‘தாண்டியா ஆட்டமும் ஆட, தசரா கூட்டமும் கூட’ என்று அகண்ட பாரதமே சங்கீதம் மற்றும் கோலாட்டச் சத்தத்தில் மூழ்கிக் கிடக்கும் முழுமைத் திருவிழா நவராத்திரி. மேற்கு வங்கத்தில் தசரா பந்தல்கள் ஒரு குறிப்பிட்ட தீம் கொண்டு அமைக்கப்படுவதோடு இரவு முழுவதும் வங்காளிகள் ஒவ்வொரு பந்தலுக்கும் சென்று வழிபடவும் செய்வார்கள்.
ஆந்திராவில் பூந்தாம்பாளத்தை சுற்றி நடனமாடினால், குஜராத்தில் மண்பானையை ( மனித உயிரின் ஆதாரமான கருப்பையின் குறியீடாக) ஆட்டம் பாட்டம் என்று சமைக்கிறார்கள். ‘பத்துகம்மாபண்டுகா” (எங்கள் பெண் தெய்வமே உயிர் பெற்றுவா’) என்ற பெயரில் தாய்மையை கொண்டாடும் விழாவாகவே தெலங்கானா மக்கள் பார்க்கிறார்கள். பெண்கள் ஒரு தாம்பாளத்தின்மீது 7 அடுக்குகளாக வெவ்வேறு மலர்களை ஒரு குவியல் போல வடிவமைத்து வழிபடுவார்கள். தாங்கள் தயாரித்த மலர் குவியலை நடுவில் வைத்து அதைச் சுற்றி நாட்டுப்புறப் பாடல்களை பாடி , அருகாமையில் உள்ள ஏதேனும் ஒரு நீர்நிலைக்கு சென்று அந்த தாம்பாளத்தை நீரில் மிதக்கவிடுவார்கள்.
தசரா, துர்கா பூஜை, பத்துகம்மாபண்டுகா, குல்லு தசரா என்று வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு விதங்களில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் நவராத்திரி திருவிழாவை துர்கா, லக்ஷ்மி,சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளுக்கு அர்ப்பணிக்கிறார்கள். இந்த வருடம் 405வது தசரா விழாவை மைசூரில் கொண்டாட இருக்கிறார்கள். அதாவது விஜயநகர மன்னர்களின் ஆட்சிகாலத்தில் 17ம் நூற்றாண்டிலிருந்து தசரா பண்டிகை கர்நாடகாவில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
குலசேகரன் பட்டிணம் ஞானமூர்த்தி சமேத முத்தாரம்மன் திருக்கோயில் தசரா பண்டிகைக்கு பெயர் பெற்ற ஊர். திருவிழாவின் போது இதனைச் சுற்றியுள்ள ஊர்க்காரர்களின் ஈர்ப்பு புள்ளியாக குலசேகரன்பட்டிணம் மாறிவிடும். சுற்றியுள்ள அனைத்து ஊர்களிலும் களைகட்டும் நவராத்ரி விழா. பத்து நாட்களும், அவரவர் ஊர்களில் உள்ள முத்தாரம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், பொங்கல் போன்ற படையல்கள் இட்டு சிறப்பு பூஜை செய்யும் மக்கள், விஜயதசமியன்று, அலைகடலென குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு செல்வர். அன்று மட்டும் குலசேகரன்பட்டிணத்தில் குறைந்தது ஐந்து லட்சம் பக்தர்கள் குவிந்து, அம்மனை வழிபடுவார்கள். விஜயதசமி நள்ளிரவில் வங்கக்கடலோரம் நடைபெறும் மகிஷா சூரசம்ஹார விழாவில்அம்பிகை மகிஷனை வதம் செய்ததும் தசரா விழா இனிதே நிறைவுபெறும். அம்மன் அருள் பெருக இப்படி ஒரு ஒற்றுமையான பக்தி நிகழ்வை வேறெங்கும் காண்பது அரிது.
ஆர். கிருஷ்ணமூர்த்தி