திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகம், பெரும்பாலும் வெளிநாட்டு, ‘பிராண்டட்’ நிறுவனங்களுக்காக நடக்கிறது. அதாவது, இந்தியாவில் இருக்கும் மூலப்பொருட்களை பயன்படுத்தி, நேர்த்தியாக ஆடை வடிவமைத்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். வெளிநாடுகளில் இயங்கும் பிரபல பிராண்டட் நிறுவனங்கள், திருப்பூரில் உற்பத்தியான ஆடைகளை வாங்கி, தங்களின் ‘பிராண்டட்’ ஆடைகளாக லேபிள் ஒட்டி மாற்றி, அவற்றை, மதிப்பு கூட்டிய பொருளாக அதிக லாபம் ஈட்டுகின்றனர்.
சில நேரங்களில், ஆன்லைன் வாயிலாக வெளிநாட்டு பிராண்டட் ஆடைகளை வாங்கும் போது, திருப்பூரில் உற்பத்தியான டி-சர்ட், வெளிநாடு சென்று, அங்கிருந்து பிராண்டட் டி-சர்ட்டாக மாறி, இரண்டு மடங்கு மதிப்பு உயர்ந்த பொருளாக நமக்கே வருகிறது. இதில், பிராண்ட் என்ற ஒரு பெயர் மட்டுமே அதிகப்படியான லாபத்தை ஈட்டிவிடுகிறது. திருப்பூர் முன்னணி பிராண்டட் நிறுவனங்கள், நாடு முழுதும் வர்த்தகம் செய்து வருகின்றன. மாறாக, ஏற்றுமதி நிறுவனங்கள், மற்ற பிராண்டுகளுக்காக உற்பத்தி செய்கின்றன. இப்போக்கை மாற்ற, பசுமை சார் உற்பத்தியில் சிறந்து விளங்கும் திருப்பூருக்கென, பிரத்யேக பிராண்டுகள் உருவாக்கப்பட வேண்டும்.
‘ஜீரோ டிஸ்சார்ஜ்’ சாயக்கழிவு சுத்திகரிப்பு, மரம் வளர்ப்பு, காற்றாலை மின் உற்பத்தி, சோலார் மின் உற்பத்தி, பனியன் கழிவுகளில் இருந்து நுால் தயாரிப்பது, ‘பெட்’ பாட்டில்களில் இருந்து நுாலிழை ஆடைகள் தயாரிப்பது என, திருப்பூருக்கு பல்வேறு பெருமைகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் முன்னிலைப்படுத்தி, சர்வதேச சந்தைகளில், திருப்பூருக்கென பிரத்யேக பிராண்ட்களை உருவாக்கி, வெற்றிகரமான வர்த்தக அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்பதே, அரசு அதிகாரிகளின் எதிர்பார்ப்பு. அடுத்தகட்ட நகர்வுக்கு ஒட்டுமொத்த திருப்பூரும் முயற்சிக்க வேண்டும். அப்படியான முயற்சியின் வெளிப்பாடாக, திருப்பூருக்கென பிரத்யேக பிராண்டுகளை உருவாக்கி, புதிய வளர்ச்சியை நிலைநிறுத்த வேண்டும்!