உழவர்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்த பெருவிழா தை பொங்கல். ஆடிபட்டத்தில் விதைக்கப்படும் காய்கறிகள், கிழங்குகள், தானியங்கள், மலர்கள் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் அறுவடையாகும் மாதம் தை மாதம்தான். எனவே தை மாதம் பிறக்கும் நாளை இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக மக்கள் வணங்கி வழிபடுகின்றனர். இது பாரதத்தின் மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி என்று வணங்கப்படுகிறது. உலகம் முழுவதும் விரவி இருக்கும் தமிழர்கள் கொண்டாடும் இவ்விழாவின் உள்ளே உயிர்ப்புடன் நமது இயற்கை வழிபாடு பொதிந்துள்ளதை காணலாம். ஜாதி, மத, பொருளாதார பேதமின்றி அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தை பொங்கல் பண்டிகை முன்னணியில் நிற்கிறது.
தை பொங்கல் நாளன்று மட்டும் இன்றி அதன் முந்தைய நாளான போகி பண்டிகை, பொங்கலின் மறுநாளான மாட்டுப் பொங்கல், அதன் மறுநாளான காணும் பொங்கல் என்று பண்டிகையின் நான்கு நாட்களுமே உழவர்களுடன் பின்னிப்பிணைந்த நாட்கள் என்று சொன்னால் மிகையாகாது. வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றி சுத்தப்படுத்தி, வெள்ளையடித்து பொங்கல் பண்டிகைக்கு உழவர்கள் தயாராகும் நாள் போகி.
அறுவடை செய்த புது நெல்லை கொண்டு, புதுப் பானை, புது அடுப்பில் சூரியனை பார்த்து பொங்கல் வைப்பார்கள். இந்த பானையில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட மஞ்சள், இஞ்சி கொத்துகள் கட்டப்பட்டிருக்கும். அறுவடை செய்யப்பட்ட செடி, கொடிகளின் காய்கறி வகைகள் மற்றும் கிழங்குகளை கொண்டு கூட்டு சமைக்கப்பட்டு அது சூரியனுக்கு படைக்கப்பட்டு வணங்கப்படும். சூரியனுக்கு படைக்கப்படும் பொங்கலின்போது கரும்புக்கும் முக்கிய இடமுண்டு. இயற்கையாக திறந்தவெளியில் படையலிட்டு சூரியன் மட்டுமின்றி, காற்று, ஆகாயம், மண்,நீர் உள்ளிட்ட ஐம்பூதங்களுக்கும் நன்றி கூறும் விழாவாக இது உள்ளது.
சங்க இலக்கியங்களில் தை: தை மாத நீராடல், தை பொங்கல் பற்றிய குறிப்புகளை பற்றிச் சொல்ல வேண்டுமானால் நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு என்று சங்க இலக்கியங்களின் பெயர் நீளும். “தைஇத் திங்கள் தண்கயம் படியும்” மற்றும் “தண்ணீர்த் தைஇ நின்ற பொழுதே” என்று நற்றிணையிலும் ( 80 மற்றும் 124ம் பாடல்கள்), “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகையிலும், (196வது பாடல்), “தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று புறநானூற்றிலும் (70வது பாடல் ), “தையினீ ராடிய தவந்தலைப் படுவயோ” என்று கலித்தொகையிலும் கானப்படும் கவிகளிலிருந்து சங்ககாலம் முதலே தைப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டதை அறியலாம்.
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்
ஆர். கே