தீண்டாமை அற்ற தில்லைச்சிற்றம்பலம்!

பாரத நாடு பல்வேறு வகைகளில் சிறப்பு மிக்கதாய், உலகின் ஞானகுருவாகத் திகழ்ந்தாலும், தீண்டாமை எனும் கொடிய நோய் பல காலமாகப் பரவிய நாடு என்ற இழிப்பெயரும் உள்ளது. எல்லோருக்கும் பொதுவான திருக்கோயில்களில் கூட, இன்னமும் சிலவற்றில் தீண்டாமை கறை படிகின்றது என்பது துயரமான செய்தி. மகாத்மா காந்தி ‘சுதந்திரப் போராட்டத்திற்கு மட்டுமல்லாமல், தீண்டாமையை திருக்கோயில்களிலும் ஒழிக்க வேண்டுமென்ற சமூகப் போராட்டத்திலும் ஈடுபட்டார்.

சைவர்களுக்குக் கோயில் என்றால் சிதம்பரத்திலுள்ள ஆடவல்லான் திருக்கோயிலே. வெண்குஷ்டம் எனும் நோயினால் அவதியுற்ற சிம்மவர்மன் எனும் அரசன், தில்லைவனத்திற்கு வந்து, பதஞ்சலி, வியாக்கிரபாத முனிவர்களின் ஆசியுடன், சிவகங்கை எனும் திருக்குளத்தில் நீராடி உடல்நோய் நீங்கி, தங்கம் போல் மினுமினுப்பு ஏற்பட்டு, ஸ்ரீமூலநாதரை வழிபட்டு, நடராஜப் பெருமான் அருளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிதம்பரம் நடராஜப் பெருமான் கோயிலைக் கட்டி, ஊருக்கு வெளியே கொற்றவன் குடி எனும் கிராமத்தில் தங்கி, ஆடவல்லானை வழிபட்டு, இரணியவர்மன் எனப் போற்றப்பட்டான்.

இப்படிப்பட்டஉலகின் இதயக் கோயிலாக உள்ள தில்லைச் சிற்றம்பலத்தில், தீண்டாமை கிடையாது என்ற பல வரலாற்றுச் சிறப்புக்கள் உள்ளன.

திருநீலகண்டத்துக் குயவனார்

‘திருநீலகண்டத்துக்குயவனார்க்கு அடியேன்’ என சுந்தரரால் போற்றப்பட்ட திருநீலகண்டர்  எனும் பெரும் சிவபக்தர் தாழ்த்தப்பட்டகுலத்தைச் அவர் இளமையில் காமவேட்கையின் காரணமாக ஒரு விலைமாதிடம் கூடி இன்புற்றது கண்டு பெருங்கோபமுற்ற அவர் மனைவி ‘திருநீலகண்டத்தின் மீது ஆணை, எம்மைத் தொடாதீர்’ என்று சொன்னதால் அப்படியே நடந்தார். தம்பதிகளுக்கு வயது முதிர்ந்துவிட்டது.

இவர்கள் பிணக்கு தீர, ஒரு சிவயோகியார் வடிவில் சிவபெருமான் ஒரு திருவோட்டைதான் கேட்கும் வரை பாதுகாப்பாக வைக்கும்படி திருநீலகண்டரிடம் கொடுத்துவிட்டு, திருவோட்டை மறையச் செய்தார். பல நாட்கள் கழித்து திருநீலகண்டரிடம் வந்து திருவோட்டைக் கேட்க, அது காணாமல் போய்விட்டது என்று திருநீலகண்டர் கண்ணீர் விட்டுக்கதற, ‘மனைவியின் கரம் பிடித்து சத்தியம் செய்’ என சிவயோகி கூற ‘அது இயலாது’ என்று மீண்டும் வருந்துகிறார் திரு நீலகண்டர்.

இவ்வழக்கை தில்லைவாழ் அந்தணர் சபையில் கூறி நியாயம் கேட்போம்’ என சிவயோகியார், தில்லைக் கோயிலுக்குள் உள்ள ஐந்து சபைகளில் ஒன்றான பேரம்பலம் எனும் தில்லைவாழ் சபைக்கு அழைத்துச் சென்றார்.

