டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திஹார் சிறையில் 2ம் நம்பர் அறை

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, ஏப்., 15 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க, சிறப்பு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இதையடுத்து அவர், திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசால் அமல்படுத்தப்பட்ட, மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பின், இந்த கொள்கை ரத்து செய்யப்பட்டது. இந்த ஊழலில் நடந்த சட்ட விரோத பணப் பரிமாற்றம் குறித்து தனியாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறையினர், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, மார்ச் 21ல் கைது செய்தனர்.

அவரை காவலில் எடுத்து விசாரித்து வந்த அமலாக்கத் துறையினர், காவல் முடிவடைந்ததை அடுத்து, டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது, ‘விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஒத்துழைக்கவில்லை. எந்த கேள்வி கேட்டாலும் மழுப்பலாக பதிலளிக்கிறார். சில நாட்கள் கழித்து அவரிடம் மீண்டும் விசாரிக்க வேண்டும்’ என நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்தது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட சிறப்பு நீதிமன்றம், ஏப்., 15 வரை, அரவிந்த் கெஜ்ரிவாலை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. முன்னதாக, மனைவி சுனிதா, அமைச்சர்கள் ஆதிஷி, சவுரப் பரத்வாஜ் ஆகியோரை சந்திக்க, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து, திஹார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, அமலாக்கத் துறை கைது செய்யப்பட்டதை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.