தனது ஆளுகைக்குட்பட்ட பகுதியைக் காப்பாற்றிக் கொள்வதற்குத் தான் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டான் திப்பு. இரண்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு இடையே, கொச்சையாகச் சொன்னால் இரு வந்தேறிகளுக்கு இடையே நடந்த சண்டை விடுதலைப் போர் ஆகாது. அந்நியன் ஒருவனது இழப்பை வீர மரணம் எனவும் சொல்லலாகாது.
தேசத்தைக் காக்கப் போராடிய விடுதலை வீரர்கள் வரிசையில் திப்புவுக்கு இடம் கிடையாது. சீன வெடிமருந்து கொண்டு ஏவப்பட்ட திப்புவின் ஏவுகணைகள் சிறந்தவை என்று சொன்னால், நம் நாட்டின் அஸ்திர சஸ்திர வித்தைகளை என்னவென்று சொல்வது?
ஒன்று மட்டும் உண்மை. அவன் பயங்கரமானவன், பார்வைக்கு மட்டுமன்றி மனத்தளவிலும் கொடூரமானவன். பிறரை இம்சித்து ரசித்தவன். தேசம் அடிமைப்பட்டிருந்த காலத்தில் தென் பாரதத்தில் ஹிந்துக்களுக்கு இழைத்த அநீதிகள் மூலம் மறக்க முடியாத வடுவை விட்டுச் சென்ற கொடூரன்.
உண்மையை சமரசம் செய்து எழுதப்பட்ட வரலாற்றுப் பாடத் திட்டங்கள் அவனைப் புகழ்கின்றன. ஆனாலும் கூட, பொது ஜனங்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு முகம் திப்பு சுல்தான்.
மதச் சிறுபான்மையினரைத் தாஜா செய்வது காங்கிரஸுக்குப் புதிதல்ல. ஆனால் இவ்விஷயத்தில் மீண்டும் ஒரு முறை காங்கிரஸ் தன் கயவாளித் தனத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் 8 அன்று தான் பண மதிப்பு நீக்க அறிக்கை வெளிவந்தது. பதுக்கல்காரர்கள் பலருக்கு அந்த அதிர்ச்சி இன்னமும் நீடிப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களுக்கு நவம்பர் 8 கருப்பு தினமாம்.
ஆனால் நம்மில் பலருக்கு ஆண்டாண்டு காலமாக நவம்பர் 10 கருப்பு தினமாக இருக்கிறது.
ஆம், கொடுங்கோலன் திப்பு உடன் தொடர்புடைய நாள் அது. அக்பர் என்ற ஆக்கிரமிப்பாளனைக் கொண்டாடும் கூட்டம் திப்புவைக் கொண்டாடுவதில் ஆச்சரியமில்லை. ஆனால் அவனுக்காக ஒரு நாளை அரசு விழாவாகக் கொண்டாடுவது தான் கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது.
வால்மீகி ஜெயந்தி, கனகதாசர் ஜெயந்தி என பா.ஜ.க அரசு அறிவித்ததற்கு மாற்றாக விதமாக காங்கிரஸ் கையிலெடுத்த ஆயுதம் தான் திப்பு ஜெயந்தி.
கர்நாடகத்தில் கடந்த முறை ஆட்சிக்கு வந்த பின்னர் 2015ம் ஆண்டு முதல் நவம்பர் 10ம் தேதியை அரசு விழாவாகக் கொண்டாடுவது என காங்கிரஸ் முடிவு செய்தது. இரண்டு ஆண்டுகள் கடந்து இது மூன்றாமாண்டு. ஆண்டுதோறும் எதிர்ப்பு வலுக்கிறது. துக்கமும் தான்.
ஏன் நவம்பர் 10?
நவம்பர் 20ல் பிறந்த ஒருவனுக்கு ஏன் நவம்பர் 10ல் விழா எடுக்க வேண்டும் என்ற கேள்வி பலராலும் முன்வைக்கப்படுகிறது. மேல்கோட்டையில் திப்புவால் 700 வைணவர் தூக்கிலிடப்பட்ட நாள் நவம்பர் 10 என்பது இன்னமும் ஐயத்தைத் தூண்டுகிறது.
