கிருஷ்ணானுபவம் கோரி, நோன்பு நோற்கும் பெண்டிர் முன்னே எழுந்து “செய்யாதன செய்யோம்” என்கின்ற உறுதிமொழியுடன் பாடி, அவற்றை நடைமுறைப்படுத்தும் முகமாக மற்றவர்களையும் எழுப்பி எல்லோருமாகச் சேர்ந்து ஸ்ரீ நந்தகோபர் திருமாளிகையைச் சேர்கிறார்கள். அத்திருமாளிகை காப்பவனிடம் கதவைத் திறந்துவிட வேண்டுகோளாக அமைகிறது இப்பாசுரம்.
“பயம் மிக்க இந்த தேசத்தில் இருட்டு மிகுந்த இந்த நடுநிசியில் வந்து கதவைத் திறக்க அழைக்கிறவர்கள் யார்?’என திருமாளிகை காப்பவன் வினவுகிறான். பெண்டிரோ, “பயத்தைத் தவிர்க்கக் கூடியவன் இடத்தே பயப்படத் தேவையில்லைங்காணும். நாங்கள் ஆயர் சிறுமியர்கள்” என்று தைரியத்துடன் பகர்கின்றனர்.
அகமும் புறமும் தூயவர்களாக பெருமானைத் துயிலெழுப்பும் பொருட்டு பாடுவதற்காக வந்திருப்பதாகக் கூறுகிறார்கள் தோழிகள். “ஆயர்பாடி ஆய்ச்சியரும் கோவலர்களும் ஆச்சரியப்படுமளவுக்கு அசாத்யச் செயல்களைச் செய்கிறான் மாயன், மணிவண்ணன்,” என அவனைப் புகழ்கிறார்கள். திருமாளிகையின் காப்பாகத் திகழும் அழகிய மணிக்கதவின் தாழ்ப்பாளைத் திறக்குமாறு, அலங்கரிக்கப் பெற்ற வாசலைக் காக்கின்றவனிடம் வேண்டுகோள் விடுக்கிறார்கள் இத்தோழிகள்.