‘மானே நீ நென்னலை’ என்று தொடங்கும் இப்பாடலில் “மனிதர் சொல்லும் வார்த்தைகளை விட செய்யும் செயல் உன்னதமாக இருக்க வேண்டும், சொல்லியபடி செயலைக் கட்டாயம் செய்துவிட வேண்டும். இல்லையேல் பிறர் கேலிக்கு ஆளாக நேரிடும்” என்கிற தத்துவத்தை தோழிக்குச் சொல்வதுபோல இப்பாசுரம் அமைந்துள்ளது. “மான் போன்ற நடையை உடையவளே! நேற்று நீ எங்களிடம், உங்களை நானே வந்து அதிகாலையில் எழுப்புவேன் என்றாய். ஆனால், இன்றோ நாங்களே வந்து உன்னை எழுப்பும்படியாகி விட்டது. உன் சொல் போன திசை எங்கே? சொன்னபடிச் செய்யவில்லையே என்று கொஞ்சமாவது வெட்கப்பட்டாயா? உனக்கு இன்னும் விடியவில்லையா? வானவர்களும், பூமியிலுள்ளோரும், பிற உலகில் உள்ளவர்களும் அறிய முடியாத தன்மையை உடைய சிவபெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து பாடி வந்த எங்களுக்கு இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறாய். அவனை நினைத்து உடலும் உள்ளமும் உருகாமல் இருப்பது உனக்கு மட்டுமே பொருந்தும். எனவே உடனே நாம் அனைவரும் பயன்பெறும் விதத்தில் நம் தலைவனைப் புகழ்ந்து பாட எழுந்து வா,” என்கின்றனர்.
ஆர் கிருஷ்ணமூர்த்தி