தமிழ் தென்றல் திரு.வி.க

திருவாரூர் விருத்தாசலம் கல்யாண சுந்தரனார் எனப்படும்  திரு. வி. க அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் துள்ளம்(தண்டலம்) என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியார் – சின்னம்மாவுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார்.

திரு வி க தொடக்கத்தில் தம் தந்தையிடம் கல்வி பயின்றார். பின்னர் சென்னை, ராயப்பேட்டையில் ஆரியன் தொடக்கப் பள்ளி, 1894ல் வெஸ்லி பள்ளியில் பயின்றார். அப்போது அவருக்கு ஒரு காலும் ஒரு கையும் முடங்கின. இதனால் பள்ளிப் படிப்பு சிறிது காலம் தடைப்பட்டது. படிப்பில் நல்ல திறமையுடையவராக விளங்கினார். 1904ம் ஆண்டில் ஆறாம் படிவத் தேர்வு எழுத முடியாமல் போனது. அத்தோடு அவரது பள்ளிப் படிப்பும் முடிந்தது.

1906ம் ஆண்டில் ஸ்பென்சர் தொழிலகம் என்ற ஆங்கில நிறுவனத்தில் கணக்கராகச் சேர்ந்தார். அக்காலத்தில், பால கங்காதர திலகர் போன்றோரின் விடுதலைக் கிளர்ச்சிகளில் ஈடுபாடு கொண்டதனால் அவ்வேலையிலிருந்து விலகினார். 1909ல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார். 1912ல் கமலாம்பிகையை மணம் புரிந்தார். இரண்டு குழந்தைகள் பிறந்தனர். 1918ம் ஆண்டிற்குள் தம் மனைவி, குழந்தைகளை இழந்து மீண்டும் தனியரானார். ராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமை ஆசிரியராகச் சேர்ந்தார். நாட்டு விடுதலைப் போரில்  பங்கேற்பதற்காக அப்பணியில் இருந்தும் விலகினார்.

பின்னர் தேசபக்தன் என்ற பத்திரிகையில் இரண்டரை ஆண்டுகள் ஆசிரியராகப் பணி புரிந்தார். திராவிடன், நவசக்தி போன்ற பத்திரிகைகளிலும் ஆசிரியராக பணி புரிந்துள்ளார். சென்னையில் பல நிறுவனங்களில் தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு, பல நூல்களை எழுதினார். தமிழ் தென்றல் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட திரு வி கல்யாணசுந்தரம் 1952ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி தனது எழுபத்தோராம் வயதில் காலமானார்.