தில்லைவாழ் அந்தணர்கள் கூறியபடி கழியின் ஒரு முனையை, திருநீலகண்டர் பிடிக்க, மறு முனையை அவர் மனைவி பிடிக்க, இருவரும் குளத்தில் மூழ்கி இளமை பெற்றவரலாறு நமக்குத் தெரியும்.

ஆக, திருநீலகண்டத்துக் குயவனார் எனும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரும் தில்லை சிற்றம்பலம் சென்றுவணங்கியவர் என்பது தெளிவாகின்றது.

அரிசன ஆலய நுழைவினை முதலில் செய்த புரட்சியாளர் திருஞான சம்பந்தர்.

சீர்காழியில் அந்தணர் குலத்தில் பிறந்த திருஞான சம்பந்தருக்கு ‘நான்கு வயதிருக்கும் போது திருஎருக்கத்தம் புலியூரை சேர்ந்த தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவர் மனைவி மதங்க சூளாமணியும் சிவபெருமான் திருவருளால் திருஞான சம்பந்தருடன் இணைந்து பல திருக்கோயில்களுக்குச் சென்று, அவர் பாடிய தேவாரங்களை, யாழில் இசைத்துப் பாடிவந்தார்கள்.

இத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் பக்திப் பரவசத்துடன் இறைவனின் பெருமைகளை சிறப்பு மிக்க யாழில்இசைப்பதின் உயர்நிலை பக்தியை உலகறியச் செய்ய மதுரை ஆலவாயன், அவரை திருகோயிலுக்குள் அழைத்துவரச்செய்து, ‘ஈரமான தரையில் அமர்ந்து வாசிப்பது யாழின் நரம்புகளின் இறுக்கம் ஆகவே சுந்தரப் பலகையை இடுங்கள்’ என ஆணையிட்டார்.

திருவாரூரில் இவர் பக்திப் பரவச யாழிசையைப் பாராட்டி, வடதிசை வழியே திருக்கோயி

லுக்கு வரச்செய்து, வணங்க அருள் செய்தார் ஈசன்.

இப்படிப்பட்ட தம்பதியினருக்கு தம் வீட்டில்அறுசுவை விருந்தளித்து, தங்குவதற்கும் இடமளித்தார் சம்பந்தர். மேலும், திருச்சாத்த மங்கை எனும் தலத்தில் இறைவனை வழிபட இந்த தம்பதியினருடன்சென்றார். ‘அக்னி ஹோத்ரம்’ எனும் முத்தீ வளர்க்கும் அந்தணர் திருநீலநக்கர் வீட்டில் அக்னிஹோத்ர சாலை பக்கத்தில் தம்பதியினர் தங்க இடமளித்தார்.

இப்படிப்பட்ட தம்பதிகளுடன் ஞானசம்பந்தர் சிதம்பரம் நடராஜர்  கோயிலுக்குச் சென்று ஆடவல்லான் சன்னிதியின் முன் ‘கற்றாங்கெரி

ஓம்ப’ எனும் தேவாரப் பாடலைப் பாட, அதைப் பண்ணோடு இசை கலந்து யாழினை மீட்டிப் பாடினார்கள்இத்தம்பதியினர்.

சிதம்பரத்தில் தமிழில் இத் தேவாரம் பாடப் பெற்ற பிறகு தான் மற்ற சைவக் கோயில்களில் தமிழ் வேதங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கப் பெற்றது. இந்நிகழ்ச்சி ஏழாம் நூற்றாண்டில் நடைபெற்றது.

தேவாரப் பண் கிடைத்தக் கதை

ராஜராஜசோழன் திருநாரையூரிலிருந்த நம்பியாண்டர் நம்பிகள், அவ்வூர் பொல்லாப்பிள்ளையார் அருளினால் தில்லைத் திருக்கோயிலில் தேவாரப் பாடல்கள் இருந்த இடத்தை அறிந்துகொண்டான். 1,03,000 தேவாரத் திருப்பதிகமிருப்பனும், செல்லரித்துப் போனதால் 797 திருப்பதிகத்தொகையே, அதாவது 8250 பாடல்களே கிடைத்தன.

