நாளை சென்னை வருகிறது பஞ்சலோக நடராஜர் சிலை

 ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டு உள்ள, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள, பஞ்சலோக நடராஜர் சிலை, நாளை, சென்னை வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக் குறிச்சியில், அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 1982ல், 30 கோடி ரூபாய் மதிப்புள்ள, பஞ்சலோக நடராஜர் சிலை மற்றும் சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர், திருவில்லி விநாயகர் சிலைகள் திருடு போயின. இது குறித்து, திருநெல்வேலி மாவட்ட போலீசார் விசாரித்தனர்; துப்பு துலக்க முடியவில்லை. இதனால், 1984ல், கண்டுபிடிக்க முடியாத வழக்கு பட்டியலில் சேர்த்து விட்டனர். இந்த வழக்கை, தற்போது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, சிறப்பு அதிகாரி, பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரித்தனர்.

நடராஜர் சிலை, ஆஸ்திரேலியாவில் இருப்பதை கண்டறிந்து, அந்த சிலையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தற்போது, நடராஜர் சிலை மீட்கப்பட்டு, விமானம் வாயிலாக, டில்லிக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.அங்கிருந்து, நாளை ரயிலில், சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வருகிறது. பின், இந்த சிலை, கல்லிடைக்குறிச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.