பாரதத்தின் விண்வெளித் திட்டங்கள் குறித்த ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக கூறி, கடந்த 1994ம் ஆண்டு கேரள காவல்துறையால் நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டார். பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட அவர், எந்த ஆதாரமும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டதால் விடுவிக்கப்பட்டார். அவருக்கு நிவாரண நிதி வழங்க கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில், இஸ்ரோவில் உளவு பார்த்த வழக்கில் சிலரை திட்டமிட்டு சிக்க வைத்தது தெரிய வந்தது. இந்லையில் நம்பி நாராயணனை பொய்யாக சிக்க வைத்ததாக விசாரணை அதிகாரியான குஜராத் முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி. ஸ்ரீகுமார், கேரளாவை சேர்ந்த இரண்டு முன்னாள் அதிகாரிகளான விஜயன், தம்பி துர்காதத், ஓய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரி ஜெயபிரகாஷ் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவர்களுக்கு கேரள உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ மனு தாக்கல் செய்தது. பின்பு உச்சநீதிமன்றம் இவர்களுக்கான முன் ஜாமீனை ரத்து செய்வதாக அறிவித்ததுடன் இந்த முன் ஜாமீன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் 4 வாரங்களுக்கு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தது. இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று கேரள உயர் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என நம்பி நாராயணன் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 1994ம் ஆண்டு இஸ்ரோ உளவு வழக்கில் நம்பி நாராயணனை கைது செய்தது சட்டத்துக்கு புறம்பானது. அதுமட்டுமல்லாமல் அந்த வழக்கே பொய்யானது என சி.பி.ஐ தரப்பில் கேரள நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்னாள் கேரள டி.ஜி.பி ஸ்ரீகுமார் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் சி.பி.ஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இப்போது விசாரிக்கப்படும் சதிகாரர்கள், அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏவுடன் இணைந்து பாரதத்தின் விண்வெளித் திட்டங்களைத் தடுத்து நிறுத்துவதாக ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் தனது புத்தகங்களில் குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.