நற்செய்திகளை தந்த மாணிக்கங்கள்

அன்றாடம் ஊடகங்களில் நாம் காணும் செய்திகள் சில… ‘‘போதைக்கு அடிமையான மாணவர்கள்’’ ஆசிரியரைத் தாக்கிய மாணவர்கள்  ‘ஜாதியைச் சொல்லி தகாத வார்த்தைகள் பேசிய மாணவர்கள்’ போன்றவை. ஏதோ நம் நாட்டில் மாணவர்கள் மத்தியில் இதுபோன்ற சம்பவங்கள் மட்டுமே நடப்பதாக ஒரு பயம் எட்டிப்பார்ப்பதைத் தடுக்க முடியவில்லை. ஆனால் தீயவை உலாவுமிடத்தில் தான் நல்லவையும் உலாவுகிறது அதிக வெளிச்சம் படாமல். அப்படி  சமூக வலைதளத்தில் நம் கண்ணில் பட்டவை சில வீடியோக்கள்

அதிகம் பகிரப்படாமல் போன அந்தச் செய்திகளில் ‘‘விளையும் பயிர் முளையிலே தெரியும்!’’ என்ற பொன்மொழிக்கேற்பச் செயல்படும் வருங்காலத் தூண்கள் இதோ! “Necessity is the mother of invention”- அம்மாவுக்கே ஒரு necessityயென்றால்? தன் அம்மாவுக்காக தான் கண்டுபிடித்த மெஷின் பற்றி விவரிக்கிறார் விழுப்புரம்  மாணவர்.வெங்கந்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் ரங்கேஷ்.
நான்கு மாடுகள் வளர்க்கும் இவரது அம்மா தினம் 2கிமீ புல்லுக் கட்டு சுமந்து வருவதைப் பார்த்து வருந்தி, ஜீப் போன்ற ஒரு வாகனத்தை வடிவமைத்துள்ளான். அதுவும் எப்படி? ஓட்டை உடைசல், பழைய இரும்பு, அட்டைகளை வைத்தே. அட!  ரங்கேஷின் நண்பன் கமலேஷ். இவரது அப்பா பழைய இரும்பு வியாபாரி. இவரது கடையிலிருந்தே ஸ்டியரிங், பிரேக் இன்ன பிற வஸ்துக்களை எடுத்து கார்பரேட்டர் பொருத்தி வண்டி தயாரித்து ரங்கேஷும் கமலேஷும் ஜாலம் புரிந்துள்ளனர்.- சிறு இரும்பும் புல் தூக்க உதவும் என்பது நிரூபனமானது.

கோவை மஹா ஸ்ரீ. தானியங்கி மருந்து மெஷினைக் கண்டுபிடித்துள்ளார். ஆம் நண்பர்களே. குக்கிராமங்களில் இன்றும் நெடுந்தூரம் நடந்து சென்று மருந்து வாங்கும் சூழலைப் பார்த்த மகாவின் மெகா கண்டுபிடிப் பேமருந்து மெஷின். செயற்கை நுண்ணறிவு துணையோடு வடிவமைத்துள்ளார். சளி, இருமல், தலைவலி, வயிற்றுபோக்கு போன்ற உபாதைகளுக்கு மருந்து உண்டு. 1,2,3 என பட்டியலிட்ட திரையில் உங்கள் தேவையை அழுத்தினால் போதும் மருந்து மட்டுமல்ல எப்படி உட்கொள்ளவேண்டுமென அழகு தமிழில் அறிவுரையும் வரும் இந்த நவீன ஏ.டி.எம் இயந்திரத்தில்.

பிள்ளைகள் எவ்வளவு தொலைநோக்குடன் சமுதாய வளர்ச்சிக்காக யோசிக்கிறார்கள் அல்லவா? மனதைத் தொட்ட மற்றொரு குழந்தை ரேயான். கேரளாவில் மூன்றாம் வகுப்பு படிக்கும் குட்டிப் பையன். வயநாட்டில் ராணுவத்தின் மீட்புப் பணியைப் பார்த்து பிரமித்துப் போன ரேயான் ராணுவத்திற்கு தன் கைப்பட கடிதம் எழுதியுள்ளான்.

அதில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் உங்களைப் பார்த்து பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். வீடியோவில் பார்த்தேன்…பாலம் கட்டும் பணியில் வெறும் பிஸ்கட் மட்டும் சாப்பிட்டுவிட்டு வேலை செய்கிறீர்கள். பெரியவனானதும் நானும் உங்களைப்போல் ராணுவத்தில் சேர்ந்து என் தாய்நாட்டைக் காப்பேன் என எழுதியுள்ளான். இதைவிடவா ஒரு பாராட்டும் பதக்கமும் வேண்டும் வீரர்களுக்கு! இங்கே குறிப்பிட்ட குழந்தைகள் போல் விளையும் பயிர்கள் நிறைய உண்டு; நல்ல பயிர்களை நீருற்றி வளர்ப்போம் வேரூன்றி வளர்வது நிச்சயம்.