துவரம் பருப்பு விளைச்சல் அதிகரித்தும் விலை குறையாதது ஏன்

துவரம் பருப்பு விளைச்சல் அதிகரித்தாலும், தீபாவளி பண்டிகை நெருங்குவதால் அதன் விலை குறைப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. உ.பி., – ம.பி., பீஹார், குஜராத், கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், துவரம் பருப்பு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பாண்டு துவக்கத்தில் விளைச்சல் குறைந்தது. இதனால், படிப்படியாக விலை அதிகரித்து கிலோ, 175 ரூபாயாக உயர்ந்துள்ளது.

   

தற்போது, துவரம் பருப்பு விளைச்சல் அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு உற்பத்தி , 35 லட்சம் டன். நடப்பு ஆண்டு உற்பத்தி, 40 லட்சம் டன்னை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், நாட்டின் ஆண்டு தேவை, 45 லட்சம் டன்னாக உள்ளதால், வெளிநாடுகளில் இருந்து துவரம் பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது. விளைச்சல் அதிகரிப்பால், மொத்த விற்பனையாளர்களின் கிடங்குகளில் துவரம் பருப்பு இருப்பு அதிகரித்துள்ளது. ஆனாலும், தீபாவளி பண்டிகையின் போது, மளிகை சீட்டு பண்டுகளில் துவரம்பருப்பு வழங்கப்படும். இதனால், தேவை அதிகரித்துள்ளதால், துவரம் பருப்பு விலை குறைப்பை சில்லரை வினியோகஸ்தர்கள், பருப்பு விற்பனை நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன.

தற்போதுள்ள நிலவரப்படி கிலோவிற்கு, 25 ரூபாய் வரை விலையை குறைக்கலாம். எனவே, துவரம் பருப்பு விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். நாடு முழுவதும் பண்டிகை காலம் துவங்கியுள்ளது. இந்த கால கட்டத்தில், தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள், அலுவலகங்கள், கடைகளில், தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்படும். பண்டிகைகள் நெருங்கும் நிலையில், இனிப்புகள் தயாரிப்பு துவங்கி உள்ளது. இதன் எதிரொலியாக சர்க்கரை விலை கிலோவிற்கு, 3 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் கிலோ சர்க்கரை, 39 ரூபாயில் இருந்து, 42 ரூபாயாக உயர்ந்துள்ளது.