டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி ஆட்சி ஆயுட்காலம், வரும் பிப்.,22ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டார் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா.
தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, டில்லியில் தேர்தல் நடத்துவது தொடர்பாக போலீஸ் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினோம். சட்டசபை தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் திட்டமிட்டுள்ளோம். ஜனவரி 1 ம் தேதி கணக்கின்படி டில்லியில் 1 கோடியே 46 லட்சத்து 92 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
சட்டசபையில் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும். வரும் பிப்ரவரி 8 ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. 13ஆயிரத்து 750 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படும். 90 ஆயிரம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவர்.
வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும். மூத்த குடிமக்களுக்கு வாகன வசதி செய்து கொடுக்கப்படும்.
தேர்தல் அட்டவணை விவரம் :
வேட்பு மனு தாக்கல் ; ஜனவரி -14
வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் ; ஜனவரி -21
வேட்பு மனு பரிசீலனை: ஜனவரி -22
வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள்; ஜனவரி -24
ஓட்டுப்பதிவு ; பிப்-8 ( சனிக்கிழமை)
ஓட்டு எண்ணிக்கை; பிப்-11 (செவ்வாய்க்கிழமை )
கடந்த 2015ல் நடந்த தேர்தலில் ஆம்ஆத்மி- 54 சதவீதம், பா.ஜ.,- 32 சதவீதம், காங்கிரஸ்- 10 சதவீத ஓட்டுக்கள் பெற்றிருந்தன.
இந்த தேர்தலிலும் இந்த கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.