புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் அருகில் உள்ள திருப்புனவாசல் சுற்றியுள்ள 40 கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கல்வி கற்பதற்காக புனித அருளானந்தர் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று வந்தனர். பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களின் வறுமையைப் பயன்படுத்தி மதமாற்றம் செய்து வந்தனர். பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கிறிஸ்தவர்களே. மாணவர்களை மட்டுமல்லாமல் சுற்றியுள்ள கிராமங்களிலும் மதம் மாற்றம் செய்து வந்தனர்.
கிறிஸ்தவர்களின் மதமாற்ற மோசடியைக் கவனித்த திருப்புனவாசலைச் சேர்ந்த பெரியோர்கள் தாங்களே ஒரு ஹிந்து பள்ளிக்கூடத்தை துவங்க முடிவெடுத்தனர். இது விஷயமாக திருச்சி மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த எம்.எஸ். வெங்கட்ரங்கனை (எம்.எஸ்.வி) சந்தித்து ஆலோசனை கேட்டனர். திருச்சி திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ணா தபோவனம் மூலம் ஒரு உயர்நிலைப் பள்ளியை ஆரம்பிப்பது என முடிவு செய்து சுவாமிஜியை சந்தித்தனர்.
சுவாமிஜியின் வழிகாட்டுதலின் பேரில் பள்ளியைத் துவக்கும் பொறுப்பை எம்.எஸ்.வி. ஏற்றுக் கொண்டார். திருப்புனவாசலில் ஒரு இடம் முடிவு செய்யப்பட்டது. சுற்றியுள்ள கிராமங்களில் ஊர்க்கூட்டம் போட்டு, பொது மக்களே பள்ளிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முன்வந்தனர். 1985ல் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிக் கூடம் துவங்கியது. அதன்பின் படிப்படியாக 10, 11, 12 வகுப்புகள் துவங்கப்பட்டன. மாணவர்களுக்கு தனியாக ஒரு விடுதியும் பெண்களுக்காக தனியாக ஒரு விடுதியும் துவங்கப்பட்டது.
வருடம் தோறும் நெல் அறுவடை செய்யும் நேரத்தில் பொதுமக்கள் அவரவர் வசதிக்குத் தகுந்தபடி நெல்லை நன்கொடையாக கொடுத்தனர். முதல் ஆண்டே 400 மூட்டை நெல் வந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். 8 ஆசிரியர்களுடன் பள்ளி துவங்க அனுமதி கொடுத்தார். பள்ளிக்கூடத்திற்கு சொந்தமாக இடம் வாங்கப்பட்டடு. பள்ளிக்கான வகுப்பறைகள், விடுதிகள் என புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன.
ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி என்று பெயர் சூட்டப்பட்டது. இன்று பள்ளிக்கூடம் மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது.
வெங்கட்ரங்கன் அவர்கள் மாணவர்களிடம் மிகுந்த அன்பு வைத்திருந்தார். ஏழை, எளிய மாணவர்களிடம் சரியான உடை இல்லை என்றால் அவர்களுக்கு உடை வாங்கிக் கொடுப்பார். வறுமையின் காரணமாக சில மாணவர்கள் தலைக்கு எண்ணெய் வைக்காமல் பரட்டைத் தலையுடன் வருவர். அவர்களுக்கு எண்ணெய் கொடுத்து ஒழுங்காக தலை சீவச் சொல்வார். ஜாதி வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் காயத்ரி மந்திரம் கற்றுக் கொடுத்தார்.
இன்றைக்கு திருப்புனவாசலைச் சுற்றியுள்ள கிராமங்களில் மதமாற்றம் குறைக்கப்பட்டிருக்கிறது. வெங்கட்ரங்கன் போன்ற தன்னலமற்ற அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் ஊருக்கு ஒருவர் முன்வந்தால் ஹிந்து கல்வி நிறுவனங்கள் ஏராளமாக பல்கி பெருகும்.