தேசியத்தின் ஊற்றுக்கண் தமிழகமே

பாரத சுதந்திரத்தின் பொன்விழாவின் போது சுதந்திரப் போராட்டத்தின் அனைத்து மாவீரர்களுக்கும் தியாகிகளுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் 1997ல் எனது ‘ஸ்வர்ண ஜெயந்தி ரத யாத்திரை’ அமைந்தது. இது உண்மையிலேயே எனக்கு தேசபக்தி யாத்திரையானது. எனது வாழ்க்கையில் நான் நடத்திய பல யாத்திரைகளில் மிக நெடியது இந்த 59 நாள் யாத்திரை.

பாரத சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு மகத்தானது. வ.உ.சி பிறந்த தூத்துக்குடி துறைமுக நகருக்குச் சென்றேன். திலகரின் தீவிர பக்தரான அவரது புகழ் பரவியதால், பாரதத்தின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், அப்போது பாட்னாவில் இளம் வழக்கறிஞராக இருந்தவர், வ.உ.சி.யின் கிராமமான ஓட்டப்பிடாரம் வரை சென்று அவர் மீதான வழக்கை எதிர்த்துப் போராட முன்வந்தார்.

செங்கோட்டையில் அந்த ஊரின் பெருமைக்குரிய மகன் வீரவாஞ்சி சிலைக்கு மாலை அணிவித்தேன். மாவட்ட பிரிட்டிஷ் சப்-கலெக்டர் வ.உ.சி.க்கு ஆயுள் தண்டனை விதித்ததைக் கேள்விப்பட்ட வாஞ்சி அந்த அதிகாரியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று அநீதிக்குப் பழிவாங்கினார்.

அடுத்து எட்டயபுரம். தேசியக்கவி சுப்பிரமணிய பாரதி பிறந்த இடம். அவரது படைப்புகள் செயற்கையான திராவிட-ஆரியப் பிரிவினைக்கு அழுத்தமான மறுப்பாகவும், அதே நேரத்தில், ஹிந்து கலாச்சாரத்தின் மிக உயர்ந்த கொள்கைகளின் உருவகமாகவும் உள்ளன. “முப்பது கோடி முகமுடையாள் எனில் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்” என பாரத மாதாவை போற்றும் பாரதியின் இந்த எழுச்சியூட்டும் வரிகளை மேற்கோள் காட்டி பாரதத்தின் அடிப்படை ஒற்றுமையை உறுதிப்படுத்தும் சமீபத்திய தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறுகிறது:

“பாரதம் மாநிலங்களின் கூட்டமைப்பு அல்ல. இது ஒரே தேசியம், பாரதியம். எனவே, ஒவ்வொரு பாரதியருக்கும் பாரதத்தில் எங்கும் செல்ல உரிமையும், எங்கும் குடியேறவும், எங்கு வேண்டுமானாலும் நிம்மதியாகத் தொழில் செய்யவும் உரிமை உண்டு. நாம் ஒரே தேசம், ஒருவரையொருவர் மதிக்க வேண்டும்.” உண்மையில், எனது சுயசரிதையில் பாரதம் ஒரே தேசம் என்ற கருப்பொருளை உருவாக்க முயற்சி செய்திருக்கிறேன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் கோட்டைக்கு சென்றது எனக்கு மிகவும் உற்சாகமான அனுபவம். பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆரம்பகால தியாகிகளில் ஒருவர். அவர் கும்பினிக்கு எதிராக கடுமையான கொரில்லா போரை நடத்தினார்.

யாத்திரையின் போது காங்கிரஸ் வரலாற்றில் மிகவும் மதிக்கப்படும் காமராஜரின் பிறந்த ஊரான விருதுநகருக்கும் சென்றேன். அவர் நேர்மை, சுயமரியாதை, தேசத்திற்கான அர்ப்பணிப்பு சேவை ஆகியவற்றின் உருவகம். காங்கிரஸ் தலைவர் ஒருவரை பாஜக தலைவர் கௌரவித்தது தமிழக ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

1970-ல் கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை நினைவிடத்தை நிறுவியதில் ஏக்நாத் ரானடேவின் சக ஊழியராக நான் ஆற்றிய பங்கையும் குறிப்பிட வேண்டும். புத்தகத்தில் ஒரு முழு அத்தியாயமும் என் வாழ்வின் இந்த பெருமைக்குரிய அத்தியாயத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

(‘என் தேசம் என் வாழ்க்கை’ நூல் வெளியீட்டு விழாவில் அத்வானிஜி ஆற்றிய சிறப்புரையிலிருந்து)