தனது விலை மதிப்பற்ற விக்கெட்டை காங்கிரஸ் கட்சி அநியாயமாக பறிகொடுத்து நிற்கிறது. இதன் பின்னணிதான் என்ன?
‘பிளாஷ்பேக்’
காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவராக, நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வந்த தந்தை மாதவ் ராவ் சிந்தியா 2001-ம் ஆண்டு, செப்டம்பர் 30-ந் தேதி உத்தரபிரதேசத்தில் நடந்த விமான விபத்தில் பரிதாபமாக பலியானதைத் தொடர்ந்துதான் அரசியல் களத்தில் ஆட வந்தார், அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்திலும் படித்த இந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா.
2002-ம் ஆண்டு தந்தையின் குணா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாரதீய ஜனதா வேட்பாளர் தேஷ்ராஜ் சிங் யாதவை 4½ லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறினார்.
2004, 2009, 2014 என அடுத்தடுத்து நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றார்.
2007, 2009, 2012 என 3 முறை மத்திய மந்திரிசபையில் தகவல் தொடர்பு, வர்த்தகம் மற்றும் தொழில், எரிசக்தி துறை ராஜாங்க மந்திரியாக பதவி வகித்து அசத்தினார்.
வந்தது பிரச்சினை
சோனியா காந்தி குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்தார்; ராகுல் காந்திக்கு தோழராக திகழ்ந்தார் ஜோதிர் ஆதித்ய சிந்தியா.
2018-ம் ஆண்டு நவம்பரில் வந்த மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல்தான், ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே பிரச்சினைக்கு முதலில் வழிவகுத்தது.
அந்த மாநிலத்தில், 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்ற துடித்தது காங்கிரஸ் கட்சி. அதற்கு துருப்புச்சீட்டாக பயன்பட்டவர், இதே ஜோதிர் ஆதித்ய சிந்தியாதான்.
காங்கிரஸ் கட்சி, சிவராஜ் சிங் சவுகான் என்ற மாமலையை எதிர்த்து நின்று போராடி, 114 இடங்களில் அபார வெற்றி பெற்றது. பாரதீய ஜனதா கட்சி 109 இடங்களுடன் திருப்தி அடைய நேர்ந்தது.
அந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சியின் ஒரு எம்.எல்.ஏ., பகுஜன் சமாஜ் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்கள், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் ஆதரவு என 121 பேரின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உருவானது.
முதல்-மந்திரி நாற்காலி யாருக்கு? மூத்த தலைவரான கமல்நாத்துக்கா, கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய இளம் தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கா என்ற கேள்வி எழுந்தது.
நீண்ட இழுபறிக்கு பின்னர் மேலிடத்தின் ஆசியால் கமல்நாத், முதல்-மந்திரி நாற்காலியை கைப்பற்றினார். ஜோதிர் ஆதித்ய சிந்தியா சொல்லுகிற நபருக்கு துணை முதல்-மந்திரி பதவியைத் தர காங்கிரஸ் முன் வந்தது. ஆனால் அதிலும் ஒரு கடிவாளத்தை போட்டது காங்கிரஸ். ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆதரவாளர் ஒருவருக்கு துணை முதல்-மந்திரி பதவி கொடுத்தால், கமல்நாத்தும் தனது ஆதரவாளர்களில் ஒருவரை மற்றொரு துணை முதல்-மந்திரியை நியமித்துக்கொள்வார் என கூறப்பட்டது. இதில் அதிருப்தி அடைந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா பின்வாங்கினார். கமல்நாத்துக்கு உள்ளூர திருப்தி.
தண்டனையாய் ஒரு பதவி…
சரி, முதல்-மந்திரி பதவிதான் கிடைக்கவில்லை. மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியையாவது எனக்கு கொடுங்கள் என்று மேலிடத்திடம் மன்றாடிப்பார்த்தார்.
ஆனால் ஆட்சிக்கு கமல்நாத், கட்சிக்கு ஜோதிர் ஆதித்ய சிந்தியா என்று இலக்கணம் வகுக்க காங்கிரஸ் மேலிடம் மறுத்து விட்டது. டூ இன் ஒன் என்பதுபோல இரண்டுமே கமல்நாத்துக்குத்தான் என்று சொல்லி விட்டது.
