ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் தமிழகத்தில் நிச்சயம் நிறைவேறும், அதனால் தமிழக மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ புதன்கிழமை தெரிவித்தார்.
போரூரில் அமைக்கப்பட்ட சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் 70-ஆவது கிளையைத் திறந்து வைத்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் தமிழகத்தில் நிச்சயம் நிறைவேறும், அதனால் தமிழக மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாது. இந்தியாவிலேயே விலையில்லாமல் அரிசி கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு. தமிழகத்தில் வேறு மாநிலத்தவர்கள் ரேஷன் பொருள்களை வாங்க வேண்டுமெனில், அவர்களின் சொந்த மாநிலத்தின் விதிமுறையின் படிதான் வாங்க முடியும்.
புதிதாக, வேறு மாநிலங்களில் இருந்து ரேஷன் பொருள்களை வாங்குபவரின் ரேஷன் அட்டைகள், ஆன்லைனில் கணக்கெடுத்துக் கொள்ளப்படும். அவை அனைத்தும் மத்தியத் தொகுப்புக்கு அனுப்பப்பட்டு, அவர்களுக்கான அரிசியைப் பெற்றுக் கொடுப்போம். இதனால் தமிழ்நாட்டில் ரேஷன் பொருள்களுக்குத் தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது என்றார்.