இந்த அநியாயத்தை எதிர்த்து ஹெச். ஆர். கன்னா நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார்.

இந்திய ஜனநாயகத்தை இந்திரா அரசு குழி தோண்டி புதைத்து விட்டது‘ என்று இது குறித்து அமெரிக்காவின் முன்னணி நாளேடு நியூயார்க் டைம்ஸ் தலையங்கம் எழுதியது.

***

இந்திராவுக்குப் பிறகு பதவிக்கு வந்த அவருடைய மகன் ராஜீவ் காந்தி ஆட்சியிலும் நீதித் துறை மீதான தாக்குதல் தொடர்ந்தது. ஏழை முஸ்லிம் பெண்ணான ஷாபானு ஜீவனாம்சம் கேட்டு தொடுத்த வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம் (1985). இந்தத் தீர்ப்பை முறியடிக்கும் வகையில் அரசியல் சாஸனத் திருத்தம் கொண்டுவந்தார் ராஜீவ் காந்தி.

மூன்றம் தலைமுறையாக காங்கிரஸினுடைய அதிகார மையத்தை கைப்பற்றியுள்ள ராகுல் காந்தி மரபு மாறாமல் தன் குடும்பத்தினுடைய பாரம்பரிய நெறிப்படி நீதித்துறை மீது போர் தொடுத்திருக்கிறார் – அதுதான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம். ஆனால் இந்த முறை இவர்களுடைய குடும்பத்தின் செல்வாக்கு செல்லுபடியாகப்போவதில்லை என்பதுதான் நல்ல செய்தி.