திருநெல்வேலி தொகுதியின் திமுக எம்.பி. ஞானதிரவியம். இவர், திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டலத்தின்கீழ் இயங்கும் பாளையங்கோட்டை தூய யோவான் பள்ளி தாளாளராகவும், திருமண்டல உயர்கல்வி நிலைக் குழுசெயலாளராகவும் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சிலமாதங்களாக திருமண்டல திருச்சபை பேராயர் பர்னபாஸ் – ஞானதிரவியம் ஆகிய இரு தரப்பினர் இடையே கோஷ்டி பூசல் இருந்துவருகிறது. சமீபத்தில் நடந்த திருமண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் சக நிர்வாகிகளை ஞானதிரவியம் தரக்குறைவாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கிடையே, திருச்சபையின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனத்தில் மாணவிகளுக்கு ஒரு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான விசாரணைக் கூட்டத்தின்போது, சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக பேராயர் பர்னபாஸ் செயல்படுவதாக தெரிவித்து, அவருடன் ஞானதிரவியம் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகளும் வெளியாகின.
இந்த சூழலில், பள்ளி தாளாளர் உட்பட திருச்சபையின் அனைத்து நிர்வாக பொறுப்புகளில் இருந்தும் ஞானதிரவியத்தை பேராயர்நீக்கினார். இதற்கு எதிர்ப்புதெரிவித்து, பாளையங்கோட்டையில் உள்ள திருச்சபை அலுவலகத்தில் பேராயர் ஆதரவாளர்களுடன் ஞானதிரவியம் ஆதரவாளர்கள் கடந்த சில நாட்களாக மோதலில் ஈடுபட்டு வந்தனர். திருச்சபை பொறுப்புகளுக்கு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஞானதிரவியத்தை நீக்க பேராயருக்கு அதிகாரம் இல்லை என்று அவர்கள் கூறி வருகின்றனர். திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டலத்தின்கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பதில் பேராயர் பர்னபாஸ் – லே செயலாளர் ஜெயசிங் இடையே மோதல் நீடிக்கிறது. இதில் ஜெயசிங் தலைமையிலான அணியில் எம்.பி. ஞானதிரவியம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளனர். இதனால், கடந்த சில மாதங்களாக இருதரப்பு ஆதரவாளர்களும் மோதிக்கொள்ளும் சம்பவங்களும் நடந்தன.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாளையங்கோட்டையில் உள்ள திருமண்டல அலுவலகத்தில் மேலாளர் அறையை ஒரு தரப்பினர் பூட்டினர். அதை திறக்க மற்றொரு தரப்பினர் சென்றபோது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் உருவானது. இந்நிலையில், பேராயருக்கு ஆதரவாக செயல்படும் திருநெல்வேலி மாவட்டம் இட்டேரி பகுதியைசேர்ந்த மதபோதகர் காட்பிரே நோபிள் (58), நேற்று முன்தினம் திருமண்டல திருச்சபை அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அங்கு அறைகளை பூட்டி வைத்திருப்பதால் பணிகள் முடங்கியுள்ளதாகவும், அறைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அங்கிருந்தவர்களிடம் கூறியுள்ளார். அப்போது அங்கு திரண்டிருந்த எம்.பி. ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் அவரை சூழ்ந்து தாக்கினர். ஓட ஓட விரட்டி அவர்கள் தாக்கியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இத்தாக்குதலில் காயமடைந்த காட்பிரே நோபிள், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பாளையங்கோட்டை போலீஸில் அவர் அளித்த புகாரின்பேரில் ஞானதிரவியம் எம்.பி.,பாளையங்கோட்டை பெருமாள்புரத்தை சேர்ந்த ஜான் (45), திருமண்டல மேலாளர் மனோகர் உள்ளிட்ட 33 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 147, 294(பி), 323, 502(2), 109 ஆகிய 5 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்ஜாமீன் கோரி திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் ஞானதிரவியம் நேற்றுமாலை மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில், திமுக எம்.பி.ஞானதிரவியம் தனது செயல்பாடு குறித்து கட்சி தலைமையிடம் 7 நாட்களுக்குள் விளக்கம் தராவிட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.