நமது ரபேல் போர் விமானம் ஏவிய முதல் அஸ்திரம் பூஜை

”என் கிச்சனுக்குள் நுழைந்து நான் என்ன சமைக்க வேண்டும், சாப்பிட வேண்டும் என தீர்மானிக்க நீ யார்?” என்று ‘மாட்டுக்கறி ஆதரவாளர்கள்’ கேள்வி கேட்பார்கள்!
‘என் பூஜை அறைக்குள் நுழைந்து எந்த சாமியை எப்படி பூஜை செய்ய வேண்டும் என எனக்கு கட்டளை இட நீ யார்’ என்று நம்மை கேட்க வைத்து விட்டார்கள் காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும். அந்த கதை தான் ரஃபேல் போர் விமானத்துக்கு சக்கரங்களில் எலுமிச்சம் பழம் வைத்து, விமானத்துக்கு தேங்காய் உடைத்து சூடம் காண்பித்து மிகப்பெரிய தேச துரோக குற்றமான ‘ஓம்’ வரைந்து பூஜை செய்து பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், பிரான்ஸ் நாட்டிலிருந்து டெலிவரி எடுத்து வந்த கதை.
இந்த விமான பூஜையின் விமர்சனத்தை நாம் அலசு முன் அதன் அடி நாதமான ‘ஆயுத பூஜை’ வரலாற்றைக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். எங்கப்பன், தாத்தன், கொள்ளுத் தாத்தனுக்கு முன்பே 1000 தலைமுறைகளுக்கு மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ஆயுத பூஜை.
பாண்டவர்கள் பதின்மூன்று ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த தங்கள் ஆயுதங்களை வன்னி மரத்தில் இருந்து எடுத்து ஆயுத பூஜை செய்து போரில் இறங்கினார்கள்.
புல் பூண்டுகளையும் தெய்வமாக வணங்குவது ஹிந்து வாழ்வியல். இதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகிறோம். நேற்று பெய்த மழையில் ராத்திரி முளைத்த காளான்கள் ஓட்டுப் பிச்சைக்காக நம் மகிமைகள், பெருமைகளை மறந்து திரிகின்றன.
அதன் வெளிப்பாடுதான் ரஃபேல் ஆயுத பூஜை செய்யலாமா என்ற அதுகளின் கேள்வி. உயிரினங்களை தெய்வமாகப் போற்றுவது மட்டுமல்ல ஹிந்துப் பண்பாடு. உயிரற்ற என்று சொல்லப்படும் ஆயுதங்கள் மெஷின்கள், தொழில் உபகரணங்கள், கலப்பை, மண்வெட்டி இவைகளோடு நாம் பயன்படுத்தும் வாகனங்களையும் நாம் வணங்குகிறோம், ஆராதிக்கிறோம், பூஜிக்கிறோம். காரணம் ஆயுதங்களுக்கும் வாகனங்களுக்கும் உயிர் இருப்பதாக நாம் நம்புகிறோம். அதற்கான எ.கா. சொல்கிறேன்.
என்னுடைய காரை வெளியூருக்கு எடுத்துச் செல்வதற்கு முன் நான் அதை முழுவதுமாக கழுவி சுத்தம் செய்து ‘நல்ல முறையில், பாதுகாப்பாக சென்று திரும்பி வரவேண்டும் உன் உதவி வேண்டும்’ எனச் சொல்லி அதை தட்டிக் கொடுத்து எடுத்துச் சொல்வேன். பத்து ஆண்டுகளாக என்னிடமுள்ள இந்தக் கார் இதுவரை ரோட்டில் பழுதடைந்து நின்றது இல்லை. இதற்கு முன் பத்து ஆண்டுகளுக்கு மேலாக என்னிடமிருந்த கார் இப்படித்தான் ‘நட்பாக’ என்னிடம் இருந்தது. ஊரிலிருந்து வீடு திரும்பியதும் அதற்கு ‘நன்றி’ சொல்ல நான் தவறியது இல்லை. இதுமாதிரியே என் கம்பெனியில் உள்ள இயந்திரங்களுக்கும்.
நம் நாட்டில் போரில் ஈடுபட்டிக்கும் நமது இன்றைய ஜவானில் இருந்து மகாபாரத, ராமாயண போர் வீரர்கள் வரை ஆயுதங்கள் பிரயோகிக்கும் முன் அதை வணங்கியது மரபு.
அதைத்தான் முதல் ரஃபேல் போர் விமானத்தை டெலிவரி எடுக்கச் சென்ற ராஜ்நாத் சிங்கும் செய்தார். இது நம் நாட்டின் மரபு, பண்பு, கலாச்சாரம். இதற்கு விளக்கம் சொல்லவோ இதை மாற்றிக் கொள்ளவோ அவசியமில்லை. அரசுகள் வரும், போகும். ஆட்சிகள் மாறும். ஆனாலும் அம்மாவும், அப்பாவும், ஆண்டவனும் மாறுவதில்லை.
காங்கிரஸ் கட்சி இன்று அந்நியரின் தலைமையில் இருக்கிறது. அதனால் அதனுடைய தலையிலும் அந்நியம் தான் குடிபுகுந்து இருக்கும். அதனால் அதன் செய்தித் தொடர்பாளர்கள் சந்தீப் தீட்சித்தும் அல்கா லம்பாவும் உளறிக்கொட்டியிருப்பது ஆச்சரியம் இல்லை.
அதனுடைய இன்னொரு பகுத்தறிவு பல்பு சமீரா, விமானத்தின் டயரில் வைத்த எலுமிச்சம் பழம் பாதுகாக்கும் என்றால் விமானத்திற்கு பதில் எலுமிச்சம்பழத்தை வாங்கி வரலாமே என பிதற்றியிருக்கிறது.
துர்கா பூஜையை மேற்கு வங்கத்திலும் ஓணம் பண்டிகையை, கிருஷ்ண ஜெயந்தியை கேரளத்திலும் கம்யூனிஸ்டுகள் கொண்டாடத் துவங்கிவிட்டார்கள். காரணம் மக்களை அரசுடன் கனெக்ட் பண்ணுவது இதுதான் என்பதை பெரும் தோல்விக்குப் பின் புரிந்துகொண்டு விட்டார்கள். மத்தியப் பிரதேசம், கேரளா, குஜராத் இங்கெல்லாம் பிராமண வேடமும் பக்தன் வேடமும் போட்ட பிறகும் நாடு முழுவதும் தோல்வியடைந்த விரக்தியில் இருந்து காங்கிரஸ் இன்னும் மீளவில்லை. சிலர் எவ்வளவு அடிபட்டாலும் பாடம் கற்றுக் கொள்வதில்லை காங்கிரசும் அப்படித்தான்.