மதம் மாற மறுத்தவர்களைச் சிரச்சேதம் செய்வது, சிறை பிடிப்பது, சித்திரவதை செய்வது, ஆடவரை முடமாக்குவது, கட்டாயமாக சுன்னத் செய்வது, கன்னியரைக் கவர்வது, பிறன்மனை புணர்வது, வாழ்நாள் அடிமையாக்குவது என எண்ணிலடங்கா கொடுமைக்கு உள்ளானோர் பட்டியல் நீண்டுகொண்டே போகும். மேல்கோட்டை ஐயங்கார்கள், குடகு மலைவாசிகள், லிங்காயத்துகள் ஆகியோர் அவர்களில் குறிப்பிடத் தக்க கன்னடத்துக்காரர்கள். மங்களூர் கிறிஸ்தவர்கள், வயநாடு – மலபார் நாயர்கள், தமிழகத்தின் பொள்ளாச்சி பகுதியிலிருந்து திப்புவின் கொடுமையிலிருந்து தப்ப புலம் பெயந்த எம்.ஜி.ஆரின் மூதாதையர்கள் உள்ளிட்ட தமிழர்களும் அந்தப் பட்டியலில் உண்டு.
‘அப்படி எதுவுமே இல்லை. திப்பு ஒரு மனிதப் புனிதன்’ என சப்பைக்கட்டு கட்டுகிறார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. திப்பு மத நல்லிணக்கம் பேணியவன் என்பது அவரது சரித்திர அறிவு.
தமிழகத்தில் உள்ள மராட்டியர்களை வந்தேறிகள் எனக் கிண்டலடிப்பவர்கள் கூட, திப்புவை மண்ணின் மைந்தனாகப் பார்க்கிறார்கள் என்பது வேடிக்கை.
பெரும்பான்மை ஹிந்துக்களை ஆண்டு கொண்டிருந்த காரணத்தால் சிலரை, சில பிரிவினரைத் திருப்தி செய்யவே மடங்களுக்கும் வெகு சில கோயில்களுக்கும் கொடை அளித்தான் என்பது ஒரு தரப்பு வாதம்.
இது குறித்த உண்மையை அறிய அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. திப்பு எழுதிய கடிதங்கள் சாட்சி. சரித்திர ஆய்வாளர்கள் திப்பு பற்றி எழுதிய குறிப்புகள் கூடுதல் சாட்சி. இணையத்தில் விக்கிபீடியா தளத்திலேயே காணக் கிடைக்கிறது.
வரலாற்று ஆசிரியர்களில் திப்பு திறமையாளன், மதச்சார்பற்றவன், நல்லவன், நாடு போற்ற வாழ்ந்தவன் எனச் சொல்பவர்களும் உண்டு. அவர்களில் அநேகம் பேர் முஸ்லிம்கள். அவர்களை ஒதுக்கிவைத்துவிட்டு, பிறர் சொல்வது என்னவெனப் பார்ப்போம்.
திப்பு திட்டமிட்டு கிறிஸ்தவர்களைக் கருவறுத்ததை ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்கள் தெளிவாகப் பதிவு செய்துள்ளனர். அவ்வாறே ஹிந்துக்கள் மீதான வன்முறையையும் கூட. அவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள்.
திப்பு தப்பு ஒன்றும் செய்யவில்லை. காலத்திற்கேற்றவாறு நடந்து கொண்ட அவன் ஓர் அப்பாவி. அவனே ஹிந்து தர்ம பாதுகாவலன்” என அளந்து விடுபவர்களும் உண்டு. அப்படிச் சொன்ன ஆராய்ச்சியாளர் பெயரைப் பார்த்தால் ஹிந்துவாக இருக்கிறார். அது நம் சமூகத்தின் சாபக்கேடு. ஒரு கொடூரனை, காமாந்தகனை இவ்வளவு உயர்வாகத் தூக்கிப் பிடிக்கிறார்களே அவன் யார் எனத் தேடும்போது திப்பு அழகாக இருக்க மாட்டான் எனத் தெரிந்தது. கரியதோர் உருவத்தைக் காட்டி இது தான் திப்பு எனப் பதிவிட்டிருந்தனர்.
துரத்தியடித்த தமிழகம் :
ஏவுகணை நுட்பத்தை ஏற்றுமதி செய்தவர் எனப் புகழ் பாடுகிறார்களே, அந்த திமிர் கொண்ட திப்புவின் தறிகெட்ட படைகள் கேரளத்தில் கோர தாண்டவம் ஆடிய பின்னர் தமிழகத்தின் கோவைப் பகுதியை வந்தடைந்தன.
ஸ்ரீரங்கப்பட்டண ரங்கநாதரின் தீவிர பக்தன் எனப் புளுகுகிறார்களே, அதே திப்பு காரமடை ரங்கநாதர் கோயிலைத் தனது பீரங்கியால் குறி வைத்தான்.
