ஆங்கில ஆட்சியில் பாரதத்தில் ஏற்பட்ட வறுமை, பஞ்சம், பட்டினிச் சாவுகளுக்கு காரணம் குறித்து ஆய்வு செய்தார் தாதாபாய் நௌரோஜி. ஆங்கில அரசின் நிதி நிர்வாகத்துக்கும், பாரதத்தின் வறுமைக்கும் காரணமாக பாரதத்தில் ஆங்கிலேயர்கள் நட்த்துவது ஆட்சியல்ல, அது ஒரு பகல் கொள்ளை, பாரதத்தை பொருளாதார வேட்டை நிலமாக பிரிட்டன் மாற்றிவிட்டது. தொடர்ந்து நடந்த பொருளாதார வேட்டையின் காரணமாக நமது அரிய வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. ரத்த நாளங்களை வெட்டி ரத்தத்தை உறிஞ்சி எடுப்பதுபோல நமது வளங்களை, பிரிட்டன் வடித்தெடுத்தது. இதனை‘வடித்தெடுக்கும் கொள்கை’(ட்ரெய்ன் தியரி) என்று புரியவைத்தார் தாதாபாய் நௌரோஜி..
1867ல் அவர் எழுதிய ‘வறுமையும், பாரதத்தில் பிரிட்டிஷ் ஆட்சியும்’ என்ற நூல் பாரதத்திலும் இங்கிலாந்திலும் பெரும் அதிர்வுகளை உண்டாக்கியது. பொருளாதார விடுதலையை அரசியல் விடுதலைக்கு முன்னோடியாக எடுத்துச் சென்றார். 1906ல் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் சுயராஜ்யம் தேசிய இயக்கத்தின் ஒரே லட்சியம் என அறிவித்தார். சுதேசி இயக்கம், அந்நியப் பொருட்களை ஒழித்தல் என்ற இரு புரட்சித் திட்டங்களை தேசிய இயக்கத்தில் முன்வைத்தார். சுதேசி இல்லாது சுயராஜ்யம் இருக்க முடியாது என்பது அவரின் தெளிவான அணுகுமுறை.