திக்கு தெரியாமல் சுற்றும் யுரேனஸ்

 

சூரியனைச் சுற்றி வரும் ஒவ்வொரு கோள்களும் ஏதோ ஒரு வகையில் தனித்தன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன. (நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முக்கியத்துவம் கொண்டவை இல்லையா…?) அந்த வகையில் யுரேனஸ் கோள் வேறு ஒரு விதத்தில் தன்னுடைய தனித்தன்மையைக் காட்டுகிறது.

எல்லாக் கோள்களும் சூரியனை சுற்றி வருகின்ற தங்களுடைய சுற்றுப்பாதை தளத்திற்கு ஏறக்குறைய செங்குத்தான திசையில் தன்னைத்தானே சுற்றிக் கொள்கின்றன. அதாவது யுரேனஸ் தவிர மற்றக் கோள்களின் சூரியனை சுற்றி வரும் பாதையும், தன்னைத் தானே சுற்றிக் கொள்கிற பாதையும் செங்குத்தாக இருக்கின்றன. ஆனால் யுரேனஸ் மட்டும் சூரியனை சுற்றி வரும் திசையிலேயே, தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது.

சூரியக் குடும்பத்தில் ஏழாவது கோள் யுரேனஸ். இது மூன்றாவது பெரிய கோள். பாறை மாதிரியான திடக்கோளம் இது. அதன் நடுப்பகுதியின் வெப்பம் 7000 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். நடுப்பகுதிக்கு மேலே உறை பனி, நீராவி, அம்மோனியா போன்ற படிவங்களால் ஆக்கப்பட்டிருக்கிறது.

இந்த மேல் அடுக்கில் மீதேன் இருப்பது இன்னும் ஆச்சரியம். வாய்ப்பு மட்டும் இருந்தால் குழாய் போட்டு ஒட்டுமொத்த மீதேன் வாயுவையும் உறிஞ்சி பூமிக்கு கொண்டுவந்து நம் எரிபொருள் பிரச்சனையைத் தீர்த்துவிடலாம்.

நவீன டெலஸ்கோப்புகளைக் கொண்டு யுரேனஸ் கோளைப் பார்க்கும்போது அதன் விளிம்பு நீலம் கலந்த பச்சை நிறத்தில் காணப்படுகின்றன. இந்த நிறத்திற்கு காரணம் மீதேன் தான். சனிக்கு அடுத்த கோள் யுரேனஸ் என்றாலும், சனிக்கும், யுரேனசுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது. யுரேனசின் மேற்பரப்பில் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் சுழல்காற்று வீசிக்கொண்டே இருப்பதால், மீதேன் அக்கோளின் உயரமாக மேல்பகுதிக்கு பயணம் செய்து கொண்டே இருக்கிறது.

யுரேனசுக்குத் துணையாக 15 துணைக்கோள்கள் சுற்றி வருவதாக கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை மேலும் கூடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்த துணைக்கோள்கள் உறை பனிக்கட்டியாக இருக்கின்றன என்பது நம்மை உறைய வைக்கும் உண்மை.

இந்த உறைபனித் துணைக்கோள்கள் யுரேனசின் வளையங்களுக்கு வெளியே சுற்றி வருகின்றன. இந்த வளையங்களின் செயல்பாடுதான் விஞ்ஞானிகளுக்கு ஆச்சரிய மூட்டுவதாக உள்ளது. யுரேனசை சுற்றிவரும் 11 வளையங்களை இதுவரை கண்டுபிடித்திருக்கிறார்கள். இவை வளை யுரேனசின் சுற்றுப் பாதைக்கு செங்குத்தான சுற்றுப்பாதையில் சுற்றுகின்றன. இந்த வளையங்கள் தான் யுரேனசை வளைத்து வைத்து அதன் செயல்பாட்டை மாற்றி அமைத்து மற்ற கோள்களைப் போல் அல்லாமல் தனித்து சுழல காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

யுரேனஸ் போல, மோசமான வளையங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது தானே நமக்கு நல்லது!