தலைதூக்கும் இனவெறி

அமெரிக்காவில் ஒருபக்கம் பாரத தேசத்தவர்களின் திறமையை பாராட்டி அவர்களுக்கு உயர் பதவிகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் மற்றொரு பக்கம், இனவெறி மீண்டும் மெல்ல தலைதூக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் மெக்ஸிக அமெரிக்க பெண் ஒருவர், பாரத வம்சாவளியைச் சேர்ந்த 4 பெண்களிடம், ‘இந்தியர்களை பார்த்தாலே எனக்கு வெறுப்பாக இருக்கிறது. இந்தியாவுக்கே திரும்பிச் செல்லுங்கள் என்று திட்டியதுடன் தாக்குதலிலும் ஈடுபட்டார். அதே ஆகஸ்ட் மாத இறுதியில் கிருஷ்ணன் ஜெயராமன் என்பவரை தேஜீந்தர் என்பவர் துஷ்பிரயோகம் செய்தார். போலந்து நாட்டிலும் பாரத வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் ஒருவரிடம், இந்தியர்களுக்கு இங்கு என்ன வேலை. இந்தியாவுக்கே திரும்பிச் செல்லுங்கள் என்று இனரீதியாக துன்புறுத்தி அவமானப்படுத்தினார். இந்த சூழலில் தற்போது அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கே, இந்தியாவுக்கே திரும்பிச் செல்லுங்கள் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரத வம்சாவளியைச் சேர்ந்தவர் பிரமிளா ஜெயபால். சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது வீடு அமெரிக்காவின் சியாட்டிலில் இருக்கிறது. சமீபத்தில் இவரது வீட்டுக்கு வெளியே ஒரு மர்ம நபர் துப்பாக்கியுடன் பிடிபட்டார். இந்த சூழலில், பிரமிளா ஜெயபால் இந்தியாவுக்கே திரும்பச் செல்ல வேண்டும் என்று ஒரு மர்ம நபர் தொலைபேசியில் மிரட்டியதுடன் கீழ்தரமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். வெறுப்பு செய்திகளையும் அனுப்பியுள்ளார். இது தொடர்பான 5 ஆடியோ செய்திகளின் தொகுப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிரமிளா ஜெயபால், “பொதுவாகவே, அரசியல் பிரமுகர்கள் இதுபோன்று தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை வெளியில் காட்ட மாட்டார்கள். ஆனால், வன்முறையை ஏற்க முடியாது என்பதால் இதை நான் இங்கு வெளிப்படுத்த முடிவெடுத்தேன். வன்முறைக்கு அடித்தளமாக இருக்கும், இனவெறி மற்றும் பாலின வெறியை தூண்டும் இதுபோன்ற செய்திகளை ஏற்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.