தலையங்கம்

80, 000 ஹிந்து மாநாடுகள்!

சங்கத்தின் நூற்றாண்டு நிகழ்ச்சிகள் பல கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. தற்போது ஹிந்து சமுதாய மாநாடு என்ற பெயரில் ஆங்காங்குள்ள பல துறை பெரியோர் உதவியுடன் ஸ்வயம்சேவகர்கள் ஹிந்துக்களை ஓரிடத்தில் சேர்த்து, கலந்துரையாடி, ஒன்றாக உணவருந்தி, ஊரின் பிரச்சினைகளை, உலகின் சவால்களை பற்றி எடுத்துரைத்து வருகிறார்கள். அதாவது  ஒன்றாக செயல்பட ஹிந்துக்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள்;  இது போன்ற  80,000 ஹிந்து மாநாடுகள் நாடு நெடுக நடைபெறுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

நூறு ஆண்டுகளாக ஹிந்து சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் ஒரே பணி, ஸ்வயம்சேவகர்களின் கவனத்தை பரிபூரணமாக ஈர்த்து வந்தது. தற்போது பயிற்சி பெற்ற ஸ்வயம்சேவகர் எண்ணிக்கையும் தன்னம்பிக்கையும் வளர்ந்திருக்கிறது. ஆங்காங்கு ஊர் மக்களை ஹிந்துக்கள் என்ற அடிப்படையில் ஒன்று கூட்டி, சாதி, மாநிலம், மொழி போன்றவை பிரிக்க முடியாதபடி ஹிந்துவாக செயல்பட ஊக்குவிக்கும் ஹிந்து மாநாடு முயற்சி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.இதனால் ஆங்காங்கு விழிப்புணர்வு ஓங்கி வருகிறது.தேசம் ஹிந்து நாடு என்பதால் தேசத்தின் மக்களும் ஹிந்துக்களாக வாழ்வதுடன், ஹிந்துக்களாக ஒன்றுபட்டு செயல்படுவதும் முக்கியம் என்பது உணரப்பட்டு வருகிறது.

                             ராகுல் என்ற வீம்புக்கார மாணவர்

ஒரு உயர்நிலைப்பள்ளி வகுப்பறையை கற்பனை செய்யுங்கள். பாடநேரம் கணிதம். கணித ஆசிரியரும் வந்துவிட்டார். வகுப்பு நடத்தும் போது ஒரு மாணவரிடம், அன்று நடந்த பாடத்தில் கேள்வி கேட்கிறார்; மாணவர் என்ன பதில் சொல்ல வேண்டும்? அன்று நடந்த கணித பாடத்தில் தான் புரிந்து கொண்டதை அல்லது புரியவில்லை என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும்.  அதற்கு பதிலாக வரலாற்றுப் பாடத்தில் வரக்கூடிய மன்னர்கள், போர்கள் பற்றி அந்த மாணவர் சொல்லத் தொடங்குகிறார் என்றால் ஆசிரியர் என்ன சொல்லுவார்? ‘’தம்பி, இது கணித பாடநேரம். வகுப்பில் கவனமாக இரு. உட்கார்’’ என்று காரமாக சொல்வார். மாணவர் வீம்புக்கு தொடர்ந்து வரலாற்றுப் பாடத்தையே பேசுகிறார் என்றால், அந்தக் காலமாக இருந்தால், ஆசிரியர் ஒரு அறை விட்டு வகுப்பறையில் இருந்து வெளியேற்றுவார்.

போன வாரம் தேசத்தின் நாடாளுமன்றம் எப்படி  நடந்தது என்று பார்ப்போம்: என்ன நடக்கிறது என்று கவனம் இல்லாமல் பேசிய மாணவன் போல,  எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் நடந்து கொண்டதை பார்த்து தேசம் அதிர்ந்து போனது. அப்படிப்பட்ட நடத்தைக்கு என்ன நடவடிக்கை பாயும் என்று பலரும் யோசிக்கும் போதே, அரசு நடவடிக்கை ஏதும் கிடையாது என்று அறிவித்திருக்கிறது.  இது புதிராகத்தான் இருக்கிறது.