தேர்தல் செலவுக்கு நிதி திரட்டும் காங். வேட்பாளர் கன்னையா குமார்: பிஹாரில் சொந்த கிராமத்தில் புதிய வீடு

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவையின் தலைவராக இருந்தவர் கன்னையா குமார். புரட்சிகரமாகப் பேசி, தேசவிரோத வழக்கில் கைது செய்யப்பட்டதால் அப்போது பிரபலம் அடைந்தார். தனது கல்விக்கு பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில்இணைந்த அவர், 2019 மக்களவைத் தேர்தலில், பிஹாரின் பேகுசராய் தொகுதியில் போட்டியிட்டார். அவரது சொந்த கிராமம் அமைந்துள்ள இத்தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் போட்டியிட்டார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது கன்னையாவின் மசனத்பூர் கிராமத்தில் சர்வதேச மற்றும் தேசிய பத்திரிகையாளர்கள் குவிந்தனர். பழைய ஓடுகளால் ஆன கூரையுடன் பாழடைந்த நிலையில் இருக்கும் கன்னையாவின் பூர்வீக வீடு,வீட்டில் மண் அடுப்புடன் கூடிய சமையல் அறை, அதில் கன்னையாவின் தாய் ரொட்டி சுடும் காட்சி போன்ற பதிவுகள் அப்போது வெளியாகின.

அந்த தேர்தலில் கன்னையா, 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவிடம் தோல்வி அடைந்தார். பின்னர், காங்கிரஸில் இணைந்த கன்னையா, தற்போதைய மக்களவைத் தேர்தலில் வடகிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சிக்கு இந்தமுறை நிதிப் பற்றாகுறை கடுமையாக உள்ளது. இதனால் தனதுடெல்லி பிரச்சார செலவுக்கு நிதிஅளிக்கும்படி கன்னையா மே15-ல் வேண்டுகோள் விடுத்திருந்தார். இது வெளியான மறுநிமிடம் முதல் கன்னையாவுக்கு பல்வேறு தரப்பினர் நிதி அளிக்கத் தொடங்கினர். ரூ.75 லட்சம் திரட்டும் நோக்கத்தில் இருந்த அவருக்கு அதில் சுமார் 70 சதவீதம் வசூலாகி விட்டதாகத் தெரிகிறது. அதேசமயம், பிஹார் கிராமத்தில் கன்னையாவின் நிலை, 2019 நிலைக்கு நேர்மாறாக மாறி வருகிறது. அவர் தனது பூர்வீக வீட்டுக்கு அருகில் புதிதாக இரண்டு அடுக்கு மாடி வீடு கட்டி வருகிறார்.

இதுகுறித்து பிஹாரில் கன்னையாவின் பக்கத்து வீட்டினர் கூறும்போது, ‘தனது பழைய வீட்டை ஒட்டிஇரட்டை மாடி வீட்டை கன்னையா கட்டியுள்ளார். இன்னும் பெயிண்ட் அடிக்கப்படாத அந்த வீட்டுக்கு முன் நிற்கும் புதிய எஸ்யுவி வாகனமும், கன்னையாவுக்கு சொந்தமானது. தேர்தலில் போட்டியிட்டால் எப்படி பணம் வரும் என்பது எல்லோரும் அறிந்ததுதான்” என்றனர். கன்னையா குமாருக்கு எதிராகபோட்டியிடும் பாஜக எம்.பி.மனோஜ் திவாரி பிஹாரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.