மனமொடிந்து போனான் மன்னன்.

இருப்பினும் ‘சைவநெறித் தலைவரெனும் மூவர் பாடல் வேய்ந்தனபோல் மண்மூடச்செய்தே -ஈண்டு வேண்டுவெனவைத்தோம்’ என்ற அசரீரி கேட்டதும் தெளிந்தான்.

இத்தெய்வப் பாடல்களுக்கு எந்தப் பண்ணில் இசைப்பது என திகைத்த மன்னனுக்கு, ‘திரு எருக்கத்பூலியூரின் திருநீலகண்டத்துப் பாணர், அவர் மனைவி மதங்கசூளாமணி வழித்தோன்ற

லாக இசையும், யாழும் வல்ல பாணர் குலத்தில் தோன்றிய சிறுமியுள்ளாள்’ என மீண்டும் அசரீரியால் வழிகாட்டினான் சிவபெருமான்.

அப்பெண்ணை சகலமரியாதையுடன் பல்லக்

கில் அமரச் செய்து, மன்னனும் தில்லைவாழ் சைவஅடியார்களும் நடராஜப் பெருமான் சந்நிதிமுன் அமரச் செய்து பாடும்படி பணித்தனர்.

அப்பெண் தேவாரப் பாடல்களை ஒவ்வொன்

றாகப் பண்ணோடு இசை கலந்து பாட, அதை ஆமோதிக்கும் வகையில், சிற்றம்பலவன் தனது காற்சிலம்பு ஒலியை உண்டாக்கினான்.

இன்று நாம் தேவாரப் பாடல்களைப் பாடுவ

தற்குக்காரணம், தாழ்த்தப்பட்ட, பாணர் குலத்

தைச் சேர்ந்த பெண் தில்லைச் சிற்றம்பலத்தில் பாடியதே ஆகும்.

திருநாளைப் போவார்

திருப்புன்கூர் சிவலோக நாதனையே எக்காலமும் வணங்கி வந்த ஆதனூரைச் சேர்ந்த நந்தனார்தில்லைச் சிற்றம்பலவனை வணங்க முடிவெடுத்து, பல காலம் கழித்துவந்ததால் திருநாளைப் போவார் எனும் பெயரைப் பெற்றார். இருப்பினும் எண்ணி வருந்தி, தில்லை நகரை பலமுறை வலம் வந்தார். நந்தனார் கனவிலும், தில்லைவாழ் அந்தணர்களிடமும் நந்தனை தில்லைக் கோயிலுக்கு அழைத்து வரும்படி கட்டளையிட்டான் கூத்த பிரான்.

இறைவன் கட்டளைப்படி தீக்குழிஅமைத்து (தற்போது தீக்குழியான ஓமகுண்டமிருந்த இடம் ஓமக்குளமாக மாறிவிட்டது), அதில் புகச் செய்தனர். அத்தீயில் மூழ்கிய நந்தனார், முப்புரிநூலுடன் புண்ணிய முனிவர் வடிவில் வெளிவந்தார். அவரைத்தொழுத மூவாயிரம்  தில்லைவாழ் அந்தணர்களும், சிவத்தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் அம்பலவாணன் சந்நிதிக்கு சகல மரியாதைகளுடன் அழைத்துச் செல்ல, அவர் இறைவனைத் தொழுது, அவனுடன் இரண்டறக் கலந்தார். நந்தனார் காலம் ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

சேந்தனார்

பட்டினத்தாரின் கணக்குப் பிள்ளையாக இருந்து, பட்டினத்தார் துறவறம் பூண்டபின் தில்லைக்கு வந்து, விறகு வெட்டி, கிடைத்த சொற்ப வருமானத்தையும் சிவனடியார்க்கு அமுதளித்தல், அவர்களுக்குத் தொண்டு செய்தல் என சிவநெறி வாழ்க்கை வாழ்ந்த சேந்தனாரின் உண்மையான சிவ பக்தியை உலகறியச் செய்யும் வண்ணம், வயதான சிவனடியாராக தில்லை வாணனே வந்து சேந்தனார் தந்த எளிய களியமுதை உண்டான். மறுநாள் அம்பலவாணன் சிற்றம்பலக் கதவு திறக்கப்பட்டதும் நடராஜ மூர்த்தியின் வாயில் களியமுது இருப்பதை கண்டு திகைத்தனர் தில்லை தீட்சிதர்கள்.

