நக்சலிஸத்துக்கு முற்றுப்புள்ளி
பஸ்தார் மார்க்கமாக ‘விடுதலை’
வன நிலங்களையெல்லாம் மாவோயிஸ்டுகள் படிப்படியாக ஆக்கிரமித்து விட்டார்கள். வன நிலப்பகுதிகளில் உண்மையான உரிமையாளர்கள் பழங்குடியினர். இந்த வனவாசிகளை பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தி தங்களின் இறுக்கமான கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்ட மாவோயிஸ்டுகள் காட்டு தர்பார் நடத்தி வந்தார்கள். பஸ்தார் மாவோயிஸ்டுகளின் கோட்டையாக கருதப்பட்டு வந்தது. இப்போது அங்கு இறுதி யுத்தம் நடைபெற்று வருகிறது. வெகு விரைவில் மாவோயிஸ்டுகளின் கோட்டை முற்றிலுமாக தகர்ப்படும். கொட்டம் அடியோடு ஒடுக்கப்படும்.
காட்டுப் பகுதிகளை மாவோயிஸ்டுகள் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் எப்படி கொண்டு வந்தார்கள் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இதை உள்வாங்கிக் கொண்டால்தான் மாவோயிஸ்டுகளை ஒழிக்க வேண்டியது ஏன் என்ற கேள்விக்கு உண்மையான, தெளிவான, துல்லியமான பதில் கிடைக்கும். முதலாவதாக, வங்காளத்தில் உள்ள நக்சல்பார் என்ற இடத்தில் இந்த சிவப்பு இயக்கம் தொடங்கியது. தொடக்கத்தில் இது தெபஹா இயக்கம் என்று குறிப்பிடப்பட்டது. நாளடைவில் மக்கள் யுத்தக் குழு, மாவோயிஸ்ட், கம்யூனிஸ்ட் மையம், சி.பி.ஐ (மாவோயிஸ்ட்) என பல்வேறு பெயர்களில் மாவோயிஸ்டுகள் இயங்கத் தொடங்கி விட்டார்கள். குழுக்கள் பிரிந்திருந்தாலும் இலக்கு ஒன்றுதான். வன வளத்தைச் சுரண்ட வேண்டும். வனவாசிகளை பகடைக் காய்களாகப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட வேண்டும். தங்களது பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும் என்பதிலேயே ‘சிவப்பு பயங்கரவாதிகள்’ குறியாக இருந்தார்கள்.
ஏழை, எளிய மக்களை, தாழ்த்தப்பட்ட மக்களை உயர்த்தப் போவதாகச் சொல்லிக் கொண்டு அவர்களைத் தொடர்ந்து அறியாமை இருட்டிலேயே வைத்துக் கொண்டிருக்க முயற்சி மேற்கொண்டவர்கள்தான் இந்த ‘சிவப்பு பயங்கரவாதிகள்’. அரசியல் சாசன சிற்பி டாக்டர் அம்பேத்கர், மாவோயிஸ்டுகளின் அபாயம் குறித்து பல தசாப்தங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்துள்ளார். இது இப்போதும் பொருத்தமாகவே உள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் பல உயர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் மாவோயிஸ்டுகளால் ஈர்க்கப்பட்டார்கள். ஐதராபாத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் மாவோயிஸ்டுகளின் மையமாகவே மாற்றப்பட்டது. திருப்பதி முதல் பசுபதி வரையிலான சிவப்புத் தாழ்வாரப் பகுதிகளில் உள்ள படித்த, நடுத்தர வகுப்பைச் சேர்ந்த, உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மாவோயிஸத்தால் மெஸ்மரிசம் செய்யப்பட்டார்கள். புரட்சி என்ற பொய்யான பிம்பத்தை மாவோயிஸ்டுகள் கட்டமைத்தார்கள். அது உண்மையான விடுதலை அல்ல. போலியான விடுதலை.
1969ம் ஆண்டிலேயே ஆதி நக்சலிஸம் முடிவுக்கு வந்து விட்டது. மத்தியிலும், மேற்கு வங்காளத்திலும் இருந்த காங்கிரஸ் அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. இதற்கு மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும் மறைமுகமாக உதவினார்கள். மாவோயிஸ்டுகள் அற்ற பாரதத்தை உருவாக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா இதை நடைமுறைப்படுத்தி வருகிறார். துப்பாக்கி முனையில் பணத்தை வசூலிக்கும் கொள்ளைக்காரர்களைப் போல நக்சலிஸத்தை ஆயுதமாகப் பிரயோகித்து கரன்ஸி கட்டுகளை கொத்தாக அள்ளிக் கொண்டிருந்தவர்கள் தான் மாவோயிஸ்டுகள்.
பழங்குடியினர், பெண்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரையும் மாவோயிஸ்டுகள் வஞ்சித்தார்கள். வன வளத்தை சூறையாடினர். பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் துடைத்தெறிப்பட்டு விட்டனர். மஹாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள பாஜக அரசு மத்தியில் உள்ள பாஜக அரசுடன் ஒருங்கிணைந்து மாவோயிஸ்டுகள் வேட்டையை நடத்தி வருகின்றன.
மாவோயிஸ்டுகளின் கோட்பாடு நம் மரபுக்கு முற்றிலும் புறம்பானது. சீனாவின் தலைவரான மாவோவை வழிகாட்டியாகவும், ஆசானாகவும் ஏற்றுக் கொண்டு செயல்பட்டு வந்தவர்கள் தான் மாவோயிஸ்டுகள். அவர்களுக்கும் தேசபக்திக்கும் துளி அளவு கூட தொடர்பு கிடையாது. அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக, பண்பாட்டு ரீதியாக மாவோயிஸ்டுகள் வேரறுக்கப்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயம். இதை பிரதமர் மோடி சரியான கோணத்தில் புரிந்து கொண்டதால்தான் மாவோயிஸ்டுகள் வேட்டையை அவர் துரிதப்படுத்தினார்.
மாவோயிஸ்டுகளுக்கு எதிரான இந்த யுத்தம் காட்டில் மட்டுமே நடக்கிறது என்று கருதக்கூடாது. இந்த சமர் ஆயுதங்களால் மட்டுமே நடத்தப்படுகிறது என்று எண்ணக்கூடாது. இது உண்மையான சித்தாந்தப் போராகும். அதர்மம் வீழ்த்தப்பட வேண்டும். தர்மம் காக்கப்பட வேண்டும். நக்சலிஸம் அதர்மத்தின் குறியீடு. இதன் விஷப்பிடியிலிருந்து வனவாசிகளை விடுதலை செய்வதே தர்மத்தைக் காக்கும் நடவடிக்கையாகும்.
கட்டுரையாளர்: ஆசிரியர், ஆர்கனைசர் ஆங்கில வார இதழ்
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி