பாரதத்தின் நகர்ப்புற திட்டமிடல் திறன் சீர்திருத்தங்கள் அறிக்கையை நிடி ஆயோக் வெளியிட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நகர்ப்புற நிர்வாகத்தை சீரமைக்க பல்வேறு நிலைகளில் 10 குறிப்பிட்ட கொள்கை முடிவுகளை எடுக்க அக்குழு பரிந்துரைத்துள்ளது. அதன்படி, உலகின் மொத்த நகர்ப்புற மக்கள் தொகையில் பாரதம் தற்போது 11 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. இது மிகவும் வளர்ந்த நாடுகளை விட அதிகமாகும். வரும் 2036ம் ஆண்டு வாக்கில் நகர்ப்புற மக்கள்தொகை வளர்ச்சி என்பது 73 சதவீதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகர்புற நிர்வாகம் என்பது முக்கியமான அம்சமாக இருந்தாலும், நகர்ப்புற திட்டமிடல் என்பது அதன் வளர்ச்சியின் வேகத்திற்கேற்ப முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் உள்ளது. எனவே, நகர்ப்புற திட்டமிடல் நிர்வாக அமைப்பை மேம்படுத்தவும் நகர்ப்புற திட்டமிடல் நிறுவனங்களை முறைப்படுத்தவும் வேண்டும். அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து ஒரு முழுமையான நகர்ப்புற திட்டமிடல் தற்போது அவசியம் என அந்தஅறிக்கை பரிந்துரைத்துள்ளது.