செஸ் விளையாட்டு எனும் அற்புதம்

செஸ் விளையாட்டு ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னரே பாரதத்தில் விளையாடப்பட்டு வந்த சதுரங்கம் என்னும் விளையாட்டிலிருந்தே வளர்ச்சியடைந்தது என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து. இங்கிருந்து மேற்கே ஐரோப்பாவுக்கும், கிழக்கே கொரியா வரையும் பல வேறுபாடுகளுடன் பரவியது. இது மங்கோலியா வழியாக ரஷ்யாவுக்குப் பரவியது. அங்கே ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விளையாடப்பட்டதாகத் தெரிகிறது.

பாரதத்தில் இருந்து பாரசீகத்துக்குப் பரவிய இவ்விளையாட்டு, பாரசீகத்தை இஸ்லாமியர்கள் கைப்பற்றிய பின்னர் இஸ்லாமிய நாடுகள் பலவற்றிலும் பரவியது. முஸ்லிம்களால் பத்தாம் நூற்றாண்டு அளவில் இது ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டது. பதினோராம் நூற்றாண்டில் செஸ் இங்கிலாந்தை எட்டியது. அங்கே அது கூரியர் முதலிய வேறுபட்ட வடிவங்களாக உருவெடுத்தது.

பல விதமான சதுரங்க விளையாட்டுகளும், அதனுடன் தொடர்புடைய சில விளையாட்டுகளும் உலகமெங்கிலும் விளையாடப்படுகின்றன. சீனாவின் ஷியாங்கி, சப்பானின் ஷோகி, நேபாளத்தின் புத்தி சல் என்பன இவற்றுள் புகழ் வாய்ந்தவை. 13ம் நூற்றாண்டில் காஸ்ட்டில்லின் அல்போன்சோ X, இன் ஆதரவில், செஸ், பாக்கம்மொன், டைஸ் என்னும் விளையாட்டுக்கள் தொடர்பான நூலொன்று எழுதப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டை இருவர் ஆடலாம். ஒவ்வொருவருக்கும் ராஜா (King), ராணி (Queen), யானை (அல்லது) கோட்டை (Rook), மந்திரி (Bishop), குதிரை (Knight), மற்றும் சிப்பாய் (pawn) என்ற பதினாறு காய்கள் இந்த விளையாட்டில் உண்டு. ஒருவர் கறுப்பு நிறக் காய்களையும் மற்றொருவர் வெள்ளை நிறக் காய்களையும் வைத்துக்கொள்ளலாம். ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இவ்விளையாட்டில் பயன்படுகின்றன. விளையாடும் பலகை, 8 வரிசைகளிலும், 8 நிரல்களிலும் (8 x 8) அமைந்த மொத்தமாக 64 கட்டங்களைக் கொண்ட சதுர வடிவமானது. பொதுவாகக் கறுப்பு, வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந்திருக்கும்.

தனது அரசனை பாதுகாத்துக்கொண்டு, எதிரியின் அரசனைப் பிடிப்பதே ஆட்டத்தின் சூட்சமம். எதிரி தனது அரசனை பிடித்துவிடுவதற்கு முன்பு எதிரி அரசனை பிடித்துவிட்டால் வெற்றி கிடைத்துவிடும். விளையாட்டும் முடிவடைந்து விடும்.

இந்த சர்வதேச சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் நடைபெற மத்ஹ்டிய அரசு தேர்நடுத்த இடமான மாமல்லபுரம் பல வரலாற்று சிறப்புமிக்கப் பின்னணிகளைக் கொண்டது. அதனால்தான் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின் பிங்கின் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பாக அமைந்தது. அதேபோல, தற்போது நடந்து வரும் சதுரங்கப் போட்டிகளும் மாமல்லபுரம் கொண்டிருக்கும் வரலாற்று, கலை சிறப்புக்கு மேலும் கட்டியம் கூறப்போகின்றன. பாரதம் கொண்டிருக்கும் தொன்மைமிகு  “வசுதைவ குடும்பகம்” தத்துவத்தின் உண்மை உணர்வும், கலாச்சார பெருமைகளையும் உலகமே அறியப்போகும் வண்ணம் இந்த சர்வேதச  விளையாட்டுக்கள் அமையப்போகின்றன.