நிலத்தடி நீரைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மத்திய அரசு மற்றும் 21 மாநில அரசுகளுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு உத்தரவிட்டுள்ளது. ‘அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளை விட, இந்தியாவில் அதிகமாக நிலத்தடி நீர் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பெரும்பாலான மாநிலங்களில், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.
இந்தோ — கங்கை படுகையில் நிலத்தடி நீர் மட்டம் ஏற்கனவே குறைந்துள்ளது. வரும் 2025ல் இந்தியாவின் வடமேற்கு பகுதி முழுதும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறையும்’ என, ஐ.நா., ஆய்வு அறிக்கையை மேற்கோள் காட்டி, நாளிதழ்களில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்த, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் பிரகாஷ் ஸ்ரீவத்சவா, நிபுணர் குழு உறுப்பினர் செந்தில்வேல் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு பிறப்பித்த உத்தரவு:
இந்தியாவின் வட மேற்கு பகுதி, கோடிக்கணக்கான மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்கிறது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள், நாட்டின் அரிசி தேவையில் 50 சதவீதத்தையும், கோதுமை தேவையில் 85 சதவீதத்தையும் உற்பத்தி செய்கின்றன. ஆனால், இங்கு 78 சதவீத கிணறுகளில், அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டுள்ளன. இது, கவலை அளிக்கும் செய்தி.
மத்திய நிலத்தடி நீர் ஆணையம், கடந்த 22ல் தாக்கல் செய்த அறிக்கையில், ‘நிலத்தடி நீரைப் பாதுகாக்க, ஐ.நா., பல்கலை அறிக்கையில் உள்ள அனைத்து பரிந்துரைகளையும், மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது’ என கூறப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதை, ஆணையத்தின் அறிக்கை உறுதிப்படுத்துகிறது. தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களிலும் நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுகிறது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, நிலத்தடி நீர் மட்டும் எங்கெல்லாம் குறைகிறது; அதற்கு என்ன காரணம் என்பது குறித்து முழுமையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.
அதன் அடிப்படையில், நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து, மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் உறுப்பினர், மத்திய ஜல்சக்தி மற்றும் சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்றத் துறை செயலர்கள், தமிழகம், ஆந்திரா, பீஹார், சட்டீஸ்கர், டில்லி, குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், திரிபுரா, மேற்கு வங்கம் ஆகிய, 21 மாநிலங்களின் நீர்வளத் துறை செயலர்கள் அறிக்கை செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை, வரும் 2024 பிப்ரவரி 9ல் நடக்கும். அதற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.