அசரீரியாக ‘சேந்தன் களி எனக்குத்தித்தித்தது’ என்று ஆடவல்லான் கூற, சேந்தனாரின் பக்திப்பெருமை பரவியது. அரசனும், அனைவரும் மகிழ்ந்தனர்.

மார்கழித் திருவாதிரைத் திருவிழாவில் மழை பெய்தமையால் திருத்தேர் சேற்றிலழுந்தி ஓடாது நின்றபோது, ‘சேந்தா! தேர் நடக்கப் பல்லாண்டு பாடுக’ என்ற அசரீரி அனைவரும் கேட்கத் தோன்றியது. தேரிழுக்கும் அடியார் கூட்டத்தி

லிருந்த சேந்தனார் ‘மன்னுகதில்லை வளர்க நம் பத்தர்கள்’ என்றுதொடங்கும் திருப்பல்லாண்டுத் திருப்பதிகம் பாடியதும், யாருமே வடம்பிடிக்காமல் தேர் நிலைக்கு வந்தது.

இந்தச் சேந்தனார் நடராஜப் பெருமானுடன் ஐக்கியமானார்.இன்றும் நாம் திருவாதிரைத் திருநாளன்று களியமுது செய்வதற்குக்காரணம் சேந்தனார் அளித்த களியமுதினால்தான்.

இவர் எக்குலம் தெரியுமா?இவரை நம்பியாண்டார் நம்பிகள், ‘பண்டைப் பறைச் சேந்தன்’ எனக் குறிப்படுகின்றார். அதாவது தாழ்த்தப்பட்ட பறையர் குலத்தவர் என்பதை நம்பியாண்டார் நம்பி பதிவு செய்துள்ளார்.

பெத்தான் சாம்பான்

நடராஜப் பெருமான் மீது பெருங்காதல் கொண்ட தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த பெத்தான் சாம்பான் எனும் விறகு வெட்டிக்கு, அருள்புரிந்து முக்தி கொடுக்க விழைந்த கருணா மூர்த்தியான தில்லைச் சிற்றம்பலவன், ஒரு கைச்சீட்டை பெத்தான் சாம்பானிடம் கொடுத்து கொற்றவன் குடியில் வாழும் தில்லைவாழ் அந்தணரும் சந்தானக் குரவர்களில் கடைசிக் குரவருமான உமாபதி சிவாச்சாரியாரிடம் அளிக்கச் சொல்கிறான். அக்கைச் சீட்டில் என்ன எழுதப்பட்டிருந்தது?

‘அடியார்க்கு எளியன் சிற்றம்பலவன் கொற்றங்

குடியார்க்கு எழுதிய கைச்சீட்டு- படியின் மிசைப்

பெத்தான் சாம்பானுக்கு பேத மறத்தீக்கை செய்து

முத்திகொடுக்க முறை’

இந்த ஓலையைப் படித்து அதிசயித்த உமாபதி சிவம் எனும் தில்லைவாழ் அந்தணர், தில்லைச் சிற்றம்பலவன் ஆணைப்படி, சிவலோகப் பதவி கிடைக்கச் செய்தார் என்பது வரலாறு. உமாபதி சிவம் காலம் 12ம் நூற்றாண்டு எனக் கூறப்படுகின்றது.

ஆக, தீண்டாமையே இல்லாதது தில்லைச் சிற்றம்பலம். தீண்டாமை கருதாத தில்லைவாழ் அந்தணர்களும் எப்போதும் போற்றதலுக்குரியவர்கள், ஆழ்ந்த பக்திக்குரியவர்கள் என்பது தெளிவு.