அந்நேரத்தில் தான் அவனது பார்வை பறி போனதால் கோயிலைத் தகர்க்கும் முயற்சி தவிடுபொடியானது எனச் சொல்கிறார்கள். அது எந்த அளவு உண்மை எனத் தெரியாவிட்டாலும், இன்றும் அந்தக் கல் பீரங்கி கொடூரன் திப்புவின் மதவெறிக்கு சாட்சியாக காரமடையில் காட்சியளிக்கிறது. அங்கிருந்து புறப்பட்ட படை பவானி சாகர் வழியாக சத்தியமங்கலம் வந்தடைந்தது. (சத்திய) வீரநாராயணன் என்ற வீரன் வீறுகொண்டு எழுந்து திப்புவின் படைகளைத் துவம்சம் செய்தான். அவ்வீரனது பெயரால் தான் அந்த ஊர் சத்தியமங்கலம் எனப் பெயர் பெற்றதாகவும் ஒரு சாரார் சொல்கிறார்கள்.
ஒவ்வொரு போரிலும் வெற்றி பெற்ற மன்னனின், வீரனின் நினைவாக நாணயங்கள் வெளியிடப்படுவது பண்டைய கால வழக்கம். சத்திய வீரநாராயணன் வாளேந்திய நாணயங்கள் வெளியாகின. இன்றைய தேதியில் சிலரிடம் மட்டுமே அந்த நாணயங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். அப்பகுதியைச் சார்ந்த ஒரு பிரபல மருத்துவரிடம் அவற்றில் சில நாணயங்களும், வேறு பல அரிய சரித்திர ஆவணங்களும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
வந்த வழியெல்லாம் திப்புவின் படை வீரர்கள் தாங்கள் திருடிய தங்கத்தையும் கொள்ளையடித்த விலையுயர்ந்த பொருட்களையும் கைப்பற்றிய ஆயுதங்களையும் ஆங்காங்கே ஒளித்து வைத்திருந்தனர். திரும்பி வரும்போது எடுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம். ஆனால் திப்புவின் படைகள் வந்த பாதை வேறு. திரும்பிச் சென்ற பாதை வேறு. தமிழகத்தில் ஏற்பட்ட தோல்வி ஒரு காரணமாக இருக்கலாம். கடந்து வந்த பக்கமெல்லாம் வெகுண்டு எழுந்த மக்கள் பழி தீர்க்கக் காத்திருந்தனர் என்பது மற்றொரு காரணமாக இருக்கலாம். தெங்குமரடா என்ற ஊர் சாம்ராஜ்நகர் சென்றடைய குறுக்கு வழி. திப்புவின் எஞ்சியிருந்த படைகள் அவ்வழியாகத் தான் தப்பி ஓடின.
ஆக திப்பு சரித்திரத்தில் இடம் பெறுவான் என்பதில் ஐயமில்லை. எந்த வரிசையில் என்பது மட்டுமே கேள்விக்குறி.
***********************************************************************************************************************************************
செய்தியில் திப்பு
விடுதலை வீரன்… வீர மரணம் அடைந்தான்…” என்று திப்பு சுல்தான் பற்றி கர்நாடகத்தில் தனது விதான்சௌதா உரையில் ஜனாதிபதி குறிப்பிட்டார். ‘ஜனாதிபதியே பாராட்டி விட்டார்’ என காங்கிரஸ் கூத்தாடுகிறது. நீங்கள் எழுதிக் கொடுத்ததைத் தானே படித்தார் என பா.ஜ.க இடித்துக் காட்டுகிறது. பேசுவதற்கு 15 நிமிடம் முன்னதாக மட்டுமே அந்த உரை ஜனாதிபதி வசம் தரப்பட்டதாகத் தகவல். உரைக்குப் பின் ஜனாதிபதி தனது ட்விட்டர் பக்கத்தில் திப்பு பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
திப்புவின் பேரில் நடக்கும் எந்த விழாவுக்கும் தன்னை அழைக்கத் தேவையில்லை என கர்நாடகாவைச் சார்ந்த மத்திய இணையமைச்சர் அனந்தகுமார் சில நாட்களுக்கு முன் அறுதியிட்டுச் சொல்லிவிட்டார். ஆக மொத்தத்தில் சர்ச்சை இன்னும் தொடர்கிறது. ஆனால் சரித்திரத்தை அறிந்தவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்.
***********************************************************************************************************************************************