மாறாக தண்டனை பதவி என்பது போல காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக்கி, கட்சி எங்கே இருக்கிறது என்று தேடிப்பார்க்கிற நிலையில் இருக்கிற உத்தரபிரதேசத்தில் மேற்கு பகுதிக்கு பொறுப்பாளர் ஆக்கப்பட்டார், ஜோதிர் ஆதித்ய சிந்தியா.
2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வந்தது. உரலுக்கு ஒரு புறம் இடி, மத்தளத்துக்கு இரு புறம் இடி என்பதுபோல, ஜோதிர் ஆதித்ய சிந்தியா தான் போட்டியிட்ட குணா தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளர் கிருஷ்ணபால்சிங் யாதவிடம் 1¼ லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
மற்றொரு பக்கம் பிரியங்காவுடன் இணைந்து ஜோதிர் ஆதித்ய சிந்தியா பொறுப்பேற்றிருந்த உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி, சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் மட்டுமே ஆறுதல் வெற்றி பெற்று, மாநிலம் முழுவதும் படுதோல்வியை சந்தித்தது.
இதைத் தொடர்ந்து அவர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியைத் துறந்து, மறுபடியும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை கேட்டு மேலிடத்தை நச்சரித்து வந்தார்.
ஒரு உறையில் ஒரு வாள்தான் இருக்க முடியும். ஆனால் மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் என்ற உறையில் கமல்நாத், திக்விஜய் சிங், ஜோதிர் ஆதித்ய சிந்தியா என்று 3 வாள்கள். இதில் கமல்நாத்தும், திக் விஜய்சிங்கும் கரம் கோர்த்து 3-வது வாளான ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை வீழ்த்த துடித்தனர்.
அதற்கு அவர்களுக்கு அவசியம் இருந்தது.
திக் விஜய் சிங்குக்கு தனது மகன் ஜெய்வர்த்தன் சிங்கையும், கமல்நாத்துக்கு தனது மகன் நகுல் கமல்நாத்தையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அவர்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கித்தர வேண்டும் என்ற தேவை எழுந்தது. இதற்காக ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை ஒழித்துக்கட்ட ஆர்வமுடன் இணைந்து செயல்பட்டனர். வாய்ப்பு வருகிறபோதெல்லாம், அவரை பலவீனப்படுத்துவது என்பதில் கண்ணும், கருத்துமாக இருந்தனர்.
ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்களான 6 மந்திரிகளை கமல்நாத் ஓரங்கட்டினார். எல்லாவற்றையும் பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்தார் ஜோதிர் ஆதித்ய சிந்தியா.
மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 3 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
மாநிலங்களவை எம்.பி. சீட்டும் மறுப்பு
முதல்-மந்திரி பதவி மறுப்பு, மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி மறுப்பு என ஏமாற்றங்களை சந்தித்து வந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கடைசியாக மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு அடிபோட்டார்.
ஒரு இடத்தை மீண்டும் திக்விஜய் சிங்குக்கு தர காங்கிரஸ் மேலிடம் விரும்பியது. இன்னொரு இடத்தை பாரதீய ஜனதா கையகப்படுத்தும். மூன்றாவது இடத்துக்கு மீனாட்சி நடராஜன், அஜய்சிங், தீபக் சக்சேனா ஆகியோரின் பெயர் காங்கிரசில் அடிபட்டது.
இதுவரை பொறுத்து பொறுத்து பார்த்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா “பொறுத்ததுபோதும் பொங்கியெழு” என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.
சோனியா சந்திக்க மறுப்பு
சோனியா காந்தியை 8-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேச நேரம் ஒதுக்கும்படி கேட்டார். ஆனால் சோனியாவை சந்திக்க நேரம் ஒதுக்கித்தரப்படவில்லை. இதற்கு காரணம், கமல்நாத்தும், திக் விஜய் சிங்கும்தான் என்பதை அவர் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
இதையடுத்துத்தான் ஜோதிர் ஆதித்ய சிந்தியா காய்களை நகர்த்த தொடங்கினார். தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் ஒரு அணியை டெல்லிக்கும், மற்றொரு அணியை பெங்களூருவுக்கும் அனுப்பினார். நூலிழையில் தொங்கிக்கொண்டிருந்த கமல்நாத் அரசு கவிழும் ஆபத்து உருவானது.
அப்போதுதான் காங்கிரஸ் கட்சி கண் விழித்தது. திக் விஜய்சிங்கிடம் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவிடம் பேசச்சொன்னது. அவரோ, நான் அவரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அவருக்கு பன்றிக்காய்ச்சலாம் என்று சொல்லி விட்டார்.
இது ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு பெருத்த அவமானமாக போய்விட்டது. அப்போதே அவர் முடிவு எடுத்து விட்டார். தனது பாட்டி விஜயராஜே சிந்தியா, அத்தைமார் வசுந்தரா ராஜே சிந்தியா, யசோதரா ராஜே சிந்தியா வழியில் பாரதீய ஜனதாவில் நடைபோடுவது என்று. உடனே காங்கிரசில் இருந்து விலக ராஜினாமா கடிதமும் எழுதி பாக்கெட்டில் தயாராக வைத்தார்.
ஹோலியில் அதிரடி
அதைத் தொடர்ந்து தான், நாடு ஹோலி பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில், டெல்லியில் ஜோதிர் ஆதித்ய சிந்தியா 10-ந் தேதி காலையில் காரை எடுத்துக்கொண்டு நேராக எண்.6-ஏ, கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள அமித்ஷா வீட்டுக்கு சென்றார்.
எதிர்பார்த்து காத்திருந்தது போல அவரை அமித்ஷா வரவேற்று பேசினார்.
சில நிமிடங்களில் இருவரும் ஒன்றாக, எண். 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்துக்கு சென்றார்கள். அங்கே மும்மூர்த்திகளும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்தினர்.
ராஜினாமா
அதைத் தொடர்ந்துதான் கடந்த 9-ந் தேதி காங்கிரசில் இருந்து விலக முடிவு எடுத்து சோனியா காந்திக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தை பாக்கெட்டில் இருந்து எடுத்து, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரக்க வைத்த கையோடு, தனது உதவியாளர் மூலம் சோனியா காந்தி இல்லத்துக்கு கொடுத்தனுப்பினார், ஜோதிர் ஆதித்ய சிந்தியா.
அதைப் பார்த்தும் சோனியாவின் முகம் சிவந்தது. “டியர் மிசஸ் காந்தி…” என்று அழைத்து ஜோதிர் ஆதித்ய சிந்தியா எழுதிய கடிதம், சோனியாவின் ரத்த அழுத்தத்தை எகிற வைத்தது. உடனே கே.சி.வேணுகோபாலுக்கு தகவல் பறந்தது. கட்சி விரோத நடவடிக்கைக்காக காங்கிரசில் இருந்து ஜோதிர் ஆதித்ய சிந்தியா நீக்கப்பட்டுள்ளதாகவும், சோனியா அதற்கு ஒப்புதல் அளித்து விட்டதாகவும் கே.சி.வேணுகோபால் அறிக்கை வெளியிட்டார்.
22 எம்.எல்.ஏ.க்கள் விலகல்
இன்னொரு புறம், டெல்லியில் இருந்தவாறே காய்களை நகர்த்தி தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேரை ராஜினாமா செய்ய வைத்தார், ஜோதிர் ஆதித்ய சிந்தியா.
பெரும்பான்மையான கமல்நாத் அரசு, கணப்பொழுதில் சிறுபான்மை அரசாக மாற கழுத்துக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது.
ஹோலி பண்டிகையை கொண்டாட லக்னோ சென்றிருக்கும் கவர்னர் லால்ஜி தாண்டன், போபால் திரும்பியதும் கமல்நாத் அரசு கவிழ்ப்பு நடவடிக்கை சூடு பிடிக்கும்.
ஐக்கியம் ஆனார்
இதற்கிடையே ஜோதிர் ஆதித்ய சிந்தியா நேற்று பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் முறைப்படி பாரதீய ஜனதாவில் ஐக்கியம் ஆனார்.
அடுத்த சில நிமிடங்களில், காங்கிரசில் இருந்து அவர் விலகியதற்கு 3 காரணங்களை அடுக்கினார்.
1. காங்கிரஸ் கட்சி உண்மையை ஒப்புக்கொள்வது இல்லை.
2. புதிய தலைமையை ஏற்க அவர்கள் தயாராக இல்லை.
3. அவர்கள் இளம் தலைவர்களை புறக்கணிக்கிறார்கள்.
ஆக, மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட தயாராகி விட்டார் ஜோதிர் ஆதித்ய சிந்தியா. அடுத்து மத்திய மந்திரிசபையில் இடம் காத்திருக்கிறது.
ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டம் தொடங்கி இருக